எப்பவுமே இப்படித்தான்!

15 நாள் நாராயணசாமி, 50 நாள் மோடி மாதிரி அரசியல்ல மட்டும்தான் தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் டெம்ப்ளேட்டாக ஒரே பதிலைச் சொல்ற ஆட்கள் இருப்பாங்களா? ஊருக்குள்ளேயும் பல பேர் இருக்கிறாங்க பாஸு...

பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஆட்டோ ஓட்டுற ஆட்டோக்காரர்கிட்ட மட்டும் இந்த ஏரியாவுக்கு எந்த பஸ் போகும்னு மட்டும் கேட்கவே கூடாது. ஏதோ சொத்தையே எழுதிக் கேட்ட மாதிரி கேள்வியைக் கேட்டு முடிக்கிறதுக்கு முன்னாடியே தெரியாதுனு சொல்வாங்க. இதுவே ஆட்டோவில் ஏறிப்போனீங்கனா, நீங்க போற உங்க சொந்தக்காரர் வீட்டுல நேத்து என்ன கொழம்பு வெச்சாங்கங்கிற டீட்டெயில் வரைக்கும் சொல்வாங்க. ஏன்னா நீங்க ஆட்டோவுல போறீங்க.

தியேட்டர்ல டிக்கெட் கொடுக்கிறவர்கிட்ட படம் போட்டு எவ்வளவு நேரம் ஆச்சுனு மட்டும் கேட்டுப் பாருங்களேன். `இப்பத்தான், போட்டு ஒரு அஞ்சு நிமிசம்கூட ஆகலை'னு சொல்லி வெச்ச மாதிரி பதில் வரும். இதுல என்னா விசேஷம்னா அரைமணி நேரம் லேட்டா வந்து கேட்டாலும், அதே அஞ்சு நிமிசம்தான் ஆச்சுங்கிற பதில்தான் வரும். ஏன்னா டிசைன்ல இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick