மன மன மன ‘மென்கள்’ மனதில்!

மிர்ச்சி சிவசங்கரி - ரேடியோ உலகின் படபட பட்டாசு. ‘ரீவைண்ட் ராகம்’ ஷோ மூலம் காலேஜ் டூட்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை பலரையும் மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்றவர். அந்த ஷோவிற்கு குட்பை சொன்ன கையோடு ‘MENகள் மனதில்’ என முழுக்க முழுக்க ஆண்களுக்கான ஷோ ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ‘என்னது ஆணினத்துக்காக ஒரு ஷோவா? இது லிஸ்ட்லயே இல்லையே’ எனக் கண் வியர்க்க சந்தித்த ஒரு  கலகல அரட்டைப் பொழுதில்...

‘`மென்கள் மனதில் - சிறுகுறிப்பு வரைக’’

‘`பொதுவாவே ரேடியோ ஷோக்கள் முழுக்க பெண்களுக்கானதுனு ஓர் எண்ணம் இருக்கு. அதுவும் நான் ரீவைண்ட் ராகம் பண்ற நேரமான 11 - 2 டைம் முழுக்க அழகுக்குறிப்பு, சமையல் குறிப்புனு லேடீஸ் விஷயங்களாகவே இருக்கும். ஒரு கட்டத்துல இது க்ளிஷே ஆகிட்ட மாதிரி ஒரு ஃபீல். ஸோ, அந்த மரபை உடைச்சு முதன்முறையா முழுக்க முழுக்க ஆண்களுக்கான ஷோ பண்ணா என்னன்னு ஒரு ஐடியா தோணுச்சு. எல்லோரும் க்ரீன் சிக்னல் காட்டவும் பிள்ளையார் சுழி போட்டாச்சு.’’

‘`என்னவெலாம் பேசுவீங்க இந்த ஷோவுல?’’

‘`பசங்க தங்களால நேர்ல சொல்ல முடியாத விஷயங்களை சோஷியல் மீடியாக்கள்ல ஷேர் பண்றதைப் பார்த்திருக்கேன். அதே மாதிரி கூட்டமா இருக்கிறப்போ கலகலனு இருக்கிற பசங்க தனியா இருக்கிறப்போ உடைஞ்சுபோய் கண்ணீர் விடுறதையும் நோட் பண்ணியிருக்கேன். இந்த ஷோவில் ஆண்கள் அவங்க மனசுல என்னலாம் ஓடுதுனு ஷேர் பண்ணிக்கலாம். பொண்ணுங்க பக்கம் இருக்கிற ரகசியங்கள் பற்றி நான் பேசுவேன். பெண்கள் மத்தியிலும் இதுக்கு அபார வரவேற்பு.’’

‘`யாரையும் ப்ராங்க் பண்ணியிருக்கீங்களா?’’

‘`இவ்ளோ நாளா பண்ணலை. இந்த ரக்‌ஷாபந்தனப்போ ‘உங்களுக்குத் தெரிஞ்சவங்களைக் கலாய்க்க நம்பர் ஷேர் பண்ணுங்க’னு ஷோவில் சொன்னேன். அப்படி வந்த நம்பர்களுக்கு எல்லாம் கால் பண்ணி, ‘அண்ணா என்னை உங்க தங்கச்சியா ஏத்துக்குவீங்களா’னு கேட்க அவங்க யாருடா இது? திட்டலாமா வேணாமா இந்தப் பொண்ணைனு எல்லாம் யோசிச்சுக் குழம்பி கடைசியா ‘சரி ஏத்துக்கிறேன்ம்மா’னு சொன்னாங்க. மறக்க முடியாத ப்ராங்க் அது.’’

‘`நீங்க இன்டர்வியூ பண்ணிய வி.ஐ.பிகள்ல யாரு ரொம்ப ஸ்வீட்?’’

‘`சந்தேகமே இல்லை, இளைய தளபதிதான். ‘இவர் அதிகம் பேச மாட்டாரே’னு தயங்கித் தயங்கி இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணேன். ஆனா, அதுக்கு நேர்மாறா செம ஜாலியா பதில் சொன்னாரு. ஸ்கூல் டைம் க்ரஷ் பத்தி எல்லாம் நிறைய பேசினார். ‘ ‘ஷாஜஹான்’ படத்துல வர்ற மாதிரி நிறைய பேரைச் சேர்த்து வெச்சுருக்கீங்களா’னு கேட்டேன். ‘இல்லம்மா, படிக்கிற காலத்துல நிறைய பேரை பிரிச்சுதான் விட்டிருக்கேன்’னு ரகளையா பதில் சொன்னார். அவருக்கு அப்புறம் செம ஜாலினா சந்தானமும், கெளதம் மேனன் சாரும்.’’

‘`ஆர்.ஜே-க்கள் சில்வர் ஸ்க்ரீனுக்குப் போற சீசன் இது... உங்க பிளான் என்ன?’’

‘`எதையுமே பிளான் பண்ணிப் பண்ணதில்லை. ஆர்.ஜே வேலைக்கே சும்மா ட்ரை பண்ணிப் பார்ப்போமேனுதான் வந்தேன். அப்படியே பிடிச்சுப்போய் செட்டிலாகியாச்சு. டி.வி-யில ஆங்கரிங் பண்ண இப்பவும் ரெடி. சினிமாவுல பொண்ணுங்களுக்கான ரோல் கொஞ்சம் கம்மிதான். அந்த நிலைமை மாறி நல்ல ரோல்கள் வந்தா நான் சினிமாவுல நடிக்க ரெடி ரெடி ரெடி!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick