கொலவெறிப் படம்!

‘ராமன் ராகவ்-2.0’. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ‘பாம்பே வெல்வெட்’ படத்தின் தோல்விக்குப் பின் மீண்டும் எழுந்து இயக்கி முடித்திருக்கும் சினிமா. 60-களின் மத்தியில் மும்பை மக்களை குலை நடுங்க வைத்த சீரியல் கொலைகாரனான ராமன் ராகவ் என்ற சைக்கோ ராமனின் வாழ்க்கையைத்தான் படமாக எடுத்திருக்கிறார். ஏற்கெனவே ‘பத்லாப்பூர்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், ராமன் ராகவ்வின் வாழ்க்கையை 70 நிமிட ஆவணப்படமாக இயக்கி பாராட்டுகளைக் குவித்தவர். ‘ராமன் ராகவ்-2.0’ வில் தன் ஆஸ்தான நடிகரான நவாஜுதீன் சித்திக்கை சீரியல் கொலைகாரன் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் அனுராக். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ராமன் ராகவ் யார்? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா?

1968 ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மும்பையின் புறநகர்ப் பகுதியில் நள்ளிரவுகளில் வெளியே தூங்கும் நபர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டு தூக்கத்திலேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்கள். ஏற்கெனவே 1965, 66-ல் இதே ஸ்டைலில் 9 பேர் நீண்ட இடைவெளியில் கொலை செய்யப்பட்ட விஷயத்தை போலீஸ் மீடியா வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. கிருத்திகா என்ற பெண் மட்டும் ஒரு கரிய உருவம் கொலை செய்வதைப் பார்த்ததாக போலீஸிடம் சொல்ல போலீஸ் விழித்துக்கொண்டது. அந்தப் பெண் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தது. சில நாட்களில்  பிளாட்ஃபார்ம் வாசியான ராமன் ராகவ் எதேச்சையாக போலீஸ் பிடியில் சிக்கினான். திருட்டுக்குற்றத்துக்காக சிறைத் தண்டனையில் அவன் உள்ளே சென்றுவிட கொலைகள் நின்று போனது. மீண்டும் வெளியே அவன் வந்தபோது 23 பேர் அடுத்தடுத்து இதே கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். ரமாகாந்த் குல்கர்னி என்ற அசிஸ்டென்ட் கமிஷனர் இந்தக் கொலை வழக்கை துப்புத் துலக்கி வந்தார். அவர்தான் தன் விசாரணையில் சிறைத் தண்டனை பெற்று ராமன் ராகவ் உள்ளே இருந்த சமயம் கொலைகள் நின்றிருந்ததைக் கண்டுபிடித்தார். ஆளைத் தூக்கிவந்து விசாரித்தபோது அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமே அதிர்ந்து போனது. கொலை செய்துவிட்டோம் என்ற பதட்டமே இல்லாமல், ஏதோ சிக்கன் சாப்பிட்டுவிட்டு பல் குத்துவதைப்போல தான் செய்த கொலைகளைச் சொல்லி இருக்கிறான். இதில் உச்சபட்சக் கொடுமை அவனுக்கு எண்ணிக்கைத் தெரியவில்லை. போகிறபோக்கில் காரணமே இல்லாமல் கொன்றிருக்கிறான். கடப்பாறையால் ஒரே அடியில் இவனிடம் அடிவாங்கி கபால மோட்சம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 50-க்கும் மேல் என்கிறது போலீஸ். 1969 ஜூன் 2-ம் தேதி மும்பை கோர்ட் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. காரணம் அவனுக்கு இருந்த கடுமையான மனப்பிறழ்வு நோய். எக்கச்சக்க மருத்துவ பரிசோதனைகளை உட்படுத்திய காவல் துறை அவனுக்கு இருக்கும் வித்தியாசமான உளவியல் சிக்கல்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்ட பல ஆயுள் தண்டனைகள் ஒட்டுமொத்தமாக சேர்த்து விதிக்கப்பட புனேயில் இருக்கும் எர்ரவாடா சிறையில் தன் வாழ்நாளைக் கழித்து வந்தான்.  1995-ல் கிட்னி ஃபெயிலியராகி சிறைக்குள் நோய்வாய்ப்பட்டு இறந்தும் போனான்.

இந்திய க்ரைம் வரலாற்றில் சைக்கோ மேன் என்று அழைக்கப்படும் ராமன் ராகவ்வின் பூர்வீகம், குடும்ப உறுப்பினர்களை கடைசிவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நமக்கெல்லாம் ஷாக்கான ஒரு விஷயம் என்னவென்றால் தமிழ் ஓரளவு பேசுவான் என்பதுதான். அவனுக்கு தம்பி, வேலுச்சாமி என்ற பெயர்களும் இருப்பதாக அவனே வாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறான்.

ராமன் ராகவைப் பற்றி ‘நடுநிசிநாய்கள்’ படம் பண்ணியபோது கௌதம் மேனன் தன் பேட்டிகளில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick