புதுசா சொல்றாங்க ‘பூவா தலையா’?

ரியாவுக்குள்ள கிரிக்கெட் விளையாடும்போது பெரும்பாலான நேரங்களில் டாஸ் போட காசு இருக்காது. அப்போ பல புதிய எண்ணங்கள் உருவாகி ‘டாஸ்’ போட மாற்று வழிகளைக் கண்டுபிடிச்சாய்ங்க. அதைப்பற்றி பார்ப்போம்...

சின்னக் கல்லு, பெத்த ஐடியா: தம்மாத்துண்டு கல்லை விரலுக்கிடையில் செருகி வெச்சுக்கிட்டு, கையை பெளலிங் போடுற மாதிரி கிறுகிறுனு சுத்தணும். சுத்துற கேப்பில் விரலை லூஸ் பண்ணிக் கல்லைப் பறக்கவிட்டாலும் சரி,  அப்படியே வெச்சிருந்தாலும் சரி... சுத்தி முடிச்சுட்டு ‘இருக்கா? இல்லையா?’னு கேட்கணும். எதிரில் இருப்பவன் விரலுக்கிடையில் கல் இருக்கா, இல்லையானு கரெக்டா சொல்லிட்டா அவன் டாஸ் ஜெயிச்சுட்டானு அர்த்தம், தப்பா சொல்லிட்டா நாம ‘டாஸ்’ ஜெயிச்சுட்டோம்னு அர்த்தம். அம்புட்டுதேன்...

நம்பர் மேலே நம்பி வையி: இதில், ஒருவன் 50 அடிக்கு அங்கிட்டுப் போய் தரையில் 1,2,3-ஐ வரிசை மாற்றி எழுதி அதன் மேல் கிரிக்கெட் பேட்டை வைத்து மறைத்துவிட வேண்டும். விசில் அடிச்சதும் மீதம் இருக்கிற அத்தனைப் பேரும் ஓடிவந்து பேட் மீது உள்ளங்கையை ‘சப்’ என வைக்க வேண்டும். இப்போது யார் உள்ளங்கைக்குக் கீழ் என்ன நம்பர் எழுதப்பட்டிருக்கிறதோ, அவர் அத்தனையாவது ஆளாகக் களமிறங்க வேண்டும். சிம்பிள்...

டாஸுக்கு டம்மி பீஸ்: டீம்ல யார் டம்மி பீஸோ அவரைக் குனிய வைக்கணும். மற்றொருவர் அவர் முதுகுக்கு மேல், குனிந்திருப்பவருக்குத் தெரியாதது போன்று ‘ஒன்று, இரண்டு’ என வரிசை மாற்றி விரல்களால் காண்பித்து ‘இது யாருக்கு?’ எனக் கேட்க வேண்டும். உதாரணத்துக்கு மூன்று விரல்களைக் காட்டி இது யாருக்கு எனக் கேட்கும்போது குனிந்திருப்பவர் ‘கார்த்தி’க்கு என்று சொன்னால், கார்த்தி மூன்றாவதாக களமிறங்க வேண்டும் என அர்த்தம். சில சமயங்களில் குனிந்திருக்கும் விஷப் பக்கிகள் நிழலை வைத்து நீங்கள் எந்த எண்ணைக் காட்டுகிறீர்கள் எனத் தெரிந்துகொண்டு கோல்மால் பண்ணக்கூடும். ஜாக்கிரதை...

ஒற்றையா, ரெட்டையா?: இரண்டு அணி கேப்டன்களுக்கும் தனக்கு ஒற்றையா, இல்லை இரட்டையானு முடிவு பண்ணிக்கணும். ஒரே நேரத்தில் இரண்டு பேரும் கை விரல்களில் ஏதேனும் ஒரு எண்ணைக் காட்ட வேண்டும். இதுக்கு டைமிங் ரொம்ப முக்கியம், நீங்க என்ன நம்பர் வைக்கப் போறீங்கனும் யாருக்கும் தெரிஞ்சுடக் கூடாது. இறுதியாக இரண்டு பேர் காட்டியிருக்கும் எண்களைக் கூட்டி அது ஒற்றைப்படை எண்ணா, இல்லை இரட்டைப்படை எண்ணா? எனப் பார்க்க வேண்டும். உதாரணமா, கூட்டு எண் ஒற்றைப்படையாக இருந்துச்சுனா, தனக்கு ஒற்றைப்படை எனச் சொன்ன கேப்டன் ‘டாஸ்’ ஜெயிச்சுட்டார்னு அர்த்தம்.

வேறு சில: இதே மாதிரி தட்டையா கல்லில் ஒரு புறம் எச்சியால் நனைத்து, சாதாரணமாக ‘டாஸ்’ போடுவது போலவே தூக்கிப் போட்டுப் பார்ப்பது. ஸ்டெம்பில் எந்த அணியினர் குறைவான பந்துகளில் எறிவதை வைத்து முடிவு செய்வது, எல்லோத்துக்கும் மேல ‘சா பூ த்ரீ’ போடுவது என மற்ற சில வழிகளும் இருக்கின்றன. இதுவரை தெரியாதவங்க, இனி முயற்சி பண்ணிப் பாருங்க...

-பசூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick