தில்லாலங்கடி திருடன்

தைச் செய்தாலும் பெருசாவும் தினுசாவும் செய்ய வேண்டுமென்கிற கொள்கையைத் தன் தொழிலிலில் (!) பயன்படுத்திக் கொண்டதால் மதுரையைச் சேர்ந்த பழனிக்குமார் இன்று சிறையில் இருக்கிறார். குறுகிய காலத்தில் 85 டூவீலர்களை திருடி சாதனை (!)படைத்துள்ளார் இவர்.

மதுரையில் சமீப காலமாக வீடு மற்றும் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர்கள் அதிகளவில் காணாமல் போக ஆரம்பித்தன. இரண்டு வீலுக்கும் சங்கிலி போட்டு ஜன்னல் கம்பியோடு பிணைத்து பூட்டுகள் போட்டு வைத்தாலும், அப்படியே அலேக்காக  அபேஸ் பண்ணுவதைத் தடுக்க முடியவில்லை. சில நேரம் ஜன்னலையும் சேர்த்துக் கிளப்பி விடுகிறார்கள். மதுரை சிட்டியிலிருக்கும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் பைக் திருட்டு வழக்குகள் அதிகமாகிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில்தான் மகபூப்பாளையத்திலிருக்கும் ரயில்வே கோட்ட அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்றை ஒரு இளைஞர் வித்தியாசமான முறையில் ஸ்டார்ட் செய்து கொண்டிருந்ததை அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சந்தேகம் வந்தது. அந்தப் பகுதியில் அதிகமாக பைக் திருடு போனதால் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். ஆளை அமுக்கி விசாரித்தால்,

``அடிக்க வேண்டாம், எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறேன். கல்யாணமாகி ரெண்டு வருஷமாச்சு. ஒரு கொலை வழக்குல சிறைக்குப் போனேன். ஆறு மாசம் உள்ளே இருந்த எனக்கு வெளியே வந்த பிறகு யாரும் வேலை தரலை. பெரிய வருமானம் இல்லாத சூழ்நிலையில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டினேன். அதிலும் வருமானம் வரவில்லை. அப்புறம் பைக் திருடத் தொடங்கினேன். அதிகாலையில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நீட்டா டிரெஸ் போட்டு, தெருக்களுக்குள் செல்வேன். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக் அருகில் நின்று சில டெக்னிக்குகளை பயன்படுத்தி உடனே வண்டியை ஸ்டார்ட் செய்து விடுவேன்.

கொஞ்ச தூரம் சென்றதும் அதிலிருக்கும் நம்பர் பிளேட்டை எடுத்துப் போட்டுவிட்டு, கைவசம் இருக்கும் நம்பர் பிளேட்டை மாட்டி விடுவேன். அதை உடனே வீட்டுக்குக் கொண்டு போக மாட்டேன். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் என்று பக்கத்தில் எங்கு கட்டண வாகன நிறுத்துமிடம் இருக்கோ அங்கு போய் நிறுத்தி டோக்கன் வாங்கி விடுவேன்.  இப்படியே வரிசையாக திருடுகிற பைக் அனைத்தையும் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, சில நாட்கள் ஆனதும் வீட்டுக்குக் கொண்டு வருவேன்.

ஆரம்பத்தில் பைக்கை `செகண்ட் சேல்' என்று விற்றேன். ஆனால் வாங்குகிறவர்கள், `ஆர்சி புக் வேணும், அதுவேணும், இது வேணும்'னு இம்சை கொடுக்க அரம்பிச்சாங்க. வித்துக் கொடுக்கிற புரோக்கர் ஏதோ திருட்டு வண்டி மாதிரி(!) அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கினாங்க. கஷ்டப்பட்டு கொண்டு வர்ற வண்டியை இவ்வளவு சல்லிசா வாங்குறாங்களேன்னு, அதுக்கப்புறம் வண்டியை சேல் பண்றதில்லை. வண்டியைப் பார்ட் பார்ட்டா பிரிச்சி சந்தையில வித்தேன். அதுல ஓரளவு பணம் கிடைச்சது. பார்க்கிங்ல இருந்து  எடுத்துட்டு வர்ற வண்டியைப் பிரிக்க ரெண்டு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் பண்றேன்னு வீட்டுக்காரங்க நினைச்சிருந்தாங்க. அவங்களுக்கு சந்தேகம் வரலை. நல்லாப் போயிட்டு இருந்துச்சு... இப்ப மாட்டிக்கிட்டேன்'' என்று விரக்தியாக சொல்லியிருக்கிறான் பழனிக்குமார்.

 தொழிலில் கூட்டு சேர்க்காமல் சிங்கிளாக 85 பைக்குகளை திருடி விற்ற இவன் ஒரு திருட்டு தில்லாலங்கடிதான்.

- செ.சல்மான், படங்கள் : வீ.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick