கவலை வேண்டாம்

ஜீவாவும் காஜலும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். ஓப்பனிங் சீன்லேயே ஜீவாவின் சேட்டைகளைக் காட்டி(!) கதாநாயனின் கேரக்டரை ஒப்புக்கொண்ட இயக்குநர் அவரது காதலுக்காக ரசிகர்கள் ஃபீல் பண்ணுவார்கள் என எப்படி நம்பினாரோ தெரியவில்லை. வளர்ந்து கல்லூரியில் படிக்கும்போது ஜீவா இன்னொரு பெண்ணை புரொபோஸ் செய்யப் போகும்போது எதிர்பாராவிதமாக காஜலுக்கு கார்டைக் கொடுத்துவிடுகிறார். அது தெரிந்தும் எந்தச் சிக்கலும் இல்லாமல் காதலைத் தொடரவைத்த இயக்குநர், கல்யாணம் முடிந்த அன்றே சின்ன சலசலப்பில் இருவரையும் பிரித்து வைப்பதுதான் யோசிக்க வைக்கிறது. 

பத்து மணிக்கு முன்பே மூடப்பட்ட கடையில் சரக்கு வாங்குவதற்காக அமளியில் ஈடுபடும் ஜீவாவைத் திட்டும் காஜலிடம், தான் ஒட்டுமொத்த சமூகத்தின் நியாயத்துக்காகப் போராடுவதாக ஷோல்டரைத் தூக்குவதெல்லாம் கொஞ்சம் இல்லைங்க, ரொம்பவே ஓவர். ‘பைப்ல தண்ணி வரும்போது பக்கெட்டை வைக்கணும்’ போன்ற படம் முழுவதும் தூக்கலாகவே அடிக்கும் இரட்டை அர்த்த வசனங்களையும் அதை ‘நியூ ஜென் காமெடி’ என சப்பைக்கட்டு கட்டுவதையும் சேர்த்துப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். காஜலின் அம்மாவாக மந்த்ரா நடித்ததையே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் புழுங்கும் சூழலில், அவர் மாரடைப்பால் கீழே விழுந்து கிடக்கும்போது `பிளாக் ஹ்யூமர்' என நம்பி எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை எந்த வகையில்தான் சேர்ப்பது? கதையைக் காலியா வெச்சுக்கிட்டு ஜாலியா படம் எடுக்கணும்னா எப்படி பாஸ்..?

 காஜல், ஹீரோ ஜீவா வீட்டில் தங்குவதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது. அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரில் வரும் பாபி சிம்ஹாவும் ஜீவாவின் வீட்டிலேயே தங்குவதற்கு ஒப்புக்கொள்வதுதான் ஏன் எனத் தெரியவில்லை.  படம் முழுதும் மொக்கைக் காமெடியும் கொஞ்சம் கலாட்டாவுமாகப் போய்க்கொண்டிருக்கும்போது மயில்சாமி பேசும் சீரியஸ் தத்துவங்கள் ரசிகர்களின் செவிகளுக்குச் சென்றடையவில்லை. நல்லவேளை, மயில்சாமி ஃப்ளாஷ்பேக்குங்கிற பேர்ல அந்த மொக்கை சென்டிமென்ட் கொசுவத்தியை ரொம்ப நேரம் சுத்தவில்லை. மனதில் பதிகிற மாதிரியான பாடல் ஒன்று கூட இல்லை என்பதும் மைனஸ். அது மட்டும்தானா மைனஸ் என க்ராஸ் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேட்கப்படாது.

 ‘வாழ்க்கை வாழுறதுக்கு அல்ல... கொண்டாடுறதுக்கு. தினம் தினம் கொண்டாடு’ன்னு மயில்சாமி பேசுற வசனம்தான் படத்தின் ஒன்லைன். அதுக்குள்ள டபுள்மீனிங் வசனங்களைத் திணிச்சாலே பயங்கர காமெடிப் படம்னு ஏத்துக்குவாங்கனு இயக்குநரை யாரோ ஆழ்மனசுல புகுந்து நம்ப வெச்சிருக்காங்க. ஜாலியான படத்தை முழுவதும் ஜாலியாகவும் எடுக்காமல், இடையில் சோகப் பாட்டையும் ஓட்டி மொத்தத்தில் படம் எந்த மாதிரியான ஜானர்ல இருக்குங்குறதே ரசிகர்களுக்குப் புரியாமப் பண்ணியிருக்கார். பாவம், அவருக்காவது புரிஞ்சிருக்குமான்னு தெரியலை. ஒயின்ஷாப்பில் பிரிந்த காதல் ஜோடியை மறுபடியும் ஒயின்ஷாப்பிலேயே சேர்த்து வைத்த இயக்குநர்  இந்தச் சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைக்கிறார் போல. அதைத் தெளிவாச் சொல்லவாச்சும் ட்ரை பண்ணுங்க பாஸ்!

- தரை டிக்கெட்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick