“எது கிடைச்சாலும் படம் எடுப்பேன்!”

``குறும்படம் எடுக்கணும்னு ஆசைப்படுறவங்களுக்குப் பெரும் பிரச்னையே கேமராதான். நல்ல கதையைக் கையில் வெச்சுக்கிட்டு கேமராவுக்காகக் காத்துக்கிட்டு இருக்கிற எத்தனையோ குறும்பட இயக்குநர்களைப் பார்த்திருக்கேன். அவங்களுக்கெல்லாம் ஒரு மோட்டிவேஷன் கொடுக்கலாம்னுதான் இந்த முயற்சி!'' என்கிறார் குறும்பட இயக்குநர் அய்யனார். திரைப்படங்களுக்கான பிரத்யேக கேமராவை மட்டுமே அல்ல, சி.சி.டி.வி, வெப் கேமரா, கோப்ரோ கேமரா, ஹெலிகேம், பென் கேமரா, மொபைல்... என `கேமரா' என்ற ஒன்று இருந்தாலே அதில் குறும்படம் எடுக்கிறார் இவர்.

``சொந்த ஊர் சென்னைதான். இதுவரை 16 குறும்படங்கள் இயக்கியிருக்கேன். சின்ன வயசுல இருந்தே சினிமாவில் பெரிய இயக்குநரா வரணும்னு ஆசை. ஸ்கூல் படிக்கும்போது கேமரா மொபைல்ல சும்மாக்காச்சும் பசங்களைக் குறுக்கநெடுக்க நடக்கவிட்டு, ஓடவிட்டுப் படம் எடுப்பேன்.காலேஜ் படிக்கும்போதுதான் குறும்படங்கள் பண்ணா, நிறையப் போட்டிகள்ல கலந்துக்கிறதோட, வாய்ப்புகளும் கிடைக்கும்னு தோணுச்சு. வழக்கமான காதல், நட்புனு குறும்படங்களுக்கே உரிய ஏரியாவைக் கையில எடுக்காம, வித்தியாசமான கான்செப்ட்ல குறும்படங்கள் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். முதல் குறும்படம் `ட்விஸ்ட்'. நமக்குப் பிடிக்காதவங்களைப் பழிவாங்க, நாமே நேரடியா களமிறங்காம, அடுத்தவங்க மூலமா காரியத்தைச் சாதிப்போம்ல? அதுதான் கதை. பிறகு இந்தக் குறும்படத்தோட தொடர்ச்சியை எடுத்தேன்'' என்றவர், தொடர்ந்து...

``நான் இயக்கிய 16 குறும்படங்களுக்கும் செல்போன், டிஜிட்டல் கேமரா, கல்யாண வீடியோ கேமரா, ஹெலிகேம், ஹாண்டி-கேம், வெப்-கேமரா, பென்-கேமரா... இப்படிப் பல கேமராக்களைப் பயன்படுத்திட்டேன். கொஞ்சம் கிறுக்குத்தனமாதான் இருக்கும். ஆனா, இதிலும் குறும்படங்கள் எடுக்கலாம்னு மத்தவங்களுக்குக் காட்ட எனக்கு வேற ஐடியா தெரியலை. தவிர, இப்போ இருக்கிற டெக்னாலஜிக்கு எந்த கேமராவில் படம் எடுத்தாலும், அதைப் பெரிய திரையில் திரையிடுற அளவுக்கு மாத்திக்கலாம். அந்தளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திடுச்சு. அதனால, குறும்படம் எடுத்து சினிமாவில் சாதிக்கணும்னு ஆசைப்படுறவங்க, கேமராவுக்காகக் காத்திருக்காதீங்க'' என்று சொல்லும் அய்யனார், இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் 'செல்வம் பூனை' குறும்படத்தை சி.சி.டி.வி கேமராவை வைத்து எடுத்திருக்கிறார்.

`இந்த மாதிரி பண்றதனால, யாரும் பண்ணாததைப் பண்ணிட்டோம்னு ஒரு திருப்தி கிடைக்கும். கூடவே, சி.சி.டி.வி கேமராவை வீட்டுத் தேவைக்கும் பயன்படுத்திக்கலாம். ஒரே ஒரு கஷ்டம்தான். எந்தக் காட்சியையும் மானிட்டர் பார்க்க முடியாது. நாமளே குத்துமதிப்பா,  30, 40 டேக் எடுத்து வெச்சுக்கிட்டு அதில் எது பெஸ்ட்டோ, அதைப் பயன்படுத்திக்கலாம்.  இந்த  'செல்வம் பூனை' குறும்படத்தோட கதையை, ஒரு சந்தர்ப்பத்துல க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் சார்கிட்ட சொன்னேன். `இந்தக் கதைக்கும், என்னோட வாழ்க்கைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கு தம்பி'னு சொன்னதோட, முதன்முறையா அவர் இதில் நடிச்சிருக்கார். செல்வம் என்ற எழுத்தாளருக்கும் அவருடைய பூனைக்கும் இடையிலான கதை இது. இது என்னோட 17-வது குறும்படம். 25 குறும்படங்கள் இயக்கிட்டு, சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கணும்னு ஆசை. அதுக்கான முயற்சிகளும் பண்ணிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமே ஜெயிச்சுடலாம்'' தம்ஸ்-அப் காட்டி முடிக்கிறார், அய்யனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்