இந்த காமெடியன்களே இப்படித்தான்!

ம் ஊர் சினிமாக்களில் காமெடியன் என்றால் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு. அது இதுதான்...

அணுகுண்டே வெடிச்சாலும் காமெடியன்களுக்கு ஒண்ணும் ஆகாது. ரயிலில் கரி அள்ளிப் போடுபவர்கள் போல முகம் கருப்பா மாறியிருக்கும். அவ்ளோதான்.

காமெடியன்கள் பேயை நேருக்கு நேராகப் பார்த்தாலும் ரயில்வே கவுன்டரில் டிக்கெட் கொடுப்பவர்களைப் போல ‘என்ன வேணும்?’ என அசால்டாகத்தான் கேட்கணும். பிறகுதான் பேயிடம் பேயடி வாங்கணும்.

பேரன், பேத்தி எடுக்கும் வயதிலும் ஹீரோவின் காதலுக்கு உதவி செய்வார்கள். குல்ஃபி ஐஸ் விற்பவர்கள் போல தெருத்தெருவாய் சுற்றி ஹீரோயின் எங்கு இருந்தாலும் கண்டுபிடித்துச் சொல்லணும்.

பெரியமனுஷன் எனக்கூடப் பார்க்காமல் தும்பைப் பூவில் தூக்கு மாட்டிகொள்ளும் அளவிற்கு ஹீரோக்கள் கேவலமாகத் திட்டினாலும் வாயில் கச்சோடியைத் திணித்தது போல கம்முனு இருக்கணும்.

‘காக்கி சட்டை போட்டாலே வீரம் தானா வரும்’ என ஹீரோக்கள் ஒருபுறம் வசனம் பேச, இந்தப் பக்கம் காமெடியன்களோ சிரிப்பு போலீஸாய் சின்னப் பசங்களிடம் அடி வாங்கிக்கொண்டிருப்பார்கள்.

பெரும்பாலான காமெடியன்களுக்கு காதலோ, கல்யாணமோ கட்டத்திலேயே கிடையாது. அதையும் மீறி காதலித்தால் ஹீரோ பிரித்துவிடுவார், கல்யாணம் செய்தாலும் ‘ஒண்ணுமே’ நடக்கவே நடக்காது.

அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அரசியல்வாதிகளுக்கு பி.ஏ-வாக காமெடியன்கள்தான் இருப்பார்கள். குடி போதையிலோ, ஆர்வக்கோளாறிலோ எப்படியேனும் தன் தலைவரைப் போட்டுக் கொடுக்கணும்.

எந்த காமெடியனுக்கும் ஏ,பி,சி,டியைத் தவிர வேறெதுவுமே தெரியாது. ஆனால், ஒரு தொப்பியும், கண்ணாடியும் போட்டுக்கொண்டு ஃபாரீன் பெண்களையே கரெக்ட் செய்து விடுவார்கள்.

ஆந்த்ராக்ஸ் வந்த அடியாட்களைப் போல இருக்கும் நான்கு பேர் கொண்ட கொள்ளையடிக்கும் கும்பலில் கட்டாயம் ஒரு காமெடியன் இருப்பார். அவரும் மணிக்கு ஒருமுறை, தான் மங்குனி என்பதை நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஏதேனும் பிரச்னையில் மாட்டிக்கொண்டால் நின்ற இடத்திலிருந்தே ‘டக்’கென மாயமாகிப் போவார்கள். இப்படி கையில் பல வித்தைகளை வைத்திருப்பார்கள்.

இப்படிப் பண்றதையே பண்றதால்தான் காமெடி கடுப்பா இருக்கு. புதுசா ஏதாவது முயற்சி பண்ணுங்க ப்ளீஸ்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick