மோடி 15 லட்சம் டெபாசிட் செய்வதாய் எப்போது சொன்னார்? | Vanathi Srinivasan Interview - Timepass | டைம்பாஸ்

மோடி 15 லட்சம் டெபாசிட் செய்வதாய் எப்போது சொன்னார்?

‘ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற பிரதமரின் அறிவிப்பு குறித்து, நடிகர் விஜய் கருத்து கூற, ‘`தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அளவு போக, மீதியை ஏழைகளின் `ஜன்தன்' வங்கிக் கணக்கில் போட்டால், ஏழை மக்களின் வேதனை, துயரம் நீங்க உதவியாக இருக்கும்’’ எனத் தடாலடி பதிலடி கொடுத்தார் வானதி. சமூக வலைதளங்களில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக்கொண்டிருக்க, ``தான் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை’’ என கெத்து காட்டுகிறார், வானதி. அவரிடம் பேசினேன்.

‘`ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு திட்டமிடப்படாதது என எழும் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில்?”


``இவ்வளவு பெரிய நாட்டை ஆளும் மோடி, திட்டமிடாமல் செய்திருப்பாரா? கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் திணறுபவர்களுக்குத்தான், இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும். இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தத் தினந்தோறும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். `நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது. அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள்' என்றுதான் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.''

‘`முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘இந்தத் திட்டத்தால் கறுப்புப் பணம் ஒழியாது. அடுத்த ஆண்டுவரை பணத்தட்டுப்பாட்டுப் பிரச்னை நீடிக்கும்’ என்கிறாரே?”

``பத்து ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்து, நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்திருந்து, கறுப்புப் பணத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்று சொன்ன காங்கிரஸ் கட்சியை மக்கள் துாக்கி எறிந்துவிட்டார்கள். மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை மோடிக்குத்தான் உள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிக்க அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? செயல்படாத நிதி அமைச்சராகத்தான் அவர் இருந்தார். ‘எதுவும் முடியாது’ என்று சொன்னதால்தான், மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். ‘முடியும்’ என்று சொன்னதால்தான், நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்!''
 
‘`அதுசரி... கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவரது வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் ஆகும் என்றாரே?”


``நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் டெபாசிட் செய்யும் அளவுக்குக் கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருப்பதாக எங்களுக்கு அப்போது தகவல் வந்தது. அந்தப் பணத்தை இந்தியா கொண்டுவந்தால், ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் இருக்கும் அளவுக்குக் கறுப்புப் பணம் இருக்கிறது என்றுதான் மோடி சொன்னார். ஆனால், காங்கிரஸ் திரும்பத் திரும்ப ‘15 லட்சம் வங்கிக் கணக்கில் போடவில்லை’ என்று சொல்லிவருகிறது. இது ஒரு பொருளாதார நடவடிக்கை என்பதைக் காங்கிரஸ் புரிந்துகொள்ளவேண்டும்!''

‘` ‘ஜன்தன்’ வங்கிக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட இருப்பதாக வரும் தகவல்?”

``மோடியை இத்தனை நாள் ‘பணக்காரர்களுக்கான ஆள்’னு சொன்னாங்க. இப்போ, ஏழைகளைக் கொஞ்சம் கொஞ்சமா வங்கிப் பக்கம் கொண்டு வர்றார். 60 வருடமா ஏழைகளுக்கான திட்டங்களை பலரும் முன்வெச்சிருக்காங்க. அந்தத் திட்டங்கள் எல்லாம் வறுமையை ஒழிக்கிறதுக்குனுகூட சொன்னாங்க. அந்த 60 வருடத் திட்டங்கள் எல்லாம் இப்போதான் சாத்தியமாகுது! ஏழைகளுக்கான மானியங்கள் வங்கிகள் மூலம் நேரடியாக ஏழைகளுக்கே போறதால, இடைத்தரகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறாங்க. இவ்வளவு நாள் ஏழைகளை வைத்துப் பணம் சம்பாதிச்சவங்கதான், இந்த நடவடிக்கையால பாதிக்கப்பட்டு மோடி மீது அவதுாறு பரப்புகிறார்கள். சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொண்டால், கண்டிப்பாகப் பலன் அளிக்கும். இது இந்தியாவில் நடைபெறும் பொருளாதாரப் போர்!''

‘`இதே நடவடிக்கைகளுக்கு இடையேதானே பல தொழிலதிபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது?”


``அது வாராக்கடன் என்றுதான் சொல்லியிருக்காங்க. தவிர, அந்த நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்! பெரிய நிறுவனங்கள்தான் நாட்டை மேம்படுத்தும் என்று பல நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடியைக் கடனாக வழங்கியது. ஆனால், நாங்கள் ‘மேக் இன் இந்தியா’ மூலமாக, ‘முத்ரா’ திட்டங்கள் மூலமாக சிறு, குறு தொழிலாளர்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொடுத்திருக்கோம். ஏன்னா, அவங்களாலதான் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது. ஆறு மாதத்திற்கு முன்புதான், வாரக்கடன் வைத்துள்ள நலிவடைந்த நிறுவனங்களையெல்லாம் விற்று, வாரக் கடன்களைக் கொண்டுவருவதற்கான தனிச் சட்டவடிவை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. தவிர, நஷ்டமடைந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களையும் அரசாங்கம் கருத்தில்கொண்டு, நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது. அரசுத் துறை நிறுவனங்களை இயக்குவதே அரசுக்குச் சிக்கலாக இருக்கும்போது, தனியார் துறை நிறுவனத்தையும் அரசாங்கம் ஏற்று நடத்துவது சிரமம் என்பதால், கடன் தள்ளுபடி என்பது, ஒரு நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு!

‘`நடிகர் விஜய்யின் கருத்துக்கு..?”

(கேள்வியை முடிக்கும் முன்பே) ``அதைப் பற்றி நான் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கருத்துக்கான எதிர்க் கருத்தை, தரக்குறைவாக விமர்சனம் செய்தால், நான் என்ன செய்யமுடியும்? நான் என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவுதான்!''

- அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick