அந்தக் காலத்து ஆட்கள்! | Advice From Old People - Timepass | டைம்பாஸ்

அந்தக் காலத்து ஆட்கள்!

‘நாங்கெல்லாம் அந்தக் காலத்துல...’ என்று சொல்லிக்கொண்டே யாராவது விட்டத்தை வெறிக்கப் பார்த்தால், அட்வைஸ் பண்ணியே அறுக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அந்த நேரத்தில் ‘விதியே’ என்று மௌனமாகக் கேட்டுக்கொள்வதுதான் நமது தலைவிதி. அப்படி எந்தெந்த சமயங்களில் எல்லாம் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமா...?

 மு
தல் விஷயம், கையெழுத்து வாங்க ரேங்க் கார்டை காண்பிக்கும்போது. அதிலும் கணக்குப் பாடத்தின் மார்க்கைப் பார்த்ததும் அப்பாவின் கண்கள் சிவக்கும். ‘நான்லாம் அப்ப கணக்குல நூத்துக்கு நூறு வாங்குனேன். எனக்குப் புள்ளையா பொறந்துட்டு...’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘ம்க்கும்’ என்று அம்மா முகவாய்க்கட்டையில் இடித்துக்கொண்டே அடுப்படிக்கு போவார். மனதுக்குள்ளேயே சிரித்துக் கொள்வோம்.

 காலேஜ் போக பைக் கேட்டால்... ‘நான்லாம் அந்த காலத்துல 10 கிலோமீட்டர் நடந்துபோய் படிச்சேன்’ என்று ஆரம்பிப்பார் அப்பா. ‘நீங்க படிக்கிறதுக்கா 10 கிலோமீட்டர் நடந்தீங்க?’ என்று அம்மா வெட்கப்படும்போதுதான், காதலுக்காகத்தான் கால்கடுக்க நடந்திருக்கிறார் என்பது புரியும்.

 ஃபே
ஷியல், பிளீச்சிங் செய்ய இளம்பெண்கள் பியூட்டி பார்லர் கிளம்பினால், ‘அந்த காலத்துல பான்ட்ஸ் பவுடரை பத்து தடவை அடிச்சிகிட்டுதான் ‘பளிச்’னு ஆனோம்’னு அம்மாவோ, அத்தையோ அளந்துவிடுவார்கள். அதுக்குப் பிறகுமா பார்லருக்குப் போக மனசு வரும்?

 ‘இவ்வளவு லேட்டாவா வீட்டுக்கு வர்றது. நாங்கெல்லாம் அந்த காலத்துல...’ என ஊரிலிருந்து வந்திருக்கும் சித்தப்பாவோ, மாமாவோ சொல்லும்போது, பக்கத்து அறையில் இருந்து பாட்டியின் இருமல் சத்தம் கேட்கும். அதற்கு மேல் நமக்கு அட்வைஸ் பண்ணுவார்களா என்ன?

 நாம படத்துக்குப் போறோம்னு சொன்னா, அட்வைஸ் பண்ணுவதற்கென்றே பிறந்திருக்கும் அப்பாவின் நண்பர், ‘அந்த காலத்துல என்னமா படம் எடுத்தாங்க? இப்பவும்தான் எடுக்குறாங்களே... வசனமே புரியலை’ என்று அங்கலாய்ப்பார். ‘வசனமாடா முக்கியம்? படத்தைப் பாருடா’ என்ற ‘தூள்’ பட விக்ரம் டயலாக், கேட்குமே ஃப்ரெண்ட்ஸ்.

 நாம் புது டிரெஸ் எடுத்தால் போதும். ‘அந்தக் காலத்துல தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் புதுத்துணி. அதுவும் யூனிஃபார்ம்தான். இப்ப மாசத்துக்கு ரெண்டு தடவை எடுக்குறீங்க...’ என்பார்கள். ‘ஃப்ரெண்ட் கிஃப்ட்டா கொடுத்தது, ஆபீஸ்ல நல்லா வேலை பார்க்குறதுக்காக கொடுத்தாங்க’னு சொல்லி சமாளிக்குற வித்தையை கத்துக்கிட்டீங்களா பாஸ்?

 ம
ஸ்காரா, காஜல், ஐ-ப்ரோ போடுவதைப் பார்த்துவிட்டால் போதும். ‘அந்தக் காலத்துல வண்டி மையை அள்ளி அப்பிக்கிட்டுதான் உங்க தாத்தாவை மயக்கினேன்’ என்று பொக்கை வாயைக் காட்டி பாட்டி சிரிக்கும்போது, நாலைஞ்சு நாள் துடைக்காத கார் கண்ணாடி மாதிரி கேர்ள்ஸ் மூஞ்சு  வாடிப்போயிடும்.

 வி
த்தியாசமான ஹேர் ஸ்டைலைப் பார்த்துவிட்டால் போதும். ‘நாங்கெல்லாம் அந்தக் காலத்துல முடிவெட்டுனா, மூணு மாசத்துக்கு தாங்கும். இப்போ, வாராவாரம்  வெட்டுறாங்க’ என்று அலுத்துக் கொள்வார்கள்.

 வா
ரம் ஒருமுறையாவது ஷாப்பிங் போகாவிட்டால் கேர்ள்ஸுக்கு கை, கால் நடுக்கம் வந்துவிடும். அப்படிக் கிளம்பும்போது, ‘அந்தக் காலத்துல எங்கம்மா சேலையை ரெண்டாக் கிழிச்சு நானும் அக்காவும் தாவணியா போட்டுப்போம்’ என்பார்கள். அவர்களைக் கையெடுத்துக் கும்பிடணும்னு தோணுதா கேர்ள்ஸ்?

 ‘அ
ந்தக் காலத்துல 5 ரூபாய் கொண்டு போனா, பைநிறைய சாமான் வாங்கிட்டு வரலாம். இப்போ, வாங்குன பொருளை எடுத்துட்டு வர்றதுக்கு 5 ரூபாய் கொடுத்து பை வாங்க வேண்டியிருக்கு’ என்று வருத்தப்படுபவர்களை, எப்படித் தேற்றுவது யூத்ஸ்?

-  சி. காவேரி மாணிக்கம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick