மார்கழிம்மா... போதும்மா!

மார்கழி மாசம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சது வீட்டுல இருக்கிற அம்மாக்களும், சுத்தி இருக்கிறவங்களும் படுத்துற பாடுதான் முதல்ல ஞாபகத்துக்கு வருது. மார்கழி மாசம் பிறந்தாலே சின்ன வயசுலேர்ந்து நம்மை எப்படியெல்லாம் வெச்சுக் குமுறிக் கொத்து பரோட்டா போட்டாங்கனு கண்ணைத் துடைச்சுக்கிட்டே ஒரு ரீவைண்ட்...

பள்ளிக்கூடம் படிக்கும்போது பப்ளிக் எக்ஸாம் அன்னிக்கே சாவகாசமா ஏழு மணிக்கு எழுந்திரிச்சுக் கிளம்பிப் போறவங்களை நடுங்குற குளிர்ல நாலு மணிக்கே எழுப்பிவிட்டு உயிரை எடுக்கிறதும் இல்லாம, சூட்டோடு சூடாக (குளிரோட குளிராகன்னு சொல்லணுமோ...?) குளிக்கவும் சொல்லி உயிரையே உறைய வைப்பாங்க.

தண்ணியைப் பார்த்தாலே பீதியாகி நரம்பெல்லாம் வைப்ரேட் ஆகியிருக்கும். திரும்பவும் போய்த் தூங்குனா அடுப்படியில இருக்கிற அண்டா குண்டாவெல்லாம் நம்மளோட தலையிலதான் வந்து விழும்ங்கிற நிதர்சனம் புரிஞ்சு ஜில்லுனு கொட்டுற தண்ணிக்கு உடம்பைக் காவு கொடுப்போம்.

தெருவுக்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறதோட கஷ்டம் இந்தச் சூழ்நிலைகள்லதான் மண்டையில் உறைக்கும். விடிஞ்சும் விடியாமலும் ரெண்டும்கெட்டான் நேரத்துலேயே கோயிலுக்குப் போயிட்டு வந்தாதான் நல்லா படிப்பு வரும்னு திட்டிக்கிட்டே துரத்தி விடுவாங்க. `இதெல்லாம் நான் கேட்டேனா முருகேசா'ன்னு மைண்ட் வாய்ஸ்ல ஓடவிட்டுட்டு நாம கோயிலுக்கு ஓடணும். பின்னே, சத்தமா சொன்னாதான் சிதைச்சிடுவாய்ங்களே...

அம்புட்டு சீக்கிரமா எழுந்திரிச்சு நாம பண்ண சாதனையைப் பாராட்டுற விதமா வாழை இலையைக் கையில் கொடுத்துப் பொங்கலும் சுண்டலையும் கொடுத்துக் கௌரவிப்பாங்க. அப்புறம், இதுக்கென்ன ஆஸ்கரா கொடுப்பாங்க? நாமளும் கிடைச்சவரை லாபம்னு ‘லபக்’னு உள்ளே தள்ளிட்டுத் தலையில் இருக்கிற தண்ணியைப் பிழிஞ்சு கையையும் கழுவிட்டு வீட்டுக்குப் போவோம்.

`இதுவரையும் உடைச்சதெல்லாம் பத்தாதாம்மா'ன்னு நம்மளைக் கதறவைக்கிற மாதிரி அடுத்த ரவுண்டுக்கு வாசல்ல கோலம் போடுறது, சாணியில் பூசணிப்பூ வைக்கிறதுனு எல்லா வேலைக்கும் நம்மளை எடுபிடியா இருக்கச் சொல்லி கார்னர் பண்ணுவாங்க. தெரியாத்தனமா கோலத்து மேலே காலை வெச்சுட்டா போச்சு. குய்யோ முறையோதான்!

ஒரு நாளுக்கே இப்படி வகைதொகையில்லாம கண்ணைக் கட்டுதே... இன்னும் முப்பது நாளைக் கடக்குறதுக்குள்ள நாம அனுபவிக்கிற கொடுமைகளை நினைச்சாலே துக்கம் தொண்டையை அடைக்குது ஃப்ரெண்ட்ஸ். போதும்ம்ம்மா..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick