பேச்சுலர் பாவம் பொல்லாதது!

வெள்ளம்,புயல் மாதிரியான இயற்கைச் சீற்றங்களின்போதும், பந்த் மாதிரியான சூழ்நிலையிலும் இந்த பேச்சுலர் பசங்க படுற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை பாஸ். இந்த மாதிரியான கஷ்ட காலத்துல கடை எதுவும் திறந்திருக்காதுனு மூளைக்குப் புரியும். ஆனா வயித்துக்கு எப்படிப் புரிய வைக்கிறது? வாங்க சொல்றேன்...

சென்னையே வெள்ளத்துல மூழ்கினப்போ சிக்னல் எங்கேயாவது கிடைக்குதான்னு குமுதவள்ளியைத் தேடி அலைஞ்ச கபாலி மாதிரி சுத்துனது சில பேர்னா... சோறு கிடைக்குமானு தெருத்தெருவா தேடி அலைஞ்சது பல பேர்!

ஏரியாவில் இருக்கிற ஒரே ஒரு கடையிலயும் வெஜ் பிரியாணி மட்டும்தான் இருக்குனு நுழையிறப்பவே சொல்வாங்க. சோறு கிடைக்கிறதே பெருசு, வெஜ் பிரியாணிக்கு என்ன குறைச்சலாம்னு கேட்கிறவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன். கத்தரிக்காய்ல இருந்து அடுத்த நாள் கெட்டுப்போற காய்கறி வரை, எது கண்ணுல படுதோ, அத்தனையையும் பொறுக்கியெடுத்துச் சேர்த்து சமைக்கிற பதார்த்தத்துக்கு இவங்க வெச்ச பேர்தான் வெஜ் பிரியாணி. பசி வந்தா பத்தும் பறந்து போகும்கிறதால, அதையும் விட்டுவைக்காமச் சாப்பிட்டு எழுந்திரிக்கிறதைத் தவிர வேற வழியில்லை!

லவ்வர்கூட சேர்ந்து கேண்டில் லைட் டின்னர் சாப்பிடுறது லட்சியம். ஆனா, கூடவே சுத்துற செவ்வாழைகளோட சேர்ந்து அரை வெளிச்சத்தில் கேண்டில் லைட் டின்னர் சாப்பிடுறது நிச்சயம். நம்ம தலையில் எழுதியிருக்கிறது அவ்வளவுதான் ப்ரோ.

`பந்த்' மாதிரி சமயத்துல ஏ.டி.எம். வரிசையையே மிஞ்சுற அளவுக்கு பலசரக்குக் கடைகள்ல முதல்நாளே கூட்டம் அள்ளும். என்னத்தையாவது வாங்கி வைப்போமேனு உள்ளே போனா, பிரெட் தவிர வேற எந்த ஆப்ஷனும் இல்லை. நம்மகிட்டதான் சமைக்க ஒண்ணுமே இல்லையே! (இல்லாட்டி மட்டும் 14 வகைக் கூட்டு, பொரியல் எல்லாம் சமைக்கிற மாதிரிதான்).

சேஃப்டிக்காக பவர்கட் பண்றது நல்ல விஷயம்தான். ஆனா சேஃப்டி மேட்ச் பாக்ஸைத் தேடி எடுக்கிற வரையாவது அவகாசம் தரலாமே பாஸ். மல்லாக்கப் படுத்துக்கிட்டே அடிக்கிற காத்துக்கு ஃபேன் றெக்கை எத்தனை தடவை சுத்துது, எந்தெந்த மொட்டை மாடியில் எல்லாம் காயப்போட்ட துணியை எடுக்கலைனு புதுசு புதுசா பொழுதைப் போக்குவாங்க. மொபைல்ல சார்ஜ் இல்லைங்கிறது சோகம்னா... ஃபேஸ்புக்கூட பார்க்க முடியாதுங்கிறது பெரும் சோகம்.

இதையெல்லாம் தாண்டி ஆபீஸுக்குப் போறவங்க எல்லாம் தியாகினு நினைக்காதீங்க. நாட்ல பல பேர் மொபைலுக்கு சார்ஜ் போடத்தான் ஆபீஸ் போறதா சர்வே ஒண்ணு சொல்லுது. `ரூமுக்குப் போய் என்ன பண்ணப் போறே? தனிக்கட்டைதானே நீ?'ன்னு யாராவது சொல்றப்போ `இதுக்காகவே சீக்கிரம் கல்யாணம் ஒண்ணு பண்ணணும்'-னு நரம்பு புடைக்கும்.

இந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் ஃபேஸ்புக் பக்கமா கரை ஒதுங்குனா... `கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்'னு போட்டோ போட்டு, நம்மளை டேக் பண்ணி வெச்சிருக்கிற அந்தப் புனித ஆத்மாக்கள் இருக்கிற ஊர்ல எல்லாம் ஏன் புயல் வர மாட்டேங்குதுனு மூளை கன்னாபின்னானு யோசிக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick