குழந்தைகளா இதுக..?

வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்களைப் பல விஷயங்களில் கோத்துவிட்டுக் கும்மியெடுப்பார்கள். அப்படிச் சில அசால்ட் தருணங்கள்தான் இவை...

சில்லறை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு, ரெண்டு சின்ன வெங்காயம் வாங்கிவரச் சொல்லிப் பக்கத்து வீட்டிற்குக் குழந்தையை அனுப்பினால், அதுவும் போய், ‘அம்மா வெங்காயம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க...’ என பவ்யமாகச் சொல்லும். சும்மா இருக்க முடியாமல், ‘அம்மா வேற என்ன சொன்னாங்க’னு கேட்டுட்டாப் போச்சு. ‘அந்தக் கொரங்கு கொடுக்கலைன்னா அடுத்த வீட்டுல போய்க் கேளுனு சொன்னாங்க’னு வெடியைத் தூக்கி வாயிலேயே போட்டுடும். என்னா வில்லத்தனம்?

வெளியூருக்குப் போக டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், அம்மாக்கள் திடீரென முரட்டுப் பாசத்தில் குழந்தையைத் தூக்கி மடியில் உட்கார வைத்து கண்டக்டர் பார்க்கும் படிக் கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். சரி சின்னப்புள்ள போலன்னு அரை டிக்கெட் போடலாமேனு ‘ஆமா... பாப்பாவுக்கு எத்தனை வயசு?’ எனக் கேட்பார் கண்டக்டர். ‘ஒண்ணாவது படிக்குது’னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளேயே ‘மூணாவதுதானம்மா படிக்கிறேன்’னு ஒரே போடா போட்டுவிட்டுட்டுப் போய்டும் பக்கிகள்.

வீட்டில் ஹோம் வொர்க் செய்யும்போது தூங்கித் `தொபுக்கடீர்'னு புக்லேயே விழுறதைப் பார்த்துப் பாவமேனு பரிதாபப்பட்டு, கையைப் பிடிச்சு எழுத வெச்சா அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலே போய் டீச்சர், ‘நீ எழுதுன மாதிரி இல்லையே’னு லேசா அதட்டிக் கேட்டாலும், அரிச்சந்திரனுக்குப் பக்கத்து வீட்டுப்புள்ளை மாதிரி உண்மையை ஒரு வரி விடாமல் சொல்லி சரண்டராகி நம்மைக் குற்றவாளிக் கூண்டுல நிறுத்திடுவாய்ங்க. பாவம் பார்க்காதீக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick