கன்னாபின்னா காமெடி!

யூ டியூபை வலம் வந்தால் ஏகப்பட்ட காமெடி சேனல்கள் கண்ணில் தட்டுப்பட்டு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதில் ஒன்றுதான் அல்டிமேட் சைட் மேன் என்ற சேனலும். இந்த சேனலை ஏழு பேர் கொண்ட  குழு நடத்திக்கிட்டு இருக்காங்க. ஏதன், ஹாரி, ஜேஜே, ஜோஸ், சைமன், டோபி, விக் இவங்கதான் அவங்க. எல்லோருமே அமெரிக்கா பசங்க. சரி... அப்படி என்னதான் பண்றாங்க?

இந்த ஏழு பேரும் ஒண்ணா சேர்ந்தா, அன்னைக்கு சனியன் சடைபின்னப் போகுதுனு அர்த்தம். குரூப்ல கடைசி ஆளா இருக்கிற விக்குதான் காமெடி பீஸ். இவரைத்தான் மொத்த டீமும் வெச்சு செய்றாங்க. அப்பாவியான விக்கை பிளாஸ்டிக் சேரில் உட்கார வெச்சு அவரைச் சுற்றி செல்லோ டேப்பால் பார்சலைப்போல ஒட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறாங்க. அதிலிருந்து அவர் எப்படித் தப்பித்து வந்தார் என்பதை ஜாலியான வீடியோவா ஷூட் பண்ணி யூ டியூபில் போடுறாங்க. விக்குக்கு வித்தியாசமா மேக்கப் சேலஞ்சும் நடத்தியிருக்காங்க. ரொம்ப வித்தியாசமா இருக்கணும்னு பன், பட்டர், ஜாமை முகத்தில் தடவி முதல் கோட்டிங் கொடுக்கிறாங்க. அது மேலே மில்க் மெய்ட் தேய்ச்சுவிட அது இரண்டாவது கோட்டிங். கடைசியா அவர் தலையில் ஒரு வாழைப்பழத்தை வெச்சு தலைமுடியில் தக்காளி சாஸை பிழிஞ்சு விட்டா எல்லாம் முடிஞ்சுது. அதே மாதிரி எக் ரூலட்டினு ஒரு சேலஞ்ச் நடத்துறாங்க. முட்டையைத் தலையில் உடைச்சு விளையாடற போட்டி. வழக்கம்போல மஞ்சள், வெள்ளைக்  கருவால் பிசுபிசுத்தது விக்கின் மண்டையே. அதே மாதிரி உடல் முழுக்க மாவைக் கொட்டி பொம்மைத் துப்பாக்கி சுடும் போட்டியில், மாவு கண்ணுக்குள் போய் தள்ளாடிக்கொண்டே சுடுபவரைப் பார்த்தால் சிரிப்புக்கு நான் கியாரன்டி!

இவங்க காமெடினா காமெடி, சீரியஸ்னா சீரியஸ் அந்த மாதிரி ஆளுங்க. ஒரு தொண்டு நிறுவனம் வெச்சுருக்காங்க. நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவுறாங்க. டிக்கெட்டில் டிஸ்கவுன்டும் உண்டு. பெரியவங்களுக்கு 12 டாலர் என்றால்  குழந்தைகளுக்கு ஏழு டாலர்தானாம். இவங்க யூ டியூப் சேனலை 37 மில்லியன் மக்கள் சப்ஸ்கிரைப் செய்து பின் தொடர்றாங்க. அதனால விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்த சேனலைப் பயன்படுத்துறாங்களாம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick