கொக்கிபீடியா - டொனால்டு ட்ரம்ப்

பெயர் : டொனால்டு ட்ரம்ப்

பிறப்பு : 14 ஜூன், 1946

வயது : 70

இருப்பிடம் : நியூயார்க்

டொனால்டு ட்ரம்ப் என்பவர் அமெரிக்கத் தொழிலதிபரும், அமெரிக்க குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பவரும் ஆவார்.

சாதனைகள் :

டொனால்டு ட்ரம்ப் தனது சொந்த வாழ்வில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். உட்கார்ந்த இடத்திலேயே பத்துத் தலைமுறைக்கு பர்கர் சாப்பிடும் அளவிற்கு சொத்துபத்து இருந்தும், வங்கியில் கடனை உடனை வாங்கி வியாபாரத்தில் போட்டு செமையாக கல்லா கட்டியிருக்கிறார் இவர். இப்போது இவருக்குச் சொந்தமாக பல ஹோட்டல்கள், கேசினோக்கள், ரிசார்ட்கள் போன்றவை இருக்கின்றன. குஷியான வாழ்க்கைதான். ஒருவர் ‘குரங்கு மவனே... உன் அப்பா மனுஷனா இருந்தா உனக்கு 5 மில்லியன் டாலர் தர்றேன்டா...’ என சவால் விட்டு ட்ரம்புக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகத்தை உசுப்பிவிட்டார். உடனே, தனது பிறப்புச் சான்றிதழை எடுத்து நீட்டிவிட்டு ‘நான் நிரூபித்துவிட்டேன். அந்த 5 மில்லியன் டாலரை மட்டும் எப்படியாவது வாங்கிக் கொடுங்க’ என வழக்குப் போட்டிருக்கிறார். இப்படி ஊரையே கலக்கிக்கொண்டிருந்த இந்த வியாபார காந்தம் கடைசியாக ஒட்டிக்கொண்டது அரசியலில்! சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி க்ளிண்டனைத் தோற்கடித்து அமெரிக்க அதிபராகத் தேர்வாகியிருக்கிறார். அடுத்ததாக வேதனைகள்...

வேதனைகள் :

டொனால்டுக்கு ஜெர்மோஃபோபியா (கிருமிகளை நினைத்து கிலி ஆவது) எனும் விசித்திர வியாதி ஒன்று உள்ளது. அதனால், யாரிடமும் கை குலுக்க மாட்டார், கட்டிப்பிடிப்பார். தட் கிருமி போஜனம் மொமன்ட்! டொனால்டு ட்ரம்பின் ஞாபகத்திறன் மற்றவர்களை விட மிகவும் அதிகமாம். அதனால், யாரும் தாம் முட்டாளாகப் பிறந்துவிட்டோமே எனக் கலங்க வேண்டாமாம்.  இவர் பெரும் பணக்காரராக இருப்பதனால்தான் இவர் மிகவும் அழகாக இருப்பதாகவும், எல்லாப் பெண்களும் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ இவரை விரும்புகிறார்களாம். இதை மற்றவர்கள் சொல்லியிருந்தால் இவற்றை சாதனையில் சேர்த்திருக்கலாம், இவரே சொன்னதால் வேதனையில் சேர்க்க வேண்டியதாகிவிட்டதை கொக்கிபீடியா வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறது. ` ‘டார்க் நைட் படமெல்லாம் ஒரு படமா?' எனக் கேள்விகேட்டு நோலனையே நோண்டியிருக்கிறார் இவர். அதேபோல், ‘பழுத்த கமலா ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் எனது ஹேர்ஸ்டைல் உண்மைதான், விக் எதுவும் நான் வைக்கவில்லை. அது கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்’ என ஒருமுறை வருத்தப்பட்டிருக்கிறார். ‘இப்போதெல்லாம் அரசியலுக்கு நல்லவர்களே வருவதில்லை’ என்று மைண்ட்வாய்ஸ் என நினைத்து சத்தமாய் பேசி மொக்கை வாங்கியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ட்ரம்ப் முட்டாள்தனமாக பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு டாலர் எனக்குக் கொடுத்தாலே, நான் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுவேன்’ என இவரை வகைவகையாக கலாய்க்க, நொந்து நூடுல்ஸாய் கிடக்கிறார் மனிதர். அதைவிட, தனது சொந்த மகளைப் பற்றி இவர் சொன்ன வார்த்தைகள் இருக்கே... பகவானே...!

குழப்பங்கள் :

ஒருமுறை ‘ஒல்லியாக இருக்கும் யாரும் டயட் கோக் குடித்து நான் பார்த்தது இல்லை’ என்று கூறியிருக்கிறார். அதே போல், ‘மெக்சிகோ தங்கள் நாட்டில் பெரும் பிரச்னையோடு வாழும் மக்களை நம் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது, அவர்கள் இங்கு வந்து நமக்குப் பிரச்னை ஏற்படுத்துகிறார்கள். சட்ட ஒழுங்கை சீர் குலைக்கிறார்கள்’ என்றும் ‘தெற்கு எல்லையில் பிரமாண்ட சுவர் ஒன்று கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது' எனவும் கூறியுள்ளார். எப்படி இப்படியெல்லாம் இவருக்கு யோசனைகள் மண்டையில் முளைக்கிறது என்பது குழப்பமாக உள்ளது.

மேலும் படிக்க :

அமெரிக்கப் பெருஞ்சுவர், சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் ஆரஞ்சுடா...,

தி ஆர்ட் ஆஃப் டீல், ட்ரம்ப்: தி பெஸ்ட் ரியல் எஸ்டேட் அட்வைஸ்

மேலும் பார்க்க :


இவான்கா ட்ரம்ப், தி லிட்டில் ராஸ்கல், ட்ரம்ப்பின்டே லீலைகள், அப்ரண்டீஸ்

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick