காதல் பல்பு வாங்குவது எப்படி?

நாம என்னதான் ஆர்யா மாதிரி ரொமான்டிக்கா லுக்கு விட்டாலும், அது என்னமோ ‘மேட்டுக்குடி’ பட கவுண்டமணியைப் பார்க்கிற மாதிரிதான் இந்தப் பெண்ணுலகம் நம்மைப் பார்க்குது. அப்படி அசிங்கப்பட்ட சில தருணங்கள்...

நமக்கு ஒழுங்கா கோடுகூட வரைய வராது. நமக்குள்ள இருக்கிற லியானார்டோ டி காப்ரியோவை... ச்சை, லியானார்டோ டாவின்சியை ஏழாம் அறிவின் மூலம் எட்டிப் பார்க்க வைப்பது நம்ம மனசுக்குப் பிடிச்ச பொண்ணுதான். ஆசையா அவளோட படம் வரைஞ்சி கொண்டு போய் கொடுத்தா, ‘செமையா வரையிறே, என்னையும் ஷாஹித் கபூரையும் இப்படி சேர்த்து வரைஞ்சு கொடு’ன்னு சொல்லிட்டாங்க. அட, இந்திப்பட லூசே!

வைரமுத்து மாதிரி நாம ‘காதலி காவியம்’ எழுதிக் கொடுத்தாலும், ‘மரத்துல தொங்குது காய், தூங்கத் தேவை பாய்’னு எவனோ எழுதிக் கொடுத்த மொக்கைக் கவிதையை செமைனு சொல்லி நம்மை அழுவாச்சி காவியம் ஆக்கிடுவாங்க!

காலேஜ்ல நடக்கிற விழாக்கள்தான் பலருக்கு காதலைச் சொல்ல ஏற்ற தருணம். நமக்கு பெரிய டிப்பார்ட்மென்ட் ரெப் மாதிரி பெரிய பதவி கொடுத்து இருப்பாங்க. பரிசு வழங்கும் விழா சமயத்துல, ‘டிப்பார்ட்மென்ட் ரெப், மேடைக்கு வரவும்னு’ சொல்ல, அப்படியே ஷாக் ஆகிட்டேன். நம்ம பெர்ஃபார்மன்ஸ்தான் நல்லா இருக்காதே, அப்புறம் என்ன விருதுனு அமைதியா இருந்தா, ‘மேடைக்கு சீக்கிரம் வரவும்’னு ஒரு குரல். நமக்கு பிடிச்ச பொண்ணு முதல் வரிசையில உட்கார்ந்து இருக்கும். கெத்தா ஹீரோ மாதிரி மேடை ஏறினா, ‘இந்த ஜக்ல தண்ணி பிடிச்சுட்டு வா’ன்னுட்டாங்க. அந்தப் பொண்ணு விழுந்து புரண்டு சிரிக்க, ஜக்கையே விருது மாதிரி வாங்கிட்டு வந்தேன்!

காதல் சொல்லலாம்னு போகிற சமயம் எல்லாம், திக்குத் தெரியாம திக்குமுக்காடி, திக்கித்திணறி (எத்தனை தி) ஒண்ணும் சொல்லாம வந்துடுவேன். இப்படி எல்லாத் திக்கையும் கடந்து ஒருநாள் சொல்லியே ஆகணும்னு போனா, அவள் லீவு போட்டு இருப்பாள். படிக்கிறப்போ செய்யும் காதல் பாதளத்துல போய் முடியும்னு ஆட்டோகிராஃப் சேரன் சொன்னது உண்மைனு நமக்கு எல்லாம் புரியறப்போ வேலைக்கு சேர்ந்து ஆப்பீசர்கள்கிட்ட திட்டு வாங்கிட்டு இருப்போம்!

பள்ளி, கல்லூரி நாட்கள்ல காதலைத் துரத்தித் துரத்தி சொல்ல இருப்பது வண்டி மட்டும்தான். நம்ம நண்பனோட அப்பாகிட்ட இருக்கிற டி.வி.எஸ் 50-யை பல்சரா நினைச்சு நண்பனோட வீடு தேடி நாயாய் அலைவோம். பொண்ணோட அக்கா, தங்கை, அந்த வீட்டுல இருக்கிற நாய்னு அந்த வீடே நம்மகூட நட்பாகிடும். ஒரு நல்ல நாள்ல, ‘வித் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்’னு அந்தப் பொண்ணு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடும். நாம அதுக்கு லைக் வேற போட்டுத் தொலைவோம்!

இன்டர்வியூல நமக்கு முன்னாடி நிற்கிற பெண்ணை விட அழகான பொண்ணு யாருமே இல்லை என்ற எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நல்ல நாள்ல, நமக்கு முன்னாடி நிற்கிறவங்களோட படிப்புத் தகுதியைப் பார்த்தால், நம்மை விட நாலு வருஷம் சீனியர்னு தெரிய வரும். தனுஷ், சச்சின்னு முன்னோர்களை மனசுல நினைச்சுட்டு அடுத்த பக்கம் திருப்பினா, அனுபவம் பத்து வருஷம்னு போட்டு இருக்கும். அப்போ ஒண்ணே ஒண்ணுதான் தோணுச்சு, நாம அங்கிள் ஆகி பல வருஷம் ஆச்சுடே!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick