ஆட்ட நாயகன்!

டந்த முடிந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் மேற்கிந்திய அணியினர் ஆடிய வெற்றி நடனம் ‘சாம்பியன்ஸ்’ எனும் பாப் பாடலில் வரும் நடனம் என்பது தெரியுமா? அதுவும், அந்தப் பாடலை இசையமைத்து, அதில் தோன்றி ஆடிப் பாடியது அதே மேற்கிந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ. அவரைப் பற்றி நாம தெரிஞ்சுக்க இன்னும் நிறைய இருக்கு, அதில் ‘நச்’னு சில பாயின்ட்டுகள்.

பிராவோ பிறந்தது 1983-ம் ஆண்டு ட்ரினிடாட் மற்றும் டொபாகோ தீவில் உள்ள சாண்டா க்ரஸ் எனும் இடத்தில். பிராவோவின் முழுப் பெயர் டுவைன் ஜான் பிராவோ.

பிராவோவுக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளின் மீது அதீத ஆர்வம் இருந்தது. கிரிக்கெட் மட்டுமல்லாது கால்பந்து, கைபந்து, தடகளம் என எல்லா விளையாட்டுகளையும் விரும்பி ஆடுவாராம் பிராவோ.

பிராவோவும், கிரிக்கெட் ஜாம்பவான் பிரெயன் லாராவும் உறவினர்கள். அதே போன்று சக வீரரான டேரன் பிராவோவும் டுவைன் பிராவோவுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்.

தனது 19-ம் வயதில் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ அணிக்காகக் களமிறங்கினார் பிராவோ. அதேபோல் 2004-ம் ஆண்டு தனது 21-வது வயதில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினார்.

பிராவோவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முன்பு பிராவோவின் ஜெர்ஸி எண் 47. பின்னர், அதை 3 ஆக மாற்றிவிட்டார். காரணம், அவரது மகனும், மகளும் பிறந்த தினம் 3. பாசக்கார அப்பா.

பொதுவாகவே, மேற்கிந்திய அணியினர் களத்திலும் கிரிக்கெட்டோடு நடனம், கும்மாளம் என ஜாலியாகத்தான் விளையாடுவார்கள். அதில் பிராவோ ஒரு படி மேலே. முன்னே குறிப்பிட்டது போல தானே இசையமைத்து, பாடி, நடித்து சில பாப் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

பிராவோ நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய செல்லப் பிள்ளை. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 2011-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தார் பிராவோ. சுருக்கமாக பிராவோ சென்னை அணியின் தூண் எனச் சொல்லலாம். வரவிருக்கும் ஐ.பி.எல்லில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடவிருக்கிறார்.

பிராவோ பேட்ஸ்மேனை பந்துவீசி அவுட் செய்துவிட்டாலோ, கேட்ச் பிடித்துவிட்டாலோ நடனம் ஆடுவார். அவர் நடனத்திற்கு நாளடைவில் ரசிகர்கள் பெருக, ‘உலா’ எனும் தமிழ்ப் படத்தில் ‘டல்மேனி டல்மேனி’ எனும் பாடலைப் பாடி, நடனமும் ஆடியிருக்கிறார்.

2010-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே இப்போது விளையாடி வருகிறார்.

2014-ம் ஆண்டு பிராவோ தலைமையில் மேற்கிந்திய அணி கிரிக்கெட் ஆட இந்தியா வந்திருந்தது. அப்போது, மேற்கிந்திய அணிகளின் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சரியான சம்பளம் தரவில்லை என ஆட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து அணியைக் கூட்டிக்கொண்டு நாடு திரும்பிவிட்டார்.

இந்த உலகக்கோப்பையை ஜெயித்த பிறகும் ‘எங்கள் வாரியத்தை விட பி.சி.சி.ஐ-யிடம் கிடைத்த உறுதுணையே அதிகம்’ எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார் பிராவோ. செம தைரியம். பிராவோ... பிராவோ...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick