தூக்கி அடிச்சிடுவோம் பார்த்துக்கங்க!

பாரில் குடித்துவிட்டு அலும்பு செய்யும் ஆட்களை வெளியே தூக்கிப் போடும் பவுன்சர்களிடம் பேச்சுக் கொடுத்ததில்...

‘‘என் பெயர் செந்தில்குமார். மைக் டைசன் மாதிரி வரணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. வீடு முழுக்க அவர் போட்டோவை ஒட்டி வெச்சுருப்பேன். அவர் மாதிரி மாற முயற்சி செய்து அம்மிக்கல்லை எடுத்து ப்ராக்டிஸ் பண்ணிக் கீழே போட்டு தரையை உடைச்சுருக்கேன். அதனால அம்மாகிட்ட செமையா திட்டும் வாங்கியிருக்கேன். பாடிபில்டிங் மேலே இருந்த அந்த வெறி மிஸ்டர் சென்னை, மிஸ்டர் தமிழ்நாடு டைட்டில் வரை ஜெயிக்க வெச்சது. அடுத்து பார் பவுன்சரா வேலை கிடைக்க அங்கே சேர்ந்தேன். பெயர் பார் பவுன்சர்னு ஸ்டைலா இருக்கும். நிஜத்துல கருப்பு டி-ஷர்ட் போட்ட அடியாட்கள்தான் நாங்க. யாராவது குடிச்சிட்டு கலாட்டா பண்ணினா முதல்ல அமைதியா  பேசுவோம். ரொம்ப சேட்டைனா லைட்டா தட்டுவோம். சிலர் ஓவர் போதையில எங்களைக் கெட்டவார்த்தையில திட்டுவாங்க. அந்த மாதிரி ஆட்களை கன்ட்ரோல் பண்ண முடியாது. அதனால ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிருவோம். பிரபல அரசியல்வாதி ஒருத்தர் குடிச்சுட்டு ரகளை பண்ண நான் தட்டிக்கேட்டேன். மூணு நாள் கழிச்சு என் மேலே காரைவிட்டு ஏத்தினார். திரும்பப் பொழைச்சு வந்தேன்.

பசங்க அளவுக்குப் பொண்ணுங்களும் சேட்டை பண்ணுவாங்க. ‘இங்கே வா வந்து எங்ககூட டான்ஸ் ஆடு’னு கம்பெல் பண்ணுவாங்க. டீசன்டா மறுத்திடுவேன். அப்போ ஒரு நண்பர் மூலமா சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. நான் முதல்முறையா நடிச்சது பார்த்திபன் சார் இயக்கிய ‘பச்சைக் குதிரை’ படத்தில். அந்தப் படத்தில் பார்த்திபன் சாருக்கு அசிஸ்டென்ட்டா வினோத் சார் இருந்தார். அந்தப் பழக்கத்தில் அவர் எனக்கு ‘சதுரங்க வேட்டை’ வாய்ப்பு கொடுத்தார். படம் முழுக்க வர்றது மாதிரி ஒரு கேரக்டர். பொதுவா ஜிம் பாய்ஸ்களுக்கு கேரக்டர் ரோல் யாரும் கொடுக்க மாட்டாங்க. வெளியில பார்க்க நாங்க முரட்டு ஆளா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ளே பச்சை குழந்தை மாதிரி’’ என்றார் செந்தில்.

தொடர்ந்து விஜயகுமார், ‘‘நான் அர்னால்டின் தீவிர ரசிகன். அவர் மாதிரி உடம்பை ஏத்த ஆசைப்பட்டு 20 வயசுல ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சேன். அப்போ லவகுமார்னு ஒருத்தர் நான் வொர்க் அவுட் பண்ற ஸ்டைலைப் பார்த்து ஆளு அட்டகாசமா இருக்கீங்களே சினிமாக்கு ட்ரை பண்ண வேண்டியதுதானேனு  கேட்டார். ‘பிதாமகன்’ படத்துக்கு பாலா சார் என்னை செலக்ட் பண்ணினார். காட்டுக்குள்ளே குதிரையில கஞ்சா கடத்துற சீன்ல நான் வருவேன். அடுத்தடுத்து ‘தலை நகரம்’, ‘முனி’, ‘கஜேந்திரா’, ‘அட்டகாசம்’, ‘டமால் டுமீல்’னு நிறையப் படங்கள் பண்ணினேன். சமீபத்தில் விஜய் சார்கூட ‘ஜில்லா’ படத்துல நடிச்சேன். அரசியல் தொடர்பான வசனங்கள் எனக்குக் கொடுத்தாங்க. படம் பார்க்கும்போது நான் பேசுன டயலாக்கைக் காணோம். இது தவிர ‘சந்தனக் காடு’, ‘ஆட்டோ சங்கர்’னு  டி.வி சீரியலும் நடிச்சுருக்கேன்.

பட வாய்ப்பு வரும்போது நடிப்பேன். மத்த நேரங்கள்ல பார் பவுன்சரா மாறிடுவேன். உடம்பை கண்டிஷனா வெச்சுக்க தினமும் கிலோ கணக்கில் சிக்கன் சாப்பிடுவேன். 20 முட்டை சாப்பிடுவேன். இதுக்கே மினிமம் ஒரு நாளைக்கு 600 ரூபாய்க்கு மேலே செலவாகும். வாங்குற சம்பளம் வயித்துக்கே பத்தாது. ஜிம் பாய்ஸுக்கு இருக்கிற இன்னொரு முக்கியமான பிரச்னை, எங்களுக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டங்க. நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு’’ என்று சிரிக்கிறார் விஜயகுமார்.

-ஜுல்ஃபி, படம்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick