“அசரீரி கேட்டுச்சு, அம்மாவுக்கு ஆதரவு!”

ரும் தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றிக்காக, சிறப்பு யாகம் ஒன்றை நடத்தியிருக்கிறது ‘சித்தர் சேனைகள்’ என்ற அமைப்பு. அந்த அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஏ.துரைசாமியிடம் பேசினேன்.

‘‘நாமக்கல் என் சொந்த ஊர் தம்பி. ரயில்வேயில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் பொறக்கும்போதே அ.தி.மு.க-வுக்கும் எங்க குடும்பத்துக்கும் தொடர்பு இருந்துச்சு(?!). அதனால, வேலையில இருந்து ரிட்டயர்ட் ஆனதும், அ.தி.மு.க-வுக்காக உழைக்க ஆரம்பிச்சேன். கட்சியோட தொழிற்சங்கத்துல இருந்தேன். எங்க குடும்பமே சித்த வைத்தியத்துல இருந்ததால, அதை ஏன் விடுவானேன்னு, ‘சித்தர் சேனைகள்’ அமைப்பை ஆரம்பிச்சுட்டேன். கொல்லிமலைக்குப் பக்கத்துல இருக்கிறதால, எனக்கும் சித்தர்கள் வழிபாடு தெரியும். அப்படியே இறையருள் மருத்துவமும் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ‘சித்தர் சேனைகள்’ அமைப்பை 2012-ல பதிவு பண்ணியபோது, ஏற்காடு, ரங்கம் இடைத்தேர்தல்கள் வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தோம். இப்பவும் கொடுக்கிறோம்!’’ என்றபடி ஆரம்பித்தார் துரைசாமி.

‘‘ஆக்சுவலா, சித்தர்களோட கருத்துகளையும், மருத்துவ முறைகளையும் மக்களுக்கு சொல்றதுதான் தம்பி நம்ம வேலை. ஜாதி, மத பாகுபாடு இல்லாம வழிபாட்டு முறையைச் சொல்லிக்கொடுத்துட்டுப் போனாங்க அவங்க. நான் கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்கேன். என்கிட்ட நோய், நொடினு வர்றவங்க சொல்றதைக் கேட்டுக்குவேன். அதுக்கு என்ன பண்ணலாம்னு சித்தர்களோட அசரீரி எனக்குச் சொல்லும். அவங்க சொல்றபடி சில மூலிகைகளைக் கொடுத்து நோய்களைக் குணமாக்குவேன். பெரும்பாலும் நான் பண்ற தியானத்துலேயே அவங்க நோய்களெல்லாம் ஓடிரும்!’’ என்றவர், யாகத்தைப் பற்றி விளக்கினார்.

‘‘இந்தத் தேர்தல்ல அம்மாவுக்கு ஆதரவு தரப்போறோம். அவங்க ஜெயிக்கிறதுக்கு என்ன பண்ணலாம்னு சித்தர்கள்கிட்ட கேட்டோம். பிரபஞ்சத்துல இருந்து அவங்களோட அசரீரி எனக்குக் கேட்டுச்சு(!!!). அப்புறம் தீயை எரியவிட்டு, மூலிகைக் குச்சியைப் போட்டு, காய்ஞ்ச சருகுகளைத் தூவிவிட்டு யாகம் பண்ணினோம். அவ்வளவுதான். இப்படிப் பண்ணினா, தேர்தல்ல அ.தி.மு.க ஜெயிக்கும்னு சித்தர்களோட அசரீரி எனக்குக் சொல்லுச்சு, பண்ணிட்டேன். நாளைக்கே, வேற மெத்தட் சொன்னாங்கனா அதையும் பண்ணுவேன். அதெல்லாம் அப்பப்போ வர்ற அசரீரி சொல்றதுதான். அப்பப்போ ‘இப்படிச் செய், அப்படிச் செய்’னு தகவல் சொல்லிக்கிட்டே இருப்பாங்க!’’ என்றவர்,

‘‘நம்ம அமைப்புல 75,000-த்துல இருந்து ஒருலட்சம் பேர் இருப்பாங்க. முக்கியமான ஆளுங்ககிட்ட கேட்டுதான் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்கிறேன். எங்க அமைப்பு 25 சதவிகித அரசியல், 75 சதவிகித ஆன்மிகத்துல இருக்கு. அதனால, நேரடியா தேர்தலைச் சந்திச்சு, திடீர்னு எம்.பி., எம்.எல்.ஏ., எல்லாம் ஆக முடியாது. நம்ம அசரீரி எப்போ சொல்லுதோ, அப்போ கண்டிப்பா நேரடியா அரசியல்ல இறங்குவோம்!’’ என்று முடித்தவரிடம்,

‘‘மற்ற கட்சிகள் யாகம் நடத்தச் சொன்னா, என்ன பண்ணுவீங்க?” என்றேன்.

‘‘மற்றவர்களுக்காக யாகம் பண்ணலாம்னு ‘அசரீரி’ சொன்னா செஞ்சுடுவோம்!’’ என்று முடித்தார் துரைசாமி.

எனக்கும் ஏதோ அசரீரி கேட்டுச்சு பாஸ்!

- கே.ஜி.மணிகண்டன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick