தொண்டேன்டா!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத் தில் விருப்ப மனுக்களைப் பெற வந்தவர்களைவிட, விசுவாசத்தைக் காட்ட வந்தவர்கள்தான் அதிகம்! ‘பசையுள்ள’ அரசியல்வாதிகள் ‘அம்மா’ பெயரில் ஐந்து, பத்து விண்ணப்பங்களைப் போட்டு விசுவாசத்தைக் காட்ட, அப்பாவித் தொண்டர்கள் தலைகளில் கிரீடத்தைச் சுமந்துகொண்டு, உடம்பு முழுக்க பச்சை பெயின்ட் அடித்துக்கொண்டு, ‘அம்மா’ கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.

இரட்டை இலை சின்னத்தைக் கிரீடமாகச் சுமந்துகொண்டிருந்தார் பெரியகுளத்தைச் சேர்ந்த எம்.ஜெயராமன். ‘அம்மா’வின் கைகளால் பெற்றுக்கொண்ட ஆட்டோவை ‘அம்மா’வுக்காக மட்டுமே பயன்படுத்துவேன் எனச் சபதம் எடுத்திருக்கிறாராம். ‘‘இந்த ஆட்டோவை அம்மா என்னுடைய வாழ்வாதாரத்துக்கு உதவியா இருக்கும்னு கொடுத்தாங்க. இந்த ஏழைக்கு அம்மா செஞ்ச அந்த உதவிக்கு எப்படிக் கைமாறு பண்றதுனு தெரியலை! அதான், ஆட்டோவை பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கலாம்னு முடிவெடுத்துட்டேன். எந்த ஊர்ல கூட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு நடந்தாலும் நம்ம ஆட்டோ அங்கே நிற்கும்! கட்சிக்காரங்க அப்பப்போ பெட்ரோலுக்குப் பணம் கொடுப்பாங்க. நான் சவாரிக்கும் போவேன். அம்மாவோட புகழ்பாட எனக்குக் கிடைச்ச பெரும் பாக்கியம் இந்த ஆட்டோ’’ என்றவர், ஆட்டோவுக்குள் ஒட்டியிருக்கும் ‘அம்மா’ படங்களைச் சுற்றிக் (?!) காட்டினார். உட்கார்ந்து ஆட்டோ ஓட்டும் இடம் தவிர, அத்தனை இடங் களிலும் அசராமல் சிரித்துக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

‘அம்மா’ படங்களைத் தாங்கிய பெரிய ஃப்ளெக்ஸ் பேனர் ஒன்றைத் தன் பைக்கின் பின்புறம் கட்டிக்கொண்டு, கைப்பிடியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிக்கொடிகளையும் கட்டிக்கொண்டு, போதாதென்று ‘இரட்டை இலை’ கிரீடத்தைத் தலையில் சுமந்தபடி வித்தை காட்டிக்கொண்டிருந்தார் கே.சாரங்கபாணி. மேலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் துணைச் செயலாளராம். ‘‘இருங்க தம்பி. இதைத் தலையில மாட்டிக்கிறேன்!’’ என்று கட்சித் துண்டை தலையில் கட்டிக்கொண்டவர், கிரீடத்தை தலையில் நிறுத்திக்கொண்டு ‘‘துண்டு கட்டிக்கலைனா, தலை வலிக்க ஆரம்பிச்சுடுது தம்பி!’’ என்றபடி ஆரம்பித்தார். ‘‘தலைமுறை தலைமுறையா அம்மா விசுவாசி நாங்க. எம்.ஜி.ஆருக்குப் பிறகு நம்ம நாட்டு மக்களுக்கு நல்லது பண்றதுக்கு இவங்க மட்டும்தானே இருக்காங்க. அதனால, நம்மால முடிஞ்ச உதவியை அவங்களுக்குச் செய்யணும்னு ஆசை! இதோ... இந்த வண்டியில நான் போகாத இடமே கிடையாது. இப்போ எலக்‌ஷன்ல அம்மா ஜெயிக்கணும்னு ‘சென்னை டு கன்னியாகுமரி’ பிரசாரத்துக்குக் கிளம்பிட்டேன். போற வழியில கட்சித் தொண்டர்களைப் பார்த்துட்டு, பெட்ரோலுக்கும் சாப்பாட்டுக்கும் காசு வாங்கிக்குவேன்!’’ என்று, வண்டியை (பைக்கை) ஸ்டார்ட் செய்தார்.

‘‘தம்பி... நானும் தீவிரமான அம்மா விசுவாசிதான்’’ என வான்ட்டடாக வண்டியில் ஏறினார் எம்.ஜி.ஆர்.சீதாராமன். கட்சிக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர் வேடம் போடுவதால் இந்தப் பெயராம். தன்னைப் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளை யெல்லாம் கத்தரித்துக் கையில் வைத்திருந்தவர், வருவோர் போவோரிடம் எல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு

‘எம்.ஜி.ஆர்’ புகழ் பரப்பிக்கொண்டிருந் தார். ‘‘எம்.ஜி.ஆர்னா எனக்கு உயிர். அவர் மேல வெச்சிருந்த அத்தனை பாசத்தையும் இப்போ ‘அம்மா’ மேல வெச்சுருக்கேன்’ என்று பேச ஆரம்பித்த சீதாராமன், ‘‘தலைவர் வேஷம் போடுறவன், இங்கே வெறும் கையோட வந்திருக்கானேனு பார்க்கிறீங்களா? இங்கெல்லாம் எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுக்கிட்டு நின்னா, பிச்சை எடுக்கி றேன்னு நினைச்சுக்குவாங்க. எனக்கு கட்சிக்காரங்க கொடுக்கிற காசை விட, தலைவரோட தன்மானம் முக்கியம்!’’ என்று போட்டாரே ஒரு போடு!

இது தவிர, முடியை ‘இரட்டை இலை’ வடிவில் வெட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார் ஒருவர். உடம்பு முழுக்க ‘234 அம்மா’ என்ற கேப்ஷனோடு திரிந்துகொண்டிருந்தார் இன்னொருவர். மேற்சொன்ன இருவரைத் தவிர, இன்னும் சிலரும் ‘இரட்டை இலை’ கிரீடத்தைக் கஷ்டப்பட்டு சுமந்துகொண்டிருந்தார்கள்! 

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick