இப்படியும் நடக்குமோ?

காலையில் ஆறு மணி இருக்கும். குக்கர்ல கோழி கொக்கரக்கோன்னு கொதிச்சிச்சா, நான் எழுந்திரிச்சுப் போய் டி.வி சுவிட்ச்சைப் போட்டேன். ஆயிரத்தி எட்டாவது முறையாக சென்னை விமான நிலையக் கூரை விழுந்ததுன்னு தலைப்புச் செய்தி ஓடிக்கிட்டிருந்துச்சு.

தலைப்புச்செய்தி முடிஞ்சதும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி பேரனும் மீனா மகளும் நடிக்கிற துணிக்கடை விளம்பரம் போட்டாங்க. அப்படியே போனை எடுத்து ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணிப் பார்த்தா, வழக்கம்போல ஒரு குரூப் அண்ணாச்சி பேரனைக் கலாய்ச்சு மீம்ஸ் கிரியேட் பண்ணிப் போட்டுக்கிட்டும், சாதிச் சண்டையில் பிஸியா ஒரு குரூப்பும், 23 தடவை போட்டோஷாப்ல எடிட் பண்ணின ஒரு பொண்ணோட போட்டோவுக்கு `நைஷ் டோழி', `ஆசம் டோழி'னு ஒரு ஆல் பர்பஸ் குரூப்பும், மொட்டை மாடியிலும் முட்டுச்சந்துலேயும் உட்கார்ந்து எழுதிய தத்துவத்தைப் போட்டு, இதை அப்துல்கலாம் சொன்னார்; காந்தித் தாத்தா சொன்னார்னு ஒரு குரூப்பும், பரோட்டாவுக்கு சால்னா ஊத்திதான் சாப்பிடணும் என்பது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்? சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்னு ஒரு குரூப்பும், காலை வணக்கம் மற்றும் வாழ்த்துப் பதிவுல இன்னொரு குரூப்பும் பிஸியா இருந்துச்சு.

ஏன்யா உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிறவங் களுக்குப் பிறந்தநாள் வாழ்த்தோ, கல்யாண வாழ்த்தோ சொல்ற துல ஒரு நியாயம் இருக்கு. அதை விட்டுட்டு ஃப்ரெண்டோட ஒண்ணுவிட்ட கொழுந்தியா மகளோட பேரனுக்கு வாழ்த்துகள்னு காலையிலயே கடுப்புகளைக் கிளப்பாதீங்க ஒறவுகளே!

இவங்க இப்படித்தான், சரின்னு ட்விட்டருக்குள்ள போனா, ஒரு பக்கம் மன்னை சாதிக், `ஹன்சிகாகூட நடிக்க உதவி பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்'னு கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணிக்கிட்டும், மறுபக்கம் தல- தளபதி ரசிகர்கள் மாத்தி மாத்தி உருண்டு புரண்டு கலாய்ச்சிக்கிட்டும் திரியிறாய்ங்க. அட கண்றாவியே... திருந்துங்கய்யா டீ வாங்கித் தர்றோம்னு போன வேகத்துல ட்விட்டரை லாக் அவுட் பண்ணிட்டு வெளியே வந்து வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணினா...

நாம ஆயிரத்தி ரெண்டாவது உறுப்பினரா சேர்ந்த, ஒரு அஜால் குஜால் வீடியோ மட்டுமே போடுற குரூப்புல, ஏற்கெனவே அனுப்பிய வீடியோவையே திரும்ப அனுப்பி வெச்ச குற்றத்துக்காக இரண்டு உறுப்பினர்கள் `சன்னிலியோன் பேரவை' வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

`டிங்டாங் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள ஆறு வயது சிறுமிக்கு ஓ பாசிட்டிவ் வகை ரத்தம் உடனடியாகத் தேவை, தொடர்புக்கு'னு ஒரு நம்பரையும் போட்டிருந்த ஒரு மெசேஜை ஃப்ரெண்டு அனுப்பினார். சரி நமக்கு ஓ பாசிட்டிவ்தானே உதவி செய்யலாம்னு அந்த நம்பருக்கு போன் பண்ணி விசாரிச்சா, அந்த ஆறு வயசு குழந்தைக்கு ஆபரேசன் முடிஞ்சு பதினாலு வருசமாகி அது இப்போ காலேஜ் படிக்கிதுன்னு சொல்றாங்க. ஏன்டா அவசரத் தேவை மெசேஜ் ஃபார்வார்டு பண்ணுறீங்க சரி... அதுக்குனு டைனோசர் காலத்துல போட்ட மெசேஜை எல்லாமாடா இன்னும் சுத்தவிடுவீங்க?

இவங்களும் இப்படித்தான்னு போனை ஆஃப் பண்ணி ஓரமாப் போட்டுட்டுப் போய் என்னதான் ஆயிரத்தெட்டு டிஜிட்டல் காலண்டர் வந்தாலும், பேப்பர் காலண்டர்ல தேதி கிழிக்கிற சுகமே தனின்னு தேதியைக் கிழிச்சா, 13.11.2029. அட இன்னைக்கி நம்மளோட 50-வது பிறந்தநாளாச்சே! இந்த 50 வருஷத்துல என்னத்தக் கிழிச்சோம்னு யோசிச்சா தினமும் உருப்படியா இந்த தேதியைத்தான் கிழிச்சிருக்கேன் போல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick