அன்புள்ள வாழ்க்கையே

‘வாழ்க்கை என்பதே உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒட்ட வைத்து செய்யப்பட்ட அழகான கலைப் பொருள்தான்!’ என்பதை சமீபத்திய பாலிவுட் ஹிட் படம் ‘டியர் ஜிந்தகி’ அழகாக உணர்த்துகிறது. ‘இங்லீஷ்-விங்லீஷ்’ படத்தின் மூலம் பாலிவுட்டையும் தாண்டி கவனம் குவித்த பெண் இயக்குநர் கௌரி ஷிண்டேவின் இரண்டாவது படைப்புதான் இந்த அழகான படம்!

கதை என்ன..? அலியா பட், இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் மிகச் சுதந்திரமான பெண். மிகப்பெரிய ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் `சின்ன’ ஒளிப்பதிவாளர். அவரின் சிக்கலே உறவுகளைக் கையாள்வதுதான்! குறிப்பாக ஆண்களுடனான `ரிலேஷன்ஷிப்’பில் அவரின் நிலையற்ற மனநிலையால் வரும் குழப்பங்கள் நண்பர்கள், குடும்பம் தாண்டி அவரது கனவுகளையும் சிதைத்து மன அழுத்தம் மிக்க பெண்ணாக மாற்றி விடுகிறது.

மிகத் தைரியமான, ஆளுமை குணம் கொண்ட நவயுகப் பெண்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிதான் அலியா! ‘ஆட்டோகிராஃப்’ காதல் அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடாதா என்ன? அவருக்கான வாழ்க்கையை சிக்கலில்லாமல் மீட்டுக் கொடுக்கிறார் ஒரு மனநல மருத்துவர்.

நமக்கும் அலியாவுக்குமான மன அழுத்தத்தின் விகிதங்கள் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால்  மெல்லிசான ஒரு கோடு அதைத் தாண்டிச் செல்லவிடாமல் தடுப்பதால் சமநிலை வாழ்க்கை வாழ்வதாக நினைத்துக் கொள்கிறோம். அவ்வப்போது இப்படத்தில் வரும் ஷாரூக் கான் கடலோடு ஆடும் ‘கபடி’ போல அந்தக் கோட்டைத் தாண்டிப்போய் பத்திரமாக கரை திரும்பி விடுகிறோம். அல்லது விடுபட்டதாய் நம்புகிறோம். பிரச்னை சுழலுக்குள் சிக்கும் அலியாவின் வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொடுக்கிறார்  ஷாரூக். கூடவே நமக்கும்! அலியாவுக்கு அவர் எடுக்கும் வகுப்புகள் மெகா பிக்சல் பிரமாதம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick