செய்வீர்களா ஜெயலலிதா செய்வீர்களா?

‘படிப்படியாக மதுவிலக்கு!’ என்று சரணாகதி மொமென்ட்டுக்குப் போய்விட்டார் ஜெயலலிதா. அடுத்து என்னவெல்லாம் அதிரடி செய்வார் என்று ச்சும்மா ஜாலி கற்பனை...

போயஸ் கார்டன் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும். சுற்றிப் பார்க்கும் மக்களுக்கு அம்மா உணவகத்திலிருந்து உணவுகள் இலவசமாகத் தரப்படும்.

குனிந்து வணக்கம் வைப்பவர்கள் எல்லோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள்.

கொடநாடு எஸ்டேட் பங்களாவை மக்கள் இல்லமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

வெள்ளம், புயல், மழை, வெயில் போன்றவற்றின் நிவாரணத்துக்கென தனித்துறை ஏற்படுத்தப்படும். ‘வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் வந்தால், இனிமேல் நானும் என் கட்சித் தொண்டர்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் போராடுவோம். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக ஹெலிகாப்டர்கள் எல்லாம் விற்கப்பட்டு ஏராளமான ஃபைபர் படகுகள் என் சொந்தக் காசில் வாங்கப்படும் என்பதை தாயுள்ளத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ என்ற அறிவிப்பு வரும்.

ஸ்டிக்கர் ஒட்டுவோர் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். இதற்காக காவல் துறையின் வசம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற இரும்புக்கரங்கள் வாங்கப்படும்.

இளையதளபதி விஜய் மற்றும் உலக நாயகன் கமல் படங்கள் ரிலீஸாகும்போது தமிழ்நாடு காவல் துறை மிகச்சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவர்கள் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கும் வரை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைத் தொடரும்.

ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமல்லாமல் எல்லா அமைச்சர்களுக்கும் மக்கள் முதல்வர் என்ற பதவி ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை அன்று வழங்கப்படும்.

சட்டப்பேரவையில் மேஜைகளைத் தட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அதிரடி நடவடிக்கையாக அவையிலிருந்து குண்டுகட்டாகத் தூக்கி வீசப்படுவார்கள் என்பதையும் தேவை இல்லாமல் ‘அம்மா’ கவிதைகள் வாசிக்கும் அமைச்சர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் ஜெயலலிதா அறிவிப்பார்.

நினைச்சுப் பார்க்கவே ஜாலியா இருக்குல்ல...ம்ம்ம்ம்ம்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick