போஸ்டர் அட்டகாசங்கள்!

முன்பைவிட தமிழ் சினிமா போஸ்டர்களின் ரசனை ரொம்பவே மாறியிருக்கிறது. சிட்டியில் இருக்கும் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்களை மிரளச்செய்யும் இதே போஸ்டர்கள்தான், ஊர்ப்பக்கம் இருக்கும் டூரீங் டாக்கீஸ்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது.

மதுரைக்காரங்க ரவுசு எப்பவே தனிதான்! ‘விசாரணை’ படத்துக்காக மதுரை லோக்கல் தியேட்டர் ஒன்றில், ‘புரூஸ்லி தனுஷ் இயக்கத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கும் விசாரணை’னு விளக்கம் கொடுத்ததுகூட பரவாயில்லை. ‘போராட்டமான காவியம்’ என கேப்ஷன் கொடுத்து கெத்து காட்டினதுதான் ஹைலைட்!

சென்னையில படம் ரிலீஸான அன்னைக்கே ‘சக்ஸஸ் மீட்’ நடத்தி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துப்பாங்க. ஆனா, ஊர்ப் பக்கமெல்லாம் அது செல்லுபடியாகாது. ‘ஈடு இணையற்ற இரண்டாவது வாரம்’ என்ற பிட் நோட்டீஸைப் படத்தின் போஸ்டர்ல ஒட்டணும். அதுவே, ‘அனைவரும் போற்றும் 5-வது வாரம்’, ‘ஆர்ப்பரிக்கும் 6-வது வாரம்’னு தொடர்ந்தா மட்டும்தான் அது ஹிட் படம். இல்லைனா, அட்டர் ஃப்ளாப் என்பதுதான் கிராமத்துக் கணக்கு!

சென்சார் போர்டுல கொடுக்கிற சர்டிஃபிகேட்லேயே ‘ஏ’ என்ற எழுத்தைச் சின்னதாதான் போடுவாங்க. ஆனா, டூரிங் டாக்கீஸ் சார்பாக ஒட்டுற போஸ்டர்களில் எல்லாம் படத்தோட தலைப்பைவிட ‘ஏ’ங்கிற எழுத்தைப் பெருசா போட்டாதான் பிச்சுக்கிட்டு ஓடுமாம்!

ஒரு படத்துக்கு என்னதான் கலர்ஃபுல்லான போஸ்டர்களை அடிச்சுக் கொடுத்தாலும், டூரிங் டாக்கீஸுக்காகவே ஸ்பெஷலா உருவாக்கப்பட்ட ‘சாணித்தாள்’ போஸ்டர்களை அடிச்சுப் படத்தை விளம்பரப்படுத்துறதுதான் இன்னைக்கு வரைக்கும் தொட்டுத் தொடரும் வழக்கம். இதுல, ‘அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை’, ‘ஸ்ரீ சடையப்ப மூர்த்தி துணை’னு குலசாமிகளையும் இழுத்துவிடும் வேடிக்கையும் நடக்கும்!

சமயத்துல டூரிங் டாக்கீஸ் போஸ்டர்களும், ஊரெங்கும் ஒட்டியிருக்கும் ‘மூலம் பெளத்ரம்’ போஸ்டர்களும் ஒரே மாதிரி இருக்கும் என்பதால், மஞ்சள், பச்சை, ரோஸ்னு கலந்து கட்டிய போஸ்டர்கள் ஒட்டுவாங்க. இப்போ ‘மூலம் பெளத்ரம்’ போஸ்டர்களும் வெரைட்டி கலர்ல ஒட்ட ஆரம்பிச்சுட்டதனால, பொறுமையா படிச்சுப் பார்த்துதான் படத்துக்குப் போகவேண்டியிருக்கு!

இப்போவெல்லாம் வாரத்துக்கு ஏழு படம் ரிலீஸாகுது. ஆனா, படம் ஓடுதா இல்லையானு தியேட்டருக்குப் போனாதான் தெரிஞ்சுக்க முடியும். அந்தச் சிரமமெல்லாம் ஊர்ப்பக்கம் இருக்கிற டூரிங் டாக்கீஸ்ல இருக்காது. ஏன்னா, ஒவ்வொரு படத்தையும் தூக்குறதுக்கு முன்னாடி, ‘நாளை இப்படம் கடைசி’னு முதல் நாளும், ‘இன்றே இப்படம் கடைசி’னு ரெண்டாவது நாளும் சம்பந்தப்பட்ட சினிமா போஸ்டர்லேயே குட்டி நோட்டீஸா ஒட்டி, விழிப்பு உணர்வு கொடுப்பாங்க. இந்த விஷயத்துலதான் நீங்க எங்கேயோ போறீங்க!

இது தவிர, ஹீரோயின் கவர்ச்சியான டிரெஸ்ஸுல இருந்தா, அதுக்கு மேல இரண்டு ‘தினசரி 4 காட்சிகள்’ நோட்டீஸை ஒட்டிவிட்டு எதிர்பார்ப்பைத் தூண்டுறது, தியேட்டர் பெயரோட ஊர், ஏரியா பெயரையும் சேர்த்து போஸ்டர் அடிக்கிறது, ‘படத்தின் ஆரம்பக் காட்சியைத் தவறவிடாதீர்கள்!’னு அதிர்ச்சி கொடுக்கிறதுனு இத்துனூண்டு போஸ்டர்ல எக்கச்சக்கமான இன்ஃபர்மேஷனைக் கொட்டி வெச்சிருப்பாங்க!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick