ஆடி மாதம் வந்தால்...

டி மாசத்து சில அலப்பறைகள் பார்க்கலாமா...?

காலையில ஆறு மணிக்கு மட்டுமே டி.விகள்ல ஓடிக்கிட்டு இருந்த ‘தேவி கருமாரியம்மா... தேடிவந்தோம் உன்னையம்மா’ பாடல்கள்லாம் முழு நேரமும் சேனல் சேனலா ஓடிக்கிட்டு இருக்கும். ராம நாராயணன் படங்கள் எல்லாம் மொத்தக் குத்தகைக்கு எடுத்து டி.வி-கள்ல போட்டுக்கிட்டு இருப்பாங்க.

‘ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு மாலை நேரம் வந்தால் பாட்டுப்பாடும் வயசு’ங்கிறதெல்லாம் வெறும் பாட்டுதான் மக்களேய்ய்ய். ஜூலையிலதான் ஆடி வருது; ஆனா ஆடி பொறந்துருச்சுனா புதுசா கல்யாணம் பண்ணின இளம் ஜோடிகளையெல்லாம் பிரிச்சு வெச்சுருவாங்க. வைஃபை இருந்தும் பாஸ்வேர்டு தெரியாம உட்கார்ந்து இருக்கிற மாதிரி தனித்தனியா ஃபீல் பண்ணி மிஸ் யூ டியர், லோன்லி டியர்னு சாட் பண்ணிக்கிட்டு காலண்டர் தேதியை எண்ணிக்கிட்டு இருப்பாங்க.

ஆடி மாசம் பொறந்துருச்சுனா வீட்டுக் கூரை வரைக்கும் குழாய் ரேடியோ ஆக்கிரமிச்சு சீர்காழி கோவிந்தராஜனும், எல்.ஆர். ஈஸ்வரியும் மொத்த ஏரியாவிலும் தாண்டவம் ஆடிக்கிட்டு இருப்பாங்க. என்ன ஒண்ணு, ஹோம் ஒர்க் செய்யலையா, அரியருக்குப் படிக்கலையா?னு  வீட்டில் கேட்டால் இந்தச் சத்தத்துல எப்படிப் படிக்கிறதுனு சப்பைக் காரணம் சொல்லி சமாளிச்சு இன்னும் கொஞ்சம் நேரம் இழுத்துப் போர்த்திகிட்டுத் தூங்கலாம்.

துணிக்கடையிலேயும் பாத்திரக் கடையிலேயும் மட்டும்தான் முன்னாடில்லாம் தள்ளுபடி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. இப்போ செல்போன் வாங்கினா பேட்டரி ஃப்ரீ, ஸ்டவ் வாங்கினா லைட்டர் இலவசம் வரைக்கும் ஆரம்பிச்சுட்டாங்க. பேட்டரியோட இருந்தாத்தானே அது செல்லு? ஆமா, வாங்குறது கேஸ் ஸ்டவ்னா  லைட்டர் கொடுக்கிறது ஓகே. மண்ணெண்ணெய் ஸ்டவ்வுக்கு எல்லாம் எதுக்குய்யா லைட்டரு?

ஆடி மாதம்னா திருவிழாவைச் சொல்லாம விடலாமா? கிட்டத்தட்ட அம்புட்டு ஊர்லேயும் கரகாட்டம், நாடகம், கச்சேரினு வெச்சு அதில் வம்பிழுத்து வாயில் வெட்டு வாங்கலைனா சில பேருக்குத் தூக்கமே வராது. ஆளே கிடக்கலைனாலும் அவிய்ங்களுக்குள்ளேயாவது கட்டி உருண்டு சட்டை போட்டு காலையில் எழுந்திரிச்சு ஒண்ணா டீ குடிக்கப் போவாய்ங்க. எப்போதான் திருந்துவீங்க ராசாக்களே?

ஆடியில் காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கிறதெல்லாம் இப்போ நடக்குதோ இல்லையோ... கண்டிப்பா  வயல்காடுகளில் விதைக்க ஆரம்பிச்சுடுவாங்க. எல்லா மாசமும் சோறு தின்னாலும் விவசாயத்தை ஆரம்பிக்கிறது இந்த மாசத்துலதான்.

இன்னொரு ஹேப்பியான விஷயம் என்னன்னா காணாமல் போன அத்திப்பட்டியை அஜித் திரும்ப கொண்டுவந்த மாதிரி காணாமல் போன பாவாடை, தாவணியை ஊர்த்திருவிழாக்கள்  மூலமா திரும்பக் கொண்டுவர்றது இந்த ஆடி மாசம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்