பிணமாவே வாழ்ந்திட்டார்!

ஹாரிபாட்டர் படங்களை மறக்க முடியுமா?

ஹீரோவாய் நம் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட டேனியல் ராட்கிளிஃப் எப்போதோ டீனேஜைக் கடந்து இப்போது 26 வயது ஹீரோவாய் நடிக்க ஆரம்பிச்சாச்சு. 2012-ல் ரிலீஸான ‘உமன் இன் ப்ளாக்’ ஹாரர் படத்தில் நடிப்பில் ஹீரோவாய்ப் பட்டையைக் கிளப்பி இருந்தார் டேனியல். ‘கில் யுவர் டார்லிங்ஸ்’-ம் முக்கியமான படமாகப் பேசப்பட்டது. ஆனாலும் குழந்தை நட்சத்திரமாய் சுட்டிச் சிறுவனாய் கலக்கிய டேனியலுக்கு லியோனர்டோ டி காப்ரியோ போல பெரும் ஸ்டாரக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

ஆனால் போன வருடம் ரிலீஸான ‘விக்டர் ஃப்ராங்கென்ஸ்டெய்ன்’ ஃப்ளாப் பட்டியலில் சேர்ந்துவிட உடைந்து போனார். இப்போது ‘ஸ்விஸ் ஆர்மி மேன்’ படத்தின் மூலம் வேறு மாதிரி நடித்திருக்கிறார். படத்தில் இவர் ஹீரோ இல்லை என்றாலும் இவர் பாத்திரம் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்த நாகேஷ் பாத்திரத்தின் நீட்சி போன்றது. ஆமாம். படத்தில் இவர் பிணமாக நடித்திருக்கிறார். ஆனால் டேனியலுக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் படத்தில் இரண்டே இரண்டு கேரக்டர்கள்தான். இன்னொருவராக நடித்திருப்பது ‘யூத்’ படத்தில் நடித்த பால் டானோ.

தன்னந்தனித் தீவில் மாட்டிக்கொள்ளும் டானோ உதவிக்கு ஆள் இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் கரை ஒதுங்கிய ஒரு பிணம் அவர் கண்ணுக்குத் தட்டுப்படுகிறது. மிக நீண்ட நாட்களாக மனிதர்களையே பார்க்காத டானோவுக்குப் பிணத்தைப் பார்த்ததும் இனம் புரியாத அன்பு ஏற்படுகிறது. அந்தப் பிணத்தைத் தூக்கிக்கொண்டு அந்தத் தனித்தீவுக்குள் வாழ ஆரம்பிக்கிறார். பிணத்துக்குப் பெயர் வைக்கிறார், பிணத்துடன் பேசுகிறார், சரக்கடிக்கிறார், தூங்குகிறார். மொத்தத்தில் பிணத்துக்கும் டானோவுக்கும் இடையே ஒரு ‘நட்பு’ ஏற்படுகிறது. கடைசியில் அந்த நட்பு என்னவாகிறது என்பதே க்ளைமாக்ஸ். அந்தப் பிணமாக மொத்தப் படத்தையும் வேறுவிதமாக தாங்கி நடித்திருப்பது டேனியல் ராட்கிளிஃப்தான். ‘இந்தப் படத்துக்காக விருதுகளை வாரிக்குவிப்பார் டேனியல்’ என்று சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குநர் டான் க்வான்.

‘ஏன் இவ்வளவு கேவலமான ஒரு ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்? என எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அழகான கதாநாயகனாகத் தெரிவதைவிட இதைப் போன்ற சவாலான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நிச்சயம் பிணமாகவே என்னை ரசிப்பீர்கள்!’ என்று சொல்லி இருக்கிறார்.

ஆஹா, அடுத்த லியோ கிளம்பியாச்சு!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick