“இந்தக் குரல்தான் எனக்கு கிஃப்ட்!”

‘வேட்டைக்காரன்’ படத்து வில்லன் ரவிஷங்கரின் இன்னொரு பக்கம் ஆச்சர்யமானது. கிட்டத்தட்ட 3,600 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறாராம். அவருடன் பேசியதில்...

‘‘என் அப்பா பி.ஜே. சர்மா ஆந்திராவில் பெரிய டப்பிங் ஆர்டிஸ்ட். தமிழில் இருந்து தெலுங்கில் ரீமேக்காகும் படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பார். எம். ஜி. ஆர்., சிவாஜி, நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன்னு பெரிய பெரிய நட்சத்திரங்களை தெலுங்குப் பேச வைத்திருக்கிறார். இதனால் சின்ன வயதிலேயே எல்லாமே சினிமாதான்னு முடிவுக்கு வந்துட்டேன். 40 வருஷத்துக்கு முன்னே ‘மனிஷி ரோடுனா பட்டாடு’ (ஒரு மனிதன் ரோட்டுக்கு வந்துவிட்டான்) என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோவின் தம்பி கேரக்டரில் அறிமுகமானேன். அங்கே ஆரம்பிச்ச என்னுடைய கலைப் பயணம் ‘இன்று நேற்று நாளை’ வரை வந்திருக்கிறது. என் அண்ணன் சாய்குமார் ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ வில்லன். அவர் ஒரு  பக்கம் வில்லனா நடிக்க நான் வில்லன், டப்பிங் ஆர்டிஸ்ட்னு இரட்டைக் குதிரையில் போய்க்கிட்டிருக்கேன்.

இதுவரை டப்பிங்கிற்காக ஏழு ஆந்திர அரசு விருதுகள், தமிழ்நாடு அரசு விருதுகள் வாங்கியிருக்கேன். அதோடு தமிழில் வெளிவந்த ‘சிங்கம்’ படத்தை ‘கெம்பி கவுடா’ என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் பண்ணினாங்க. பிரகாஷ்ராஜ் கேரக்டரில் நான் வெளுத்து வாங்க ‘பெஸ்ட் வில்லன் ஃபிலிம்ஃபேர்’ விருது கிடைச்சுது. அந்த ஹிட்டுக்கு அப்பறம் வரிசையா 54 படங்கள் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்துச்சு.’’

‘‘உங்க குரல் எந்த நடிகருக்கு ரொம்ப சரியா செட்டாகுதுனு நினைக்கிறீங்க?’’

‘‘எல்லாருக்கும் செட்டாகிறதாலதானே இத்தனைப் படங்கள் பண்ணியிருக்கேன். ரகுவரன் தெலுங்கில் நடித்த முதல் படத்திலிருந்து கடைசியா நடித்த படம் வரை நான்தான் டப்பிங். இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு  ‘அருந்ததி’ படத்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நான்தான் டப்பிங். சாயாஜி ஷிண்டேவிற்கு ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ படங்களில். இவங்க எல்லோரையும் விட அமிதாப் பச்சனுக்காக தெலுங்குப் படத்தில் பேசியதைத்தான் பெஸ்ட்னு சொல்வேன்.’’

‘‘இந்த குரலை வெச்சுக்கிட்டு பாட்டு வேற பாடுறீங்களே... கேட்கிறவங்க பயப்பட மாட்டாங்களா?’’

‘‘நான் பாட்டுப் பாடி இதுவரை யாரும் பயந்ததில்லை. பாடும்போது குரலை அதுக்கேற்ற மாதிரி மாத்திப்பேன். நான் பாடும்போது பயந்தவங்களை விட சாதாரணமாகப் பேசும்போது பயந்தவங்கதான் அதிகம். என்னை விட எங்க அக்கா பேசினா நீங்க ஓடியே போயிடுவீங்க. அவங்க அன்பா வாங்கனு கூப்பிட்டாகூட  ‘வாடா’ன்னு நான் ‘வேட்டைக்காரன்’ படத்தில் கத்துவேனே, அது மாதிரிதான் கேட்கும்.  எங்க வீட்டு குழந்தைகளுக்கும் இதே குரல்தான். இந்த வாய்ஸ், கடவுள் எங்களுக்கு கொடுத்த கிப்ஃட்.’’

காலரை தூக்கிச் சிரிக்கிறார் ரவிஷங்கர்!

-ஜுல்பி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick