சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்

சினிமால்

`தாரை தப்பட்டை' படத்துக்குப் பிறகு தனக்கு செட்டாகும் நகரத்துப் பின்னணிக் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வரலட்சுமி. `நிபுணன்', `அம்மாயி', `விக்ரம் வேதா' என வரிசையாக நடித்துவரும் வரலட்சுமி, சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக் கிறார். ரம்யா நம்பீசன்- சிபிராஜ் ஜோடி. ஆனால், வில்லத்தனமும், எமோஷனலும் கலந்த போலீஸாக ஒரு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடிக் கிறாராம் வரலட்சுமி. வில்லியா?

அஜீத்துக்கு என்னதான் அத்தனை ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருந்தாலும், மனிதருக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. பைக் சேஸ், கார் சேஸ், ரயிலில், ஹெலிகாப்டரில் தொங்கிச் சண்டை போட்டிருக்கிறார். இந்நிலையில் சிவா இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தில் இதுவரை பார்க்காத அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைய இருக்கிறதாம். இதனால் சில்வா, கணேஷ் என கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களோடு ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மிஷன் பாஸிபிள்தான்!

ஆண்ட்ரியா, நந்தா நடித்து மூன்று வருடங்களாகத் திரைக்கு வர முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் படம் ‘புதிய திருப்பங்கள்’. தேசியவிருது பெற்ற இயக்குநர் சாரதா ராமநாதன் நிறைய முயன்றும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார். `பீஷ்மா' என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான புராணப் படத்தை இயக்கப்போகிறாராம். முன்னணி நடிகர், நடிகைகள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். திருப்பம் வர வாழ்த்துகள்!

விக்ரம் அடுத்து என்ன படத்தில் நடிப்பார் என்பதை அவராலேயே கணிக்க முடியாது. காரணம் பல இயக்குநர்களை மனசுக்குள் வைத்து அதில் இருந்து ஒருவரைக் கூப்பிட்டு படம் பண்ணலாம் வாங்க என்பாராம். அப்படித்தான் சமீபத்தில் அரை டஜன் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருந்து ஒருவரையும் அழைக்காமல் `வாலு' படத்தின் இயக்குநர் விஜய் சந்தரைத் தன் அடுத்த படத்துக்கு இயக்குநராக்கி இருக்கிறார். வடசென்னை கதையான இதில் சாய் பல்லவி, சமுத்திரகனி, சம்பத் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. வாலாடுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick