``நியூட்டனுக்கே சவால் விட்ருக்கேன்!''

``மின்சாரப் பிரச்னையால் இந்தியாவே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அதைச் சரிகட்ட, ஒரு யூனிட் மின்சாரம் செலுத்தினால், மூன்று யூனிட் மின்சாரம் கிடைக்கும் வகையில் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன்’’ என்கிறார், அரியலூர் மாவட்டம் கண்டிராதீர்த்தத்தைச் சேர்ந்த நரசிம்மன். என்னன்னு பார்ப்போமா?

‘`நான் படிக்கலைங்கிற ஒரே காரணத்துக்காக என்னுடைய பல கண்டுபிடிப்புகளைத் தடை செய்ய நினைக்கிறது அரசு. பல வருடம் போராடிப் பார்த்துட்டேன். ‘படிக்காத ஒருத்தன், நியூட்டனின் மூன்றாம் விதியை முறியடிப்பதா’ங்கிற ஈகோவுல என்னை முடக்கப் பார்க்குறாங்க. சின்ன வயசுல இருந்தே எதைப் பார்த்தாலும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருப்பேன். அதன் விளைவாக, டிராக்டர் ஹைட்ராலிக் யூனிட் செயல்படுறதை மையமா வெச்சு 1996-ல் மின்சாரத் தட்டுப்பாட்டைச் சரிகட்ட ஒரு வழியைக் கண்டுபிடிச்சேன். அதை 1998-ல் வெற்றிகரமா செஞ்சு காட்டினேன். அந்தக் கண்டுபிடிப்புதான், ‘ஜெனரேட்டர் பவர் பிளாண்ட்’ங்கிற கருவி!’’ அறிமுகத்துடன் ஆரம்பித்தார், நரசிம்மன். இந்த பவர் பிளாண்ட்ல ஒரு யூனிட் மின்சாரத்தைச் செலுத்துனா, அது 2.72 யூனிட் மின்சாரமா வெளியே கொடுக்கும். எப்படின்னா, இந்தப் பவர் பிளாண்டில் மிகக் குறைந்த ஆற்றலை இயக்கத்திற்கு உட்படுத்தி மோதச் செய்யும்போது, மோதலுக்கு உட்படும் இடத்தில் உருவாகும் ஆற்றல், அதனை இயக்கப் பயன்படுத்தும் ஆற்றலைவிட 2.72 மடங்கு அதிகமாக வெளியேறும். இந்த விதியைத்தான் நான் கண்டுபிடிச்சிருக்கேன். அதாவது, மிஷனரியில் ஒரு யூனிட் மின்சாரத்தைச் செலுத்துனா, கிட்டத்தட்ட மூணு மடங்கு மின்சாரம் நமக்குக் கிடைக்கும். இதனால, எல்லா மாநிலங்களோட மின்சாரப் பற்றாக்குறையையும் ஈஸியா போக்கமுடியும்’’ என்றவர், கருவியை இயக்கிக் காட்டினார்.

``உலகத்துலேயே இப்படி ஒரு கண்டுபிடிப்பை யாரும் உருவாக்கலைங்க. நான்தான் கண்டுபிடிச்சிருக்கேன். இதோட மொத்த விளக்கத்தையும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பினேன். அவங்க, `அண்ணா யுனிவர்சிட்டியை நாடுங்கள்'னு பதில் போட்டாங்க. அங்கே போனேன். என் கருவியைப் பரிசோதனை பண்ணிப் பார்த்துட்டு, எந்தப் பதிலும் சொல்லாம காலம் கடத்தினாங்க. பிறகு ஏன், எதுக்குனு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமா கேள்வி கேட்டேன். ‘நீங்க படிக்கலை. அதனால, உங்க கண்டுபிடிப்புகளை நாங்க அங்கீகரிக்க முடியாது’னு பதில் சொல்றாங்க. என் தியரியைக் குறை சொல்லலாம். ஆய்வு பண்ணிட்டு, அதுல உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனா, எடுத்த எடுப்புலேயே ‘உனக்குக் கல்வி அறிவு இல்லை’னு பதில் சொல்லி அனுப்புறது சரியா” எனக் கொந்தளித்தவர்,

‘`நீதிமன்றத்துல வழக்கு தொடுத்துட்டேன். `என் கண்டுபிடிப்புகளைப் பரிந்துரைக்க முடியாது'னு சொல்லிட்டாங்க. `சம்பந்தப்பட்ட துறையை நாடுங்கள்'னு அறிவுரை சொன்னாங்க. அங்கேயும் அங்கீகாரம் இல்லை. விமானத்தைக் கண்டுபிடிச்ச ரைட் சகோதரர்கள் படிச்சவங்களா? இல்லை நியூட்டன் படிச்சவரா? இதுமாதிரி பல அறிஞர்கள் படிக்காமத்தானே கண்டுபிடிப்புகளைக் கொடுத்திருக்காங்க. அவங்களோட கண்டுபிடிப்புகளையெல்லாம் நாம பயன்படுத்தாமலா இருக்கோம்’’ என எமோஷன் ஆனவர், அடுத்து பிரச்னைகளை அடுக்கினார்.

‘`அண்ணா யுனிவர்சிட்டியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் திலகர், ‘இதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க’ன்னு அடிக்கடி மெயில்ல கேள்வி கேட்கிறார். `டயா மீட்டர் எவ்வளவு', `அதன் தன்மை எவ்வளவு'ன்னு ஏன் அடிக்கடி விளக்கம் கேட்கணும்? என் கண்டுபிடிப்பை மறுக்குறவங்க, ஏன் அங்கே பணிபுரிபவர் ஆர்வமா இத்தனை கேள்விகளைக் கேட்கணும்னு யோசிச்சுப் பாருங்க. ஏன்னா, நியூட்டனோட விதியையே முறியடிக்கும் என்னுடைய ஆய்வு. எந்த விசைக்கும் சமமான எதிர்விசை உண்டுனு சொன்னவர், நியூட்டன். ஆனா, என் கண்டுபிடிப்பு ஒரு யூனிட் செலுத்தினால், மூணு யூனிட் கிடைக்கும்னு சொல்லுது. இந்தப் பொறாமையிலதான் எனக்கான அங்கீகாரத்தை மறுக்குறாங்க’’ என்றவரிடம், அவருடைய எதிர்பார்ப்புகளைக் கேட்டேன்.

‘`எந்தச் சலுகையும் எனக்கு வேணாம். 25 லட்சம் மதிப்புள்ள இந்தக் கண்டுபிடிப்புகளை அரசாங்கத்துகிட்ட கொடுக்குறேன். அவங்க சோதனை பண்றதுக்கு ஆகும் செலவையும் நானே ஏற்கிறேன். இதைக் கண்டுபிடிச்சது நான்தான்னு அங்கீகாரம் கொடுத்தா போதும். இந்தக் கண்டுபிடிப்பு சம்பந்தமா, என்னோட பிளாக்ல எழுதுனதும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு பேசினாங்க. ‘நல்ல சம்பளம் தர்றோம், எங்க நாட்டுக்கு இதைக் கொடுத்துடுங்க’னு கோரிக்கை வெச்சாங்க. நான் இந்திய மக்களோட பிரச்னைக்காக இதைக் கண்டுபிடிச்சிருக்கேன். அவங்க என்னை ஏளனம் செய்கிறார்கள்’’ என்று வருந்தியவர், காவல் துறைக்கு அர்ப்பணிப்பதற்காகப் புதுவித துப்பாக்கி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளாராம்!

இவருடைய கண்டுபிடிப்பை இந்த லிங்க்-ல் பார்க்கலாம் : www.youtube.com/watch?v=dbShhx5w0t0

- எம்.திலீபன், படங்கள்: எஸ்.ராபர்ட்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick