“ஸ்டாலின் தேடிவந்து ஆதரவு கேட்டார்!”

ழைகளை முன்னேற்று வதற்கென்றே தாங்கள் இருப்பதாகத்தான் எல்லாக் கட்சிக்காரர்களும் சொல் வார்கள். ஆனால்  ‘ஏழைகள் முன்னேற்றக் கழகம்’ என்றே ஒருவர் கட்சி நடத்துகிறார். கட்சியின் நிறுவனர், தலைவர் ம.பால்ராஜ்.  எப்படி ஏழைகளை முன்னேற்றப் போறாராமாம்?

‘‘நாகப்பட்டினம் என் ஊர். சின்ன வயசுலேயே என் அப்பாவை இழந்துட்டதனால, நானேதான் என் பாதையைத் தீர்மானிச்சுக்கணும்னு ஆகிடுச்சு. நாலு பேருக்கு நல்லது பண்ணணும், எதையாவது சாதிக்கணும்னு தோணும். தாத்தா காசுல சாஃப்ட்வேர் படிச்சேன். சென்னையில வேலைக்குச் சேர்ந்தேன். பெரிய சைஸ்ல வரைஞ்ச ஓவியங்களை அதோட ஒரிஜினல் கெடாம, 20 எம்.பிக்குள்ள சுருக்கணும்னு, ஜப்பான்காரங்களாலேயே செய்ய முடியாத ஒரு புராஜெக்ட் எங்க கைக்கு வந்துச்சு. பலரும் முடியாதுனு சொன்னாங்க. நான் துணிஞ்சேன். 20 எம்.பி இல்லை... ரெண்டே எம்.பி-யில அந்த ஓவியத்தைச் சுருக்கி அசத்தினேன். பலரும் பாராட்டினதோட, அமெரிக்காவுல வேலைக்கும் கூப்பிட் டாங்க. மறுத்தேன். கண்டிப்பா வரணும்னு கட்டாயப்படுத்தினாங்க. வேலையை விட்டுட்டேன். ஏன்னா, எனக்கு இந்தியாவுல இருந்து மக்களுக்குச் சேவை செய்யணும்னுதான் ஆசை’’. ‘சிவாஜி’ ரஜினியின் அறிமுகக் காட்சிபோல ஆரம்பிக்கிறார் பால்ராஜ்.

‘‘வேலையை விட்டதும், ‘பரிசுத்தப் பறவைகள் மக்கள் நல இந்தியக் கழகம்’ (கொஞ்சம் கஷ்டமாதான் பாஸ் இருக்கு!) என்ற அமைப்பை ஆரம்பிச்சு ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செஞ்சேன். இலவசமா கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுத்தேன். ஊனமுற்றோருக்கு உதவிகள் செஞ்சேன், படிக்க வெச்சேன். 2010 நாடாளுமன்றத் தேர்தல்ல, எங்க அமைப்போட வளார்ச்சியைப் பார்த்து மு.க.ஸ்டாலின் நேரடியாகவே வந்து ஆதரவு கேட்டார். ‘அமைப்பு சார்பாக ஆதரவு கொடுத்தா நல்லா இருக்காது. தனியா கட்சி ஆரம்பிச்சுக்கிறேன். அப்புறம், கட்சிக்காரங்ககிட்ட பேசி முடிவைச் சொல்றேன்’னு சொல்லிட்டேன். அப்போதான், மக்களுக்கு நல்லது பண்ண நாம ஏன் அரசியல் கட்சி ஆரம்பிக்கக் கூடாதுனு தோணுச்சு. 2010-ல ‘ஏழைகள் முன்னேற்றக் கழகம்’னு ஆரம்பிச்சுட்டேன்!’’ என்றவர், கட்சியின் கொள்கைகளை விளக்குகிறார்.

‘‘ஸ்டாலினைச் சந்திச்சப்போ, ‘சமச்சீர் கல்வி கொண்டு வரணும்’னு கோரிக்கை வெச்சோம். இன்னைக்கு அது சாத்தியமாயிருக்கு. அதுக்குக் காரணம் நாங்கதான். மதுவிலக்கை முதல்ல பேசியதும் நாங்கதான். ஆறேழு வருடங்களுக்கு முன்னாடியே ‘வாரம் ஒருமுறைதான் மதுக்கடையைத் திறக்கணும். பார்களில் மட்டும்தான் விற்பனை நடக்கணும்’னு அறிக்கை வெளியிட்டோம். ஏழையோ, பணக்காரனோ எல்லோருக்கும் ஒரு என்டர்டெயின்மென்ட் வேணும். அதுக்குதான் இந்தத் திட்டம். மற்றபடி, ஏழைகள் முக்கியப் பொறுப்புக்கு வரணும். எல்லோருக்கும் இலவசக் கல்வி கிடைக்கணும்ங்கிறது எங்க முக்கியக் கொள்கைகள். ஏன்னா, எங்கேயுமே ஏழைகளை மதிக்க மாட்டேங்கிறாங்க. இந்த நிலைமைக்குக் காரணம் அரசியல்வாதிங்கதான். குண்டூசியில ஆரம்பிச்சு, நாம பயன்படுத்துற எல்லாமே வெளிநாடுகள்ல உற்பத்தியாகுது. அதை நாம தயாரிச்சா, வேலையும் கிடைக்கும். நாடும் முன்னேறும். யாரு பண்றா?” என்றவர், கதகளி ஆட ஆரம்பித்தார்.

‘‘ஜெயலலிதா இலவசத்தைக் கொடுத்து, அதுல ஸ்டிக்கரையும் ஒட்டிட்டுப் போறாங்க. இதெல்லாம் யாரோட காசு? நம்ம காசு. ஒரு மாநாடு நடத்த கோடிக்கணக்குல செலவு பண்றாங்க. லட்சக்கணக்குல பேனர் அடிக்கிறாங்க. இந்தக் காசெல்லாம் எங்கே இருந்து வருதுனு நினைக்கிறீங்க? நம்ம பணம் பாஸ். எந்த அரசியல்வாதியாவது சொந்தப் பணத்துல மக்களுக்குச் சேவை செய்றாங்களான்னா, இல்லை. ஆனா, தினமும் விதவிதமான போஸ்டர்ஸ் அடிச்சு ஒட்டுறாங்க. இதனால யாருக்கு என்ன பயன்? ஒண்ணும் கிடையாது. முக்கியமா, எப்பவோ இறந்துபோன தலைவர்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடுறதையே எங்க கட்சி கண்டிக்குது. எவ்வளவு பெரியத் தலைவர்களா இருந்தாலும், அவங்க மேல இருக்கிற அன்பும், மரியாதையும் மனசுல இருந்தாப் போதும். பணத்தை விரயமாக்காதீங்க. ஏன்னா, இந்தியாவுல இதுவரை அடிச்ச அரசியல் பேனர், போஸ்டர், நோட்டீஸுக்கான பணத்தை வெச்சே இந்தியாவை வல்லரசு ஆக்கியிருக்கலாம்’’ என்று கொந்தளித்து கொப்பளித்தவரிடம், ‘‘உங்க கட்சியோட  திட்டங்களைச் சொல்லுங்க’’ என்றேன்.

‘‘10,000 சம்பளம் வாங்குற சாதாரண மனுஷனை 50,000 சம்பளத்துல எம்.எல்.ஏ ஆக்குறோம். அவனும் சந்தோஷப்படுவான். மக்களுக்கும் ஏதாச்சும் நல்லது பண்ணணும்னு நினைப்பான். இதுக்கான விழிப்பு உணர்வை மக்களுக்கு முதல்ல கொடுக்கணும். விவசாயிகள் நிலத்தைத் தரிசா போடக் கூடாது. எப்பவும் ஏதாவது ஒரு பயிர் அவங்க நிலத்துல விளைஞ்சுக்கிட்டே இருக்கணும். அதுக்கு அரசாங்கம் உதவணும். எங்க அமைப்பு மூலமா கிடைக்காத அரிய வகை ரத்தங்களும் உடனுக்குடன் கிடைக்கும்படி ஏற்பாடு பண்ணியிருக்கோம். இப்பவே, ஒரு நாளைக்குப் பத்து உயிர்களையாவது காப்பாத்துறோம். இதை இன்னும் விரிவுபடுத்தணும். இப்போ, என் கட்சியில 5,000 பேர் உறுப்பினரா இருக்காங்க. விளம்பரமே இல்லாமதான் இந்தக் கூட்டத்தைத் திரட்டியிருக்கேன்’’ என்கிறார்.

ஆமா, ஏழைகளை எப்படி முன்னேற்றப் போறீங்கனு கடைசிவரைக்கும் சொல்லவே இல்லையே!

-கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick