உங்களில் யார் அடுத்த முதல்வர்?

‘அடுத்த முதல்வராக இவர் இருந்தால்தான் என்ன?’ என சிறு மூளையும் பெருமூளையும் சேர்ந்து வேலை பார்த்தபோது சிக்கிய பிரபலங்கள் இவர்கள்...

கமல்ஹாசன்: தன் பேட்ச் மேட் ரஜினி ‘எப்போ எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது... வரவும் தெரியாது. வரவும் மாட்டேன்’ என குத்தடி குத்தடி சைலக்கா என ரசிகர்களைக் குமட்டில் குத்தியதைப்போல் கமல் குத்த மாட்டார். ரொம்ப நல்லவர். ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து தன் மனசாட்சியை உசுப்பிக் கேள்வி கேட்டவர். தான் கட்டிய வரிகள் என்னவாயிற்று எனக் கேட்டு அரசுக்கு உத்தம வில்லனாய் மாறியவர். புள்ளப்பூச்சி பன்னீர்செல்வத்துக்கே கொடுக்கு முளைத்தபோதும் மிகச் சாந்தமாகக் குழப்ப பதில் அளித்து வாயைக் கட்டியவர். ‘களத்தூர் கண்ணம்மா’விலிருந்து சினிமாவில் முட்டி தேயத் தேய நடித்து வருபவர். ஊழலை ஒழிக்கத் தனி மனிதனாக இந்தியனில் களம் கண்டவர். இவை எல்லாவற்றையும்விட தன் சமீபத்திய படத்தில்கூட ‘சொன்னால் செய்வேன். உங்ககிட்டேயும் அதையே சொல்லிக்கிறேன்!’ என பகிரங்க சவால் விட்டவர். இவர் ஒருமுறை வரலாமே ஃப்ரெண்ட்ச்!

பிரேம்ஜி: விரல்களாலேயே பல வித்தைகளைக் காட்டத் தெரிந்த இவர் தன் விரல் அசைவால் சட்டமன்றத்தைக் கட்டிக்காப்பார். ‘எவ்வளவோ பண்ணிட்டோம்... இதப் பண்ண மாட்டோமா?’ என எதைக் கொடுத்தாலும் சூப்பராய் பண்ணி அசத்துவார். ‘என்ன கொடுமை பிரேம்ஜி இது?’ என கேப்டனைப் போலவே ‘எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா இது?’ எனக் கேட்பார். இவர் பெயரிலேயே ஒரு தொழிலதிபர் இருப்பதால் அந்நிய முதலீடுகள் எக்கச்சக்கமாக கிடைக்க வாய்ப்பு உண்டு!

சிவக்குமார்: அப்பழுக்கற்றவர். தன் பேச்சுத் திறமையால் பல வெளிநாட்டு முதலீடுகளைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரும் திறமை உள்ளவர். வடக்கே மோடி எப்படி யோகாவை வாழ வைத்தாரோ அதேபோல தெற்கே சிவக்குமார். தன் வீட்டுக்குள்ளேயே சிங்கத்தையும் சிறுத்தையையும் வளர்ப்பதால் தைரியமாக எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பார். அப்படி முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கு கம்பராமாயணம் டி.வி.டி! அதனால் இவரை வழி மொழிகிறேன் ஃப்ரெண்ட்ச்!

சிவகார்த்திகேயன்: குத்துச்சண்டை படத்துக்கே ‘மான் கராத்தே’ எனப் பெயர் வைத்து ஹீரோவாக நடித்தவர். ஹன்சிகா மோத்வானியையே ‘டார்லிங்கு டம்பக்கு’ என அழைத்தவர். பல குரல்களில் வெளிநாட்டுத் தலைவர்களோடும் மத்திய அமைச்சர்களோடும் ஏன் பிரதமரோடும் பேசி தமிழ்நாட்டுக்குப் பல நலத்திட்டங்களை இவரால் கொண்டுவர முடியும். எல்லாவற்றையும்விட இவர் நண்பர் சதீஷோடு சிம்பிளாய் நைட் ரவுண்ட்ஸ் வந்து மக்கள் படும் அவதியைக் கண்கூடாகப் பார்க்க முடியும். அதனால் ஐ சப்போர்ட் சினாகானா!

டி.ஆர்: வீட்டிலேயே ஒரு பெரும் பிரச்னையோடு வாழ்ந்து வருபவர். ஆப்பிரிக்கன் இசை முதல் பப்புவா நி கீனியா நாட்டின் தேசிய கீதம் வரை வாயாலேயே இசைக்கும் வல்லமை உள்ளவர். ரைமிங்காய்ப் பேசி எதிர்க்கட்சிகளை அவையை விட்டு நிரந்தரமாக வெளிநடப்பு செய்யும் வலிமை பெற்றவர். தாய்க்குலங்களின்மீது எம்.ஜி.ஆருக்கு அடுத்து அதிகப் பாசம் வைத்துள்ளவர். இவர் ஆட்சிக்கு வந்தால் தாய்க்குலங்கள் பாதுகாப்புத் துறை ஒன்றை நிச்சயம் அமைப்பார் என நம்புவதால் இவரை ஆதரிக்கிறேன்.

நயன்தாரா: தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார். சூப் பாய் முதல் சின்ஸியர் பாய் விஜய் சேதுபதி வரை இவருக்கு ஃபேன்ஸ் இருப்பதால் இவரை தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருக்க வழிமொழிகிறேன். மாற்றம் முன்னேற்றம் நயன்தாரா!

-சரண்ஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick