மும்பையில் ஒரு டிமான்ட்டி காலனி

`அரே...ரொம்ப ஓவரா சேட்டை பண்ணினா ஆரே மில்க் காலனியில் கொண்டுபோய் விட்டுட்டு வந்துடுவேன்' - பிஸியான மும்பை நகரில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இப்படித்தான் பல வருடங்களாகபயமுறுத்தி வருகிறார்கள். `ஆரே பால் பண்ணை' பல வருடங்களாக இப்படித்தான். அதென்ன பால் பண்ணை?

மும்பையின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் கோரிகான் பகுதியில் 1287 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் காட்டுப்பகுதிதான் ஆரே! 1949ல் நேருவால் துவங்கப்பட்ட இந்தப் பால் பண்ணை 16 சதுர கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப்பகுதியைக் கொண்டது. பால் பண்ணை மற்றும் கால்நடை ஆராய்ச்சிக்கூடம், தனியாருக்குச் சொந்தமான ரெஸ்ட்டாரென்ட், படகுக் குழாம், சிதிலமான கால்நடைக் கல்லூரி கட்டடங்கள், சோட்டா காஷ்மீர் எனப்படும் தோட்டம் மற்றும் குட்டி ஏரி, பலவகையான மரங்கள், ஆள் அளவுக்கு உயரம்கொண்ட புற்கள், சில காட்டு விலங்குகள் என அந்த வனாந்திரமே பயமுறுத்துகிறது. 16,000 கால்நடைகள் அந்தக் காட்டுப்பகுதியில் மேய்க்கப்படுவதாகப் புள்ளி விபரம் சொல்கிறது. மிக முக்கியமாக பாலிவுட்டின் த்ரில்லர் படங்களுக்கான லொக்கேஷனாக இந்த இடம் பல வருடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 640 ஊழியர்களுடன் கால்நடைக்காகவும் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆரே காலனியில்  பிமல் ராயின் `மதுமதி' என்ற பாலிவுட் படம் 1957-ல் எடுக்கப்பட்டது. அதன்பிறகு பாலிவுட்டின் பல பேய்ப் படங்கள் இங்குதான் எடுக்கப்படுகின்றன.

சில வருடங்களுக்கு முன் யாரோ சிலர், இரவு நேரத்தில் சோட்டா காஷ்மீர் ஏரிக்குப் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்கு நடுவே ராத்திரி நேரத்தில் தலையில்லா முண்டம் ஒன்று நடமாடுவதாகக் கொளுத்திப்போட்டு விட்டார்கள்.  இப்போது 6 மணியானால் ஊழியர்களைத் தவிர எல்லோரும் வெளியே கிளம்பி வந்து விடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick