சினிமால்

*கவர்ச்சி தூக்கலாக இருக்கும் ராம் கோபால் வர்மா படத்தில் அறிமுகமானாலே உடனே ஃபேமஸ் ஆகி விடுவார்கள் நாயகியர். அப்படி இருந்தும் ‘சத்யா 2’-ல் அறிமுகமான அனைகா சோடி இன்னும் வெற்றி பெறவேயில்லை. இடையில் ‘காவியத்தலைவன்; படத்தில் கெஸ்ட் ரோல் போன்ற ஒரு ரோலில் நடித்தார். தற்போது அதர்வாவின் ‘செம போத ஆகாத’ படத்தில் பாலியல் தொழிலாளியாக மிகவும் துணிச்சலாக நடித்திருக்கிறார். இதற்கு ஏன் அனைகா எனக் கேட்டால், மயக்கும் இடைதான் காரணம் என்கிறார் இயக்குநர். இடையால் ஒரு வாய்ப்பு!

*ந்தானத்தைப் பிரிந்து வழக்கமான காமெடிப் படங்களிலிருந்து மாறி, வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது யூ-டர்ன் அடித்து மீண்டும் அதே காமெடிப் பாதையில் இன்னும் வேகமாக பயணிக்கப் போகிறார். எழில், கௌரவ் படங்களைத் தொடர்ந்து பொன்ராமிடம் இணை இயக்குநராக இருந்த தளபதி என்பவரின் காமெடிக் கதையில் நடிக்க இருக்கிறார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்க, இமான் இசையமைக்கிறாராம். மூன்று படங்களிலுமே சூரிதான் உதயநிதிக்கு காமெடி பார்ட்னராம். மீண்டும் சில காமெடி கதைகள்!

*பீப் பாடல் சர்ச்சையில் பாடலை உருவாக்கியவர்களைத் தூக்கிலிட வேண்டும் எனக் காரசாரமாகப் பேசி போர்க்கொடி உயர்த்திய ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம். இயக்குநர் ஆதிக், அந்தக் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்தால் நல்லாருக்கும், ஆனா சிம்புவுக்கும் அவருக்கும் பிரச்னை ஆச்சே என யோசித்தாராம். இதைக் கேள்விப்பட்ட சிம்பு, ஒய்.ஜி.மகேந்திரனுக்கே போன் செய்து எந்த ஈகோவும் இல்லாமல் பேசி சம்மதம் வாங்கிவிட்டாராம். மானஸ்தனைக் காணோம்!

*தொடர் தோல்விப் படங்களாலும், வயது ஏறிக்கொண்டே போவதாலும் பட வாய்ப்புகள் குறைகிறதே எனக் கவலையில் இருந்தாராம் காஜல் அகர்வால். இதனால் தாராள கவர்ச்சிக்குத்தான் ரெடி என சொன்னது மட்டுமல்லாமல், தான் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரு நீச்சல் காட்சியில் இரண்டு நாட்கள் தண்ணீரிலேயே மிதந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். தற்போது அம்மணிதான் சிரஞ்சீவி, அஜீத் படங்களின் நாயகி. இனி கவர்ச்சியில் மிதக்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick