இது தமிழ் ‘பிரேமம்’!

மீபத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் போஸ்டரைப் பார்த்தே தெறித்து ஓடினார்கள் ஒரிஜினல் பிரேமத்தின் ரத்தத்தின் ரத்தங்கள். அடுத்து எப்படியும் தமிழில் ரீமேக்கினாலும் மேக்குவார்கள். அந்தச் சம்பவம் மட்டும் நடந்துச்சு, படம் இதோ இப்படித்தான் இருக்கும்.

நம் ஊர் ஹீரோ எப்படியும் இன்ஜினீயரிங்தான் படிப்பார். எனவே, ஹீரோ மொழுமொழு மூஞ்சியோடு, கட்டம் போட்ட சட்டையில் காலர் பட்டன் மாட்டிக்கொண்டுதான் திரிந்திருப்பார். நிவின் பாலி போல் தாடி, வேட்டி, புட்டி எனத் திரிந்தால் மேனஜ்மென்ட்டில் இருந்து ஃபைன் போட்டுவிடுவார்கள். லாஜிக்!

அதேபோல் நிவின் பாலி, மலர் டீச்சரைக் காதலிச்ச மாதிரியெல்லாம் நம் ஊரில் சீன் வைக்க முடியாது. ஏன்னா, அப்படி ஒரு விஷயம் நடந்ததுனா ‘2005-லேயே டீச்சரைக் காதலித்த மாணவன்’னு 2016-ல் போட்டோவோடு வாட்ஸ்-அப்பில் உலா வருவார் ஹீரோ. கருமம்டா!

நம் ஹீரோக்கள் மலர் டீச்சருக்கு பழைய ஞாபகங்கள் நினைவில் இல்லை எனக் கேள்விப்பட்டதும், அலேக்காக அவரை வண்டியில் தூக்கிப்போட்டு கோயிலுக்கு சென்று அவர் கையால் விபூதி அடிக்கவிட்டு ஞாபகத்தை மீட்டெடுத்திருப்பார். நிவின் போல மலரின் கல்யாண ரிசப்ஷனுக்கு சென்று ஜிலேபியை விழுங்கியிருக்க மாட்டார்!

காதல் தோல்வி அடைந்த பிறகுதான் ஹீரோவின் முகத்தில் தாடியே வளர்ந்திருக்கும். ஆறு நாள் தாடி வளர்ந்த பிறகுதான் ஆல்கஹாலை உள்ளே தள்ளி ‘என் அஞ்சல மச்சான் அவோ’ என அணத்த ஆரம்பித்திருப்பார்!

‘பிரேமம்’ படத்தில் வருவது போல, காதல் தோல்விக்குப் பின் பேக்கரி ஆரம்பித்து வறுக்கி சுட்டிருக்க மாட்டார் நம் ஊர் ஹீரோ. கண்டிப்பாக, ஜிம்மில் தவமாய் தவமிருந்து சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஆர்மியிலோ, போலீஸிலோ இணைந்திருப்பார். படம் வேற லெவலுக்குப் போயிருக்கும்!

மொத்தத்தில், ‘பிரேமம்’ படத்தைத் தமிழில் ரீமேக்கினால் அதைப் பார்த்து பூமாதேவியே சிரிச்சுடுவா... நாமெல்லாம் உள்ளே போயிடுவோம். ஒரே கதையை எத்தனை தடவைதான் பார்க்கிறது மக்களே?

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick