என்ன பண்ணப் போறீங்க?

ல்லாக் கட்சியும் ‘நாங்கள் தேர்தலில்  வெற்றி பெற்றால், மதுவிலக்கை அமல்படுத்துவோம்’னு குறுக்கே துண்டைப் போட்டு தாண்டுகின்றன. அதனால், யார் ஆட்சியைப் பிடித்தாலும் எப்படியும் படிப்படியாகவோ, எக்ஸ்கலேட்டராகவோ மதுவிலக்கை அமல்படுத்திடுவாங்கனு நினைக்கிறேன். அப்படி ஒருவேளை அமல்படுத்தப்பட்டால் நம் தமிழ் சினிமாவில் என்னென்ன மாற்றங்கள் வரும்? நீங்களே பாருங்க...

நம் ஹீரோக்கள் லவ் மேட்டருனு ஃபீல் ஆனால் ‘ஹாஃப்’ இல்லை, அரை மில்லிகூட அடிக்க முடியாது. போச்சா... அடிச்சிட்டு ஹீரோயின் வீட்டுக்கு முன்னால வாந்தி எடுக்கவோ, வாய்க்கு வந்ததைப் பாடவோ முடியவே முடியாது.

‘போறோம் மச்சான் போறோம் ; பாண்டிச்சேரிக்கு போறோம்’,  ‘விட்றா பாண்டிச்சேரிக்கு வண்டியை’ங்கிற மாதிரியான வசனங்கள் இனி அடிக்கடி வந்து பாயும் காதினிலே.

வில்லப் பயபுள்ளைக குண்டு வைக்க, பேங்கில் கொள்ளையடிக்க, நாசகாரத் திட்டம் போடும் சீன்கள் இனிக் குறைய வாய்ப்பிருக்கு. ஏன்னா, சரக்கு அடிச்சாதான் சில வில்லன்களுக்கு சிந்தனை சுரப்பியே ஊற்றெடுக்கும்.

ஹீரோக்கள் ரொம்ப நாளா யாருக்கும் தெரியாம மறைச்சு வெச்சிருக்கிற ரகசியங்களை ஹீரோயின்கள் முதற்கொண்டு யார்கிட்டேயும் உளற மாட்டாங்க.

மட்டி சரக்கையும், மட்டன் குஸ்காவையும் ஃப்ரெண்டுகளுக்கு வாங்கிக் கொடுத்து ஹீரோக்கள் ட்ரீட் வைக்கிற சீன்கள் வரவே வராது. அப்பாடி...

‘அருந்ததி’ படத்துல அனுஷ்கா தலையில் தேங்காய் உடைக்கிற மாதிரி, சரக்கு பாட்டில்களை நம்மாளுக மாத்தி மாத்தி மண்டையில் உடைச்சிகிட்டு மரண விளிம்பு வரைக்கும் போற சீன்களும் வராது மக்களே.

ஹீரோக்கள் எவ்வளவு பெரிய டங்காமாரி ஊதாரியா, ஊர் சுத்துற நாதாரியா இருந்தாலும் சமத்தா 9 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுவாங்க.

ஓசிக் குடிக்கு அலையற கதாபாத்திரங்கள், குடிச்சிட்டுப் பொண்டாட்டியைக் கொடுமைப்படுத்துற கதாபாத்திரங்கள்லாம் டைனோசர் இனம் மாதிரி இல்லாமப் போயிடும்.

கதையின் தேவைக்காகக் குடிக்கிற சீன் கட்டாயமாகத் தேவைப்பட்டு, எடுக்கப்பட்ட படங்களின் ஆரம்பத்தில் ‘பீரும், ரம்மும், வோட்காவும் தழைத்தோங்கிய காலத்தில் நடந்த தன்னிகரில்லா தலைவனைப் பற்றிய கதை’னு வாய்ஸ்-ஓவர் வரும்.

ஹீரோயின்கள் குடிக்கிற கூல்ட்ரிங்ஸ்ல, வில்லன்கள் சரக்கைத் தெரியாமல் கலந்து ‘புலி மான் மீது பாயும்’ ஓவியத்தைக் குறியீடாகக் காட்டும் சீன்கள் இனி வராது மக்களே... பயப்பட வேண்டாம்.

கள்ளத்தனமா சாராயம் காய்ச்சுற, கள்ளுக்கடை வெச்சு கிராமத்தையே நாசமாக்கிற வில்லன்களை இனி நிறையப் பார்க்கலாம்.

ராஜேஷ். எம்முக்கு கதை வறட்சியும், சந்தானத்துக்கு காமெடி வறட்சியும் ஏற்படலாம்.

‘ஜிகர்தண்டா தூத்’தை வீட்டில் செய்ய முற்பட்டு அதனால் ஏற்படுகிற பக்க விளைவை வைத்து சயின்டிஃபிக் த்ரில்லர் பண்றது, சுண்டக்கஞ்சி குடிக்கப் போய் சூறாவாளியில சிக்குற மாதிரியான காமெடிப் படங்கள் பண்றதுனு, இயக்குநர்களோட புதுப் புது முயற்சிகளால் தமிழ் சினிமா எங்கேயோ போயிடும். ஹி ஹி ஹி சூப்பரு...!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick