என்னால் ஏலியன்களோடு பேச முடியும்!

கிக்-பாக்ஸிங்கில் இரண்டு முறை தங்கம் வென்றவர், ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர், ‘குடியரசு’ என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கியவர், தனுஷ், ஆர்யா எனப் பல நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சிகள் சொல்லித் தந்தவர் என ஏகப்பட்ட அடையாளங்களை வைத்துள்ள சபீர் உசேன் ஒரு ஏலியன் ஆராய்ச்சியாளரும்கூட! நாம் பயன்படுத்துகிற பெட்ரோலுக்கும், ஏலியன்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதாம். ஆச்சர்யப்படத்தானே செய்வோம்!

‘‘கிக்-பாக்ஸிங், சினிமா, ஐ.ஏ.எஸ் வகுப்பு இதெல்லாம் வருமானத்துக்காகப் பண்றது. ஆனா, 20 வருடங்களாக என்னோட ஆர்வம் முழுக்க ஏலியன்கள் மேலதான் இருக்கு. அதுக்காகவே தனியா, ‘இந்தியன் சொஸைட்டி ஃபார் எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் ஸ்டடீஸ்’ (வேற்றுலகவாசிகளை அறிதல்)னு ஒரு இயக்கம் நடத்துறேன். நான் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்ச 1991-ல கம்ப்யூட்டரே கிடையாது. நிறையப் புத்தகங்களைத் தேடிப் படிப்பேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து, அமெரிக்காவில் இருக்கும் ஸ்டான்டன் ஃபிரிட்மேன் எனக்கு ரெண்டு புத்தகங்களைப் பரிசா அனுப்பியிருக்கார். அவர் யாருனு தெரியுமா? ஏலியன் ஆராய்ச்சியாளர். பறக்கும் தட்டுகள் பற்றி அமெரிக்கா மறைக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியவர்’’ என்றபடி ஆரம்பித்தார், சபீர் உசேன்.

‘‘அமெரிக்க அதிபர் ஒபாமாவோட சீனியர் அட்வைஸராக இருந்த ஜான் பொடெஸ்டாவுக்கு என்னை நல்லாத் தெரியும். அவர், அதிபர் தேர்தலையொட்டி, ஏலியன் பற்றிய உண்மைகளை மக்கள்கிட்ட சொல்றதா சொல்லியிருக்கார். இன்னும் சிலரும் இருக்காங்க. அவங்களும் அமெரிக்கா செய்யும் துரோகத்தை விரும்பாம, தொடர்ந்து ஏலியன் பற்றி மறைக்கப்படும் உண்மைகளைச் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஏன்னா, அதெல்லாம் வெறும் கற்பனையோ மர்மமோ கிடையாது. 100 சதவிகித உண்மை!’’ என்றவர், தொடர்ந்து பேச ஆரம்பித்தார். 

‘‘ஏலியன்களோட பறக்கும் தட்டு ‘ஜீரோ கிராவிட்டி’யால் இயங்கக் கூடியது. பூமியில் ஈர்ப்பு சக்தி இருக்கு. அதனால வாகனங்கள் ‘உந்து விசை’யாலதான் இயங்க முடியும். அப்படி இயங்க, எரிபொருள் தேவை. ஆனா, ஏலியன்களோட பறக்கும் தட்டுக்கு அது தேவைப்படாது. ஏன்னா, ஏலியன்கள் ஜீரோ கிராவிட்டியைப் பயன்படுத்திப் பறக்குது. பறக்கிறதுக்கு மட்டுமில்லை, அவங்க பயன்பாட்டுக்கு ‘ஜீரோ டாட்’ங்கிற எனர்ஜியைப் பயன்படுத்துறாங்க. வெற்றிடத்துல புரோட்டான், எலக்ட்ரான் இப்போ கடவுள் துகள் வரை இருக்குனு கண்டிபிடிச்சிருக்காங்க. அதை எரிபொருளா பயன்படுத்துற முறைதான் ‘ஜீரோ டாட்’. முதல் முதல்ல பறக்கும் தட்டு பூமியில விழுந்தப்போ, அதுல இருந்து சிதறுன சிறு துண்டுகளைத் தீயில் போட்டு எரிச்சுப் பார்த்தாங்க. சுத்தியலால அடிச்சு உடைச்சுப் பார்த்தாங்க. ஆனா, அது திரும்பவும் தன்னோட அமைப்புக்கு மாறிடுச்சு. இது எப்படி சாத்தியம்னு அமெரிக்காவுல பல விஞ்ஞானிகளைக் கூப்பிட்டு ஆராய்ச்சி பண்ணச் சொன்னாங்க. அவங்களால அதை அப்படியே உருவாக்க முடியலைனாலும், அதோட ‘டூப்ளிகேட்’ சிஸ்டத்தைக் கண்டுபிடிக்க முடிஞ்சுது. அதை வெச்சுதான் ரேடாரின் கண்களில் சிக்காத விமானங்களை அவர்களால கண்டுபிடிக்க முடிஞ்சுது. இதையும் அமெரிக்கா மறைக்குது’’ என்று ட்விஸ்ட் கொடுத்துத் தொடர்ந்தார்.

‘‘1940-ல இருந்து இன்னைக்கு வரை 15 கோடிக்கும் அதிகமான மக்கள் பறக்கும் தட்டுகளைப் பார்த்திருக்காங்க. ஆனாலும், ‘இதெல்லாம் நிரூபிக்கப்படாதது’னு அவங்க சொல்ல முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கு. ‘ஜீரோ டாட்’ பயன்பாட்டை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்துட்டா, வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. உலகத்துல இருக்கிற எல்லா மக்களும் பெட்ரோலுக்காகக் காத்துக்கிட்டு இருக்க வேண்டிய கவலை இல்லை. இதனால என்னாகும்? வல்லரசு நாடுனு அமெரிக்கா தன்னை மார்தட்டிக்க முடியாது. 170 ஏழை நாடுகள் முன்னேறிடும். வறுமையில இருக்கிற 300 கோடி உலகமக்கள் வசதியா வாழ்வாங்க. இதை அமெரிக்கா மட்டுமில்லை, வேறு சில பணக்கார நாடுகளும் விரும்பலை. அதனாலதான் எல்லா உண்மைகளும் மறைக்கப்படுது. பெட்ரோலால ஆண்டுக்கு 45 டிரில்லியன் டாலர் பிசினஸ் நடக்குது. பல நாடுகளுக்குப் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்றது பெட்ரோல்தான். மக்களுக்கு பெட்ரோல் மேல ஒரு போதையை ஏற்படுத்தி வெச்சாதான், இவங்க எல்லாம் வல்லரசு’’ என்ற சபீர்,

‘‘மற்றபடி, ஏலியன்களால் பூமிக்கோ, மனிதர்களுக்கோ எந்த வித ஆபத்தும் கிடையாது. ஏலியன்கள் பூமிக்கு வர்றது, மனிதர்கள் அணுசக்தி, ஏவுகணை சோதனைகளை நடத்தக் கூடாதுனுதான். ஏன்னா, பூமி மனுஷங்களுக்கு மட்டுமில்லை... எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதுனு ஏலியன்ஸ் நினைக்கிறாங்க. முதல் முதல்ல பறக்கும் தட்டு விழுந்த இடம் அமெரிக்காவின் ரோஸ்வெல் நகர். அங்கேதான் ஏவுகணை சோதனை அடிக்கடி நடக்கும். அதுக்குப் பக்கத்துலதான் அணுகுண்டு சோதனையும் நடக்கும். ஆக, பூமியில எப்போவெல்லாம் அணுகுண்டு சோதனை நடக்குதோ, அப்போ ஏலியன்கள் வர்றாங்க. அதனால, ஏலியன்கள் சொல்லிக்கொடுத்த ‘ஜீரோ டாட்’ பவரை உலகம் முழுக்கப் பயன்படுத்தணும்னா, அதுபற்றிய விழிப்பு உணர்வு வேணும். இதைத்தான் நான் எழுதிக்கிட்டு இருக்கிற ‘பறக்கும் தட்டு பிரளயம்’ புத்தகத்துல சொல்லப்போறேன்’’ என்றவர்,

‘‘என்னால ஏலியன்கள்கிட்ட பேச முடியும். அவங்க டெக்னாலஜியை வெச்சு ஒருமணி நேரத்துல கங்கையைச் சுத்தப்படுத்த முடியும். இந்த உண்மையை மக்கள்கிட்ட சொல்லி, அதைச் சாத்தியப்படுத்த ஆரம்பிச்சா, இந்தியாவுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கோடி மிச்சமாகும். ஏன்னா, ஏலியன்களால் பூமிக்குப் பாதிப்பு கிடையாது. அவங்க பூமியை ஆக்கிரமிக்கவும் ஆசைப்படலை. அமெரிக்காவுக்கு ஏலியன்கள் இரண்டு பறக்கும் தட்டுகளைப் பரிசா கொடுத்துட்டுப் போயிருக்காங்க. அவங்களுக்கு ‘ஜீரோ டாட்’ பவரைப் பற்றியும், ஜீரோ கிராவிட்டியில் பயணிப்பதைப் பற்றியும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். அதை உலக மக்களுக்குச் சொல்லணும். அதுதான், ஏலியன்களுக்கு நாம செய்ற நன்றிக்கடன்!’’ என்று சீரியஸாகவே முடிக்கிறார் சபீர் உசேன்.

- கே.ஜி.மணிகண்டன், படங்கள்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick