“விஜயகாந்த் கூட்டணியை நினைச்சாப் பாவமா இருக்கு!”

தாமரைதான் சின்னம். ஆனால், ‘ஒத்த ரோசா’வாக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது பா.ஜ.க. பிரசாரத்தில் பிஸியாக இருந்த அந்தக் கட்சியின் தேசியச் செயலாளரும், தி.நகர் தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜாவைச் சந்தித்தேன். ‘‘கரன்ட் கட் ஆகி, ரொம்ப நேரம் ஆச்சு. இது போதும். இந்தத் தேர்தல்ல அந்தம்மாவுக்குப் பெரிய அடி கன்ஃபார்ம்!’’ என்றவரிடம் சில கேள்விகள்.

‘‘கூட்டணியில் இருந்து தே.மு.தி.க, பா.ம.க வெளியேறிய பிறகும் ‘இல்லை. எங்களோடதான் இருக்காங்க’னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே, இப்ப என்ன சொல்லப்போறீங்க?”

‘‘தேர்தலுக்குப் பிறகு, தப்பான முடிவு எடுத்துட்டோம்னு அவங்க வருத்தப்படப் போறாங்க. அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்னு சொல்றார். அவங்களால 40 தொகுதிகளுக்கு மேல நிற்கிற வலிமை கிடையாது. ரெண்டாவது... கூட்டணியால பலம் கிடைக்கணும்னா, ரெண்டு பேருக்கும் சமமா ஓட்டு விழுற இடங்கள் அதிகமா இருக்கணும். அதுவும் பா.ம.க-வுக்கு இல்லை. தமிழகம் முழுக்க எங்களோட ஓட்டுகளைக் கூட்டணிக் கட்சிங்கிறதுக்காக பா.ம.க-வுக்குக் கொடுக்கலாம். ஆனா, அவங்களால 40 தொகுதிகளுக்கு மேல எங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான், தே.மு.தி.க-வுக்கும், பா.ம.க-வுக்கும் ஒரு ஐடியா சொன்னோம். கூட்டணி அமைத்துப் போட்டி போடுவோம். கூட்டணியில் இருக்கிற எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடிக்குதோ, அவங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குவோம்னு. அவங்க ஒப்புக்கலை. ‘நான் முதல்வர் வேட்பாளராதான் நிற்பேன்’னு அடம்பிடிச்சா, நாங்க என்ன பண்ண முடியும்?’’

‘‘உங்க கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. எந்த நம்பிக்கையில் ஆட்சியைப் பிடிப்போம்னு சொல்றீங்க?”

‘‘அ.தி.மு.க-கிட்ட என்ன பெரிய கூட்டணி இருக்கு? தேர்தலில் வெற்றி, தோல்வி கூட்டணி சேர்ற கட்சிகளோட எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல. 1998-99 நாடாளுமன்றத் தேர்தல்ல பி.ஜே.பி-யோட 23 கட்சிகள் கூட்டணியில இருந்துச்சு. 182 இடங்கள்ல பா.ஜ.க. ஜெயிச்சுது. ஆனா, 2014 நாடாளுமன்றத் தேர்தல்ல எங்களோட இருந்தது மூணு கட்சிகள்தான். ஆனா, எங்க கட்சி மட்டும் 282 தொகுதிகள்ல ஜெயிச்சுது. எல்லாத் தேர்தலுக்கும் இந்தக் கணக்கு பொருந்தும். ஆக, எத்தனைக் கட்சிகள் இருக்காங்கனு வெச்சு ஒரு கூட்டணியோட பலம், பலவீனத்தைச் சொல்ல முடியாது. தவிர, 2014-ல எங்ககூட இருந்து, இப்போ வெளியே போயிருக்கிற கட்சிகள் பலவீனமானதுதான். தே.மு.தி.க-வுக்கு மூன்று சதவிகித வாக்குகள் இருக்கும். வைகோவுக்கு 0.5 தான். இவங்களுக்கெல்லாம் கடந்த பாராளுமன்றத் தேர்தல்ல கிடைச்ச வாக்குகள்ல பா.ஜ.க-வின் வாக்குகளுக்குப் பெரும் பங்கு இருக்கு. அதனால்... இவங்கெல்லாம் வெளியே போனதனால, எங்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லைங்கிறேன். நாங்க தனியா இருக்கோம். பலவீனமா இருக்கோம்னு சொல்றதெல்லாம் ஆதாரமில்லாத கற்பனை.’’

‘‘இது எல்லாக் கட்சிக்காரங்களும் சொல்றதுதான். இதுவரை நடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தல்ல போட்டி பலமா இருக்கு. உங்களோட ‘ஜெயிக்கிற கணக்கு’ என்ன?”

‘‘பலமுனைப் போட்டி இருக்குல்ல? இதனாலேயே பா.ஜ.க ஜெயிக்கும்னு சொல்றேன். யார் யாரோட இருக்காங்க, யாருக்கு ஓட்டு போடுறதுனு மக்களுக்கு ஒரு கணக்கு இருக்கும். அந்தக் கணக்கு எல்லாக் கட்சிகளுக்கும் பாதகமா முடியும். அப்படிப் பாதகமா முடியும்போது, எங்களுக்கு ஒரு தொகுதிக்கு 50,000 வாக்குகள் கிடைச்சாலே நாங்க ஜெயிச்சுடுவோம். ஏன்னா, எங்க கட்சியில தொகுதிக்கு 50,000 தீவிர தொண்டர்கள் இருக்காங்க.’’

‘‘மற்ற கட்சிகளோட தேர்தல் அறிக்கைகளைப் படிச்சீங்களா?”

‘‘படிச்சேன். அதுல, தி.மு.க-வோட தேர்தல் அறிக்கையை மோசடி பேப்பர்னு சொல்லலாம். 1967-ல ‘மூன்று படி லட்சியம். ஒரு படி நிச்சயம்’னு பொய் சொல்லி, ஆட்சியைப் பிடிச்சாங்களோ, அதே மாதிரி ஒரு பொய் மூட்டையை இறக்கி வெச்சிருக்காங்க. கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுக்கும்போது, ‘இது சொச்சத்தீவு, மிச்சத்தீவு, எச்சத்தீவு’னு சொன்ன கலைஞர், இன்னைக்கு எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு ‘கச்சத்தீவை மீட்போம்’னு சொல்றார்? கள்ளுன்னா என்னனு தெரியாத ஒரு தலைமுறை உருவாகிட்டு இருந்த சமயத்துல மதுவிலக்கைத் தளர்த்தி, நீக்கி, தமிழனைக் குடிக்கப் பழக்கியதே தி.மு.க-தான். இப்போ, ‘மதுவிலக்கை அமல்படுத்துவோம்’னா எப்படி நம்புறது? ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஆக்கிரமிப்பில் இருக்கிற ‘வக்பு’ சொத்துகளை மீட்டு ஒப்படைப்பாராம். ஆனால், ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கே கொடுக்க ஒரு நீதி அரசர் தலைமையில் கமிட்டி போடுவாராம். கோயில் சொத்தை சூறையாடுவதற்கு கலைஞர் யார்? கலைஞர் ஓர் இந்து விரோதி. அவரோட தேர்தல் அறிக்கை இந்து விரோத டாக்குமென்ட்!’’

‘‘சரத்குமார்?”

‘‘எனக்கென்ன தெரியும்? அ.தி.மு.க-வுல இருந்து என்ன பேரம் நடந்துச்சுனு அவர்கிட்டதான் கேட்கணும். தவிர, அவர் எங்க கூட்டணியில் சேரலை. சேர முயற்சி செஞ்சார். அது, தன்னைச் சீண்டாத அ.தி.மு.க-வை மிரட்டுறதுக்காகவும் இருக்கலாம்.’’

‘‘அவரோட கட்சி உடைய பா.ஜ.க-தான் காரணம்னு சொல்றாங்களே?”

‘‘நாலுபேர் இருக்கிற கட்சி அது. சரத்குமாரோட கட்டப்பஞ்சாயத்து பிடிக்காதவங்க, எங்க கட்சிக்கு வந்திருக்காங்க. அவ்வளவுதான்.’’

‘‘அடிக்கடி ‘உடைஞ்சுடும்’னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க. ஆனா, மக்கள் நலக் கூட்டணி உற்சாகமா செயல்பட்டுக்கிட்டு இருக்கே?”

‘‘எப்படி... விஜயகாந்த்கிட்ட இருந்து பிரிஞ்சுபோய் ‘மக்கள் தே.மு.தி.க’வை ஆரம்பிச்சாங்களே அப்படியா? இல்லை, தமிழ் மாநில காங்கிரஸ்ல இருந்து முக்கியமானவங்க எல்லோரும் திரும்ப காங்கிரஸுக்குப் போனாங்களே, அப்படியா? அந்தக் கூட்டணியைப் பார்த்தாலே எனக்குப் பாவமா இருக்கு தம்பி. விஜயகாந்தும், வாசனும் அங்கே போய்ச் சேர்ந்துக்கிட்டு தங்களோட சக்தியையெல்லாம் இழந்துக்கிட்டு இருக்காங்க. அதிலும், வைகோவோட கைராசி இருக்கே... அவரு தொட்ட ஆளுங்க எல்லோருமே வீணா போய்க்கிட்டு இருக்காங்க.’’

‘‘சரி. அடிக்கடி ‘மோடி அலை’யைக் குறிப்பிட்டுச் சொல்வீங்களே... அந்த அலை இப்போ எங்கே இருக்கு, எப்போ அடிக்கும்?”

‘‘அடிச்சுக்கிட்டுதானே இருக்கு. மோடி அரசோட திட்டங்கள்தான் இன்னைக்கு பா.ஜ.க தலை நிமிர்ந்து நிற்கிறதுக்கு முக்கியமான காரணம். மக்களும் அதை நல்லாவே உணர ஆரம்பிச்சிருக்காங்க. அவரோட அத்தனை முத்தான திட்டங்களையும் மக்கள்கிட்ட சொன்னாலே போதும். மோடி அலை இன்னும் அதிகமாகும்.’’

‘‘கூட்டணியில இருக்கிற குட்டிக் குட்டிக் கட்சிகளுக்கெல்லாம் 40, 50 தொகுதிகளைக் கொடுத்திருக்கீங்களே... அதைத் தாங்குவாங்களா அவங்க?”

‘‘ஆரம்பத்துல இருந்து எங்களோடு இருக்கிற அவங்களுக்கு நாங்க கொடுத்திருக்கிற ‘ரிவார்டு’ அது. பா.ஜ.க தொண்டர்களின் ஆதரவோட கூட்டணிக் கட்சிகளும் வெற்றியைக் குவிப்பாங்க!’’

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick