நோ வாட்டர்... நோ சாப்பாடு!

பிரகலாத் ஜனி! இவரைப்பற்றி செய்தி வெளியிடாத வடநாட்டு டி.வி, பேப்பரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரொம்பப் பிரபலம். அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா?

பிரகலாத்தின் ஒரிஜினல் பெயர் சுன்ரிவாலா. ஊர் ராஜஸ்தான். ஏழு வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து காட்டில் வாழத் தொடங்கினார். 11 வயதாகும்போது ஆன்மிகத்தில் இறங்கியவர், துர்க்கையை வழிபடத் தொடங்கினார். தானும் சிகப்பு நிற சேலை உடுத்தி, நீளமாக முடி வளர்த்து, ஏகப்பட்ட நகைகளையும் போட்டு துர்க்கை கெட்டப்புக்கு மாறினார். இதனால் எல்லோரும் அவரை மாதாஜி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஆன்மிகத்தில் தீவிரமாக இறங்கியவர் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். தன்னுடைய தியான சக்தியின் மூலம் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்று 1940-ம் வருடம் சவால் விட்டவர் 76 வருடங்களாகத் தொடர்ந்து சாப்பிடாமலேயே இருக்கிறாராம். அடர்ந்த காட்டுப்பகுதில் இருக்கும் ஹெர்மிட் என்ற கோயிலுக்கு அதிகாலை நான்கு மணிக்கு வரும் அவர் நாள் முழுக்க தியானத்திலேயே இருப்பாராம். இப்போ இவருக்கு வயது 86. குஜராத்தில் வாழ்ந்து வருகிறார்.

இவர் சொல்றது உண்மையா இல்லை கதை விடுகிறாரா என்று கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் ஷா என்பவர் அஹமதாபாத்தில் இருக்கும் ஸ்டெர்லிங் மருத்துவமனைக்கு இவரைக் கூட்டிவந்து தனி அறையில் 10 நாட்கள் அடைத்துவைத்து ஆராய்ச்சி செய்தார். இதில் ரத்த டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஸ்கேன் டெஸ்ட் என்று நிறைய டெஸ்ட்களை எடுத்தார். அதுபோக யாருக்கும் தெரியாமல் ஏதாவது சாப்பிடுகிறாரா என்று கண்டுபிடிக்க ரூமைச் சுற்றி சி.சி.டி.வி கேமராவும் மாட்டிவைத்தார். 10 நாட்கள் 24 மணி நேரத் தொடர் கண்காணிப்பில் இருந்தும் பிரகலாத் எமாற்றுகிறார் என்று நிரூபிக்க டாக்டர்களுக்கு ஒரு பாயின்ட் கூடக் கிடைக்கவில்லை. ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் ஹுமானிடிடேரியன் இன்ஷியேடிவ் என்ற அமைப்பின் இயக்குநர் டாக்டர் மைக்கேல் என்பவர் பிரகலாத் சாமியார் ரீல் விடுகிறார் என்று சொல்கிறார். ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்து இல்லாமல் போனா, முதலில் கல்லீரல் செயலிழக்கும், அடுத்து இதயத்துடிப்பு அதிகமாகும், சீக்கிரமே இறந்துபோய் விடுவார்கள். அதனால் இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்கிறார். அமெரிக்க ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் கிளிப்டன் என்பவரும் ஒரு மனிதன் அதிகபட்சம்  20 நாட்களுக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உயிர் வாழ முடியாது என்கிறார். பிரகலாத்தை ஆராய்ச்சி செய்த அஹமதாபாத் டாக்டர்களிடம் இந்த அமெரிக்க டாக்டர்ஸ் கேட்பது ஒன்றுதான். ‘அவர் உங்க முன்னால் சாப்பிடாமல் இருக்கிறது ஓகே. ஆனால் அவர் குளிக்கும்போது பல் விளக்கும்போது பாத்ரூம்ல என்ன செய்கிறார் என்று கண்டுபிடியுங்கள்’ என்கிறார்கள். இந்த அமெரிக்க டாக்டர்ஸ் மட்டும் இல்லை. பகுத்தறிவாளர்களும் இதை நம்பத் தயாராக இல்லை.

எது உண்மைனு தெரியலையே!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick