தேறிடுவீங்க!

ப்படி சிறப்பாக கிரிக்கெட் விளையாடி நல்ல பேர் சம்பாதிக்கிறதுனு எனக்குத் தெரியாது. ஆனால், ஆடவே தெரியலைனாலும் எப்படி நல்ல பேர் வாங்குறதுனு ரொம்ப நல்லாத் தெரியும். எப்படினு சொல்றேன், ரஃப் நோட்டில் குறிச்சு வெச்சுக்கோங்க...

எப்பவும் வாயில் வண்டு கடித்த மாதிரி அமைதியாவே இருக்கணும். ‘பேட்டிங் பண்றேன், பெளலிங் பண்றேன்’னு வான்ட்டடா வாயைக் கொடுத்து, நம்ம வண்டவாளத்தை நாமளே தண்டவாளத்தில் ஏத்திடக் கூடாது. இப்படி இருந்தோம்னா, ‘எதுலேயும் தலையிடாம, கொடுத்த வேலையை ஒழுங்கா செய்றான்’னு உங்க கேப்டனே உங்களைப் பாராட்டுவார்.

கிரவுண்டில் நிழல் இருக்கிற இடமா பார்த்துப் பகுமானமா நிற்கக் கூடாது. வெயிலில்தான் நிற்கணும். அப்போதான் கேட்சை கோட்டை விட்டாலும் ‘ஸோ ஹாட், வெயில் அடிச்சிங், கண் கூசிங்’னு கப்பித்தனமா காரணம் சொல்லித் தப்பிக்க முடியும்.

எப்படியும் சீக்கிரமே அவுட் ஆகிடுவோம். அதனால், அவுட் ஆனதும் அழறதுக்கு கண்களைத் தயார் நிலையில் வெச்சுக்கணும். சம்பவம் நடந்ததும் தலையில கை வெச்சு ‘என் ராசாவின் மனசிலே’ ராஜ்கிரன் மாதிரி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பிச்சுடணும். ‘என்னமா ஃபீல் பண்றான்டா’ என மற்றவர்களும் கண்ணைக் கசக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பந்தை எப்பவுமே அடிக்க ஆசைப்படக் கூடாது, மன்னிக்கணும், பேராசைப் படக் கூடாது. பேராசை பெருநஷ்டம்ங்கிற பழமொழிக்கு ஏற்ப சீக்கிரமே அவுட் ஆகிடுவோம். அதனால், அடிக்கவும் செய்யாம, அவுட்டும் ஆகாம பந்தை உருட்டி உருட்டியே ஒப்பேத்திடணும்.

நம்ம டீம் பவுலிங் போடுறப்போ ‘வைடு’, ‘நோ பால்’ கொடுத்தால் அம்பயர்கூட முதல் ஆளா போய் சண்டை போடணும். ஒழுங்கா உட்கார்ந்து ‘ஸ்கோர்’ எண்ணனும், அப்போதான் கரெக்டா கணக்கு சொல்லி மற்றவர்களைக் கலங்கடிச்சு நம்ம டீம் ஆட்களிடம் கைத்தட்டல் வாங்கலாம். இதையும் சரியா பண்ணலைனா, மட்டையாலேயே மண்டையை உடைச்சு மாவிளக்கு போட்ருவாங்க.

ஃபீல்டிங்ல நிற்கிறப்போ ஒவ்வொரு பந்துக்கும் ‘கமான்...கமான்...’னு பவுலரை உற்சாகப்படுத்திட்டே இருக்கணும். விக்கெட் வாங்கிட்டால் எங்கு இருந்தாலும் ஓடிவந்து முதுகில் தொத்திக்கணும். இப்படிப் பண்ணீங்கனா ‘பையன் ரொம்ப துடிப்பா இருக்கான்’னு நினைச்சுக்குவாங்க.

தப்பித் தவறி ரன் அவுட் ஆகிட்டாலோ, பந்தை ஃபீல்டிங்கில் கோட்டை விட்டாலோ ‘ சுளுக்கு’ பிடிச்சுக்கிட்ட மாதிரி காலைப் பிடிச்சு உட்கார்ந்து சின்னதா ஒரு நடிப்பைப் போடணும். ‘கல்யாண் ஜூவல்லர்ஸ்’ விளம்பரத்துல வர்ற மாதிரி ஓவரா நடிச்சா உண்மையிலேயே சுத்தி நின்னு சுளுக்கெடுத்துருவாய்ங்க. அப்புறம் ‘ப்ளேயரா இருந்த நான் பேஷன்டா மாறினேன்’னு அந்த விளம்பரத்துல வர்ற மாதிரியே புலம்ப வேண்டியது தான்.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick