பயமே பயப்படும்!

பேய் படம் பார்க்கப் போயிட்டு பயப்படாம தியேட்டரைவிட்டு வர்றதுக்கெல்லாம் தனி தில் வேணும். அதுக்கு நாம எங்கே போக? இப்படித்தான் எதையாவது செஞ்சு நாம பயந்த விஷயத்தை வெளியே காட்டிக்காம மேட்ச் பண்ணணும்.

முதல் வேலையா தியேட்டருக்குள் நுழையறதுக்கு முன்னாடியே பால்சர்பத், பாதாம்கீர், பன்னீர் சோடானு கல்ப் கல்பா கலந்து அடிச்சுடணும். அதன் பிறகு நடக்கிறதையெல்லாம் நாம உள்ளே விட்ட திரவங்கள் பார்த்துக்கும். நம்ம நண்பர்களே பாவப்பட்டு பாத்ரூமுக்கு நம்மளை வழியனுப்பி வெச்சுடுவாங்க.

படத்தோட ஹீரோ, ஹீரோயின்ல ஆரம்பிச்சு அவங்க வீட்ல வளர்க்கிற நாய், பூனை வரைக்கும் யாரை ஸ்க்ரீன்ல பார்த்தாலும் கைதட்டி, விசில் அடிச்சு அலறணும். அப்போதான் ஒருவேளை நாம பயத்தில் அலறினாலும் கடைசியா ஒரு விசிலைப் போட்டு ‘செம சீன்ல...’ என பக்கத்தில் இருப்பவன் தொடையில் குத்தி மேட்ச் பண்ணிடலாம்.

பேய் படம் பார்க்கிறோம்கிற பீதியை எக்காரணத்தைக் கொண்டும் முகத்தில் காமிச்சுடவே கூடாது. கல்யாண வீட்டில் உட்கார்ந்திருப்பது மாதிரி சிரிச்ச முகமா மூஞ்சியை வெச்சுக்கணும். கேஷூவலா கன்னத்துல கை வெச்சுருக்கிற மாதிரி காதைப் பொத்திக்கணும். ஏன்னா, சவுண்ட் எஃபெக்ட் இல்லாம, பேய்ப் படங்களைப் பேயின் மடியில் படுத்துப் பார்த்தாலும் பயமா இருக்காது.

படம் ஆரம்பிக்கும்போதும் சரி, முடியும்போதும் சரி பக்கத்துல இருக்கிறவன்கிட்ட ‘என்னடா இது பயமே இல்லை...’னு சோகமா சொல்லி வெச்சுடணும். இந்த டயலாக் எந்த அளவு பலன் கொடுக்கும்னா ‘ஒரு வேளை இவனே பேயா இருப்பானோ?’ என நம்ம நண்பர்கள் நம்மைப் பார்த்தே பயப்பட ஆரம்பிச்சுடுவாங்க.

எப்போதும் சென்டர் சீட்டா பார்த்துதான் புக் பண்ணணும். இல்லைனா ‘பயந்தவன் கண்ணுக்கு பாப்கார்ன் விற்கிறவன்லாம் பேய்’ங்கிற மாதிரி இன்டர்வெல்லுக்கு ஸ்நாக்ஸ் ஆர்டர் எடுக்க வர்றவரின் நிழலைப் பார்த்துக்கூட அலற ஆரம்பிச்சுடுவோம். அக்காங்.

சீட்ல உட்கார்ந்ததும் சுற்றி ஏதாவது அழகான பொண்ணு இருக்கானு கேமராவை சுற்ற விடணும். எப்படியும் ஒரு பொண்ணு அனுஷ்கா மாதிரியே இருக்கும். அப்படியே புரொபோஸ், காதல், கல்யாணம்னு கனவிலேயே கஜகஸ்தானுக்கு ஹனிமூன் போயிடணும். சாத்தானே நேர்ல வந்து நம்மை ‘சப்’னு அறைஞ்சாலும் நமக்கு ஒரு சொரணையும் இருக்காது.

ஒருவேளை இது எல்லாத்தையும் மீறி ‘அய்யய்யோ...’னு அலறிட்டோம்னா, தொடச்சியா ‘ஆனந்தமே... நெஞ்சுக்குள்ள ஆரம்பமே...’னு எட்டுக்கட்டையில் பாட ஆரம்பிச்சடணும். நாம பயப்படாம ரொம்ப ஜாலியா உட்கார்ந்து படம் பார்க்கிறோம்னு தியேட்டரே நம்மைத் திரும்பிப் பார்க்கும். நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்