ரோபோடி!

‘அவெஞ்சர்ஸ்’, ‘லூசி’, ‘அண்டர் தி ஸ்கின்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் பிரபல நடிகை ஸ்கார்லட் ஜோகன்ஸன். இவரது பெயர் சில நாட்களுக்கு முன்பு உலக அளவில் வைரலானது. காரணம் இவர் அல்ல, இவர் போன்றே உருவாக்கப்பட்டிருக்கும் ரோபோ.

ஹாங்காங் நாட்டை சேர்ந்த ரிக்கி மா என்பவர் ஸ்கார்லட் ஜோகன்ஸனைப் போலவே அச்சு அசலாக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் (பாரேன்). இதற்காக 50,000 டாலர்கள் வரை செலவுசெய்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அல்லும் பகலுமாக உழைத்திருக்கிறார் (வாட் எ மேன்). இதுபற்றி ரிக்கி மா கூறுகையில், ‘எனக்கு சின்ன வயசுல இருந்து ரோபோட்டுகள்னா ரொம்பப் பிடிக்கும். நான் வளர்ந்ததுக்குப் பிறகு எனக்கு ஒரு ரோபோ உருவாக்கிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதற்கான முயற்சியிலும் இறங்கினேன். எல்லோரும் என்ன லூசுன்னு திட்டினாங்க (பின்ன...).  இதுக்கு எவ்ளோ செலவு ஆகும்னு தெரியுமா, உருவாக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?னு கேட்டாங்க. ஆனால், நான் பின் வாங்கலை மக்களே, கடுமையா உழைச்சு இப்போ இந்த ரோபோவை உருவாக்கிட்டேன்’ என்கிறார். இந்த ரோபோவின் ஒவ்வொரு பாகத்தையும் அவ்வளவு நுணுக்கமாக உருவாக்கியுள்ளார் ரிக்கி. முக்கியமாக, இந்த ரோபோ நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப முகபாவனைகளையும் வெளிப்படுத்துவதுபோல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க் 1 எனப் பெயர் வைத்து ஸ்பீக்கருக்குள் மூன்று முறை மார்க் 1 எனக் கூறிப் பெயரும் சூட்டியிருக்கிறார். இப்போது ‘யாரேனும் இந்த ரோபோவை வாங்குவார்கள், அந்தப் பணத்தைக்கொண்டு அடுத்தடுத்த ரோபோக்கள் செய்வேன்’ என்ற நம்பிக்கையோடு இருக்கிறாராம் ரிக்கி. மறுபுறம், இது முற்றிலும் தவறு எனப் பலர் கொந்தளித்து வருகின்றனர். ரிக்கி மா, இது ரொம்ப தப்புமா...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick