நாக்-அவுட்!

‘இறுதிச் சுற்று’ படத்தில் பாக்ஸிங் கோச்சாக நடித்த நம்ம மாதவன், மீன் விற்கும் ரித்திகா சிங்கிற்கு பாக்ஸிங் சொல்லிக் கொடுப்பதற்காக நேரில் அழைப்பார். ஒரு சேஞ்சுக்கு நம் அரசியல்வாதிகள் இந்த சீனில் நடித்திருந்தால் எப்படி இருக்கும்?

விஜயகாந்த்: ‘இந்தப் பாரு மதி புள்ள! தமிழ்நாட்டுல பாக்ஸிங் கத்துக்கிறவங்களோட எண்ணிக்கை 326. அதுல பாக்ஸிங் மட்டுமே கத்துக்கிறவங்க 124. பாக்ஸிங்கோட வேற எதையாச்சும் கத்துக்கிறவங்க 36 பேரு. நீ எங்கிட்ட பாக்ஸிங் கத்துக்கிட்டா தூக்கி அடிக்கிறதை ஈஸியா சொல்லிக் கொடுப்பேன். லெக் ஃபைட்டை வீட்டுக்கே வந்து இலவசமா சொல்லிக் கொடுப்பேன். எங்கிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அட்டாக் பண்ற டெக்னிக்கும் இருக்கு. ஆங்..!’

வைகோ: ‘அம்மா மதி! மீன் கூடையை நீ தூக்கும் திறத்தைப் பார்க்கும்போது எனக்கு கிரேக்க இதிகாசங்கள் கண்முன் நிழலாடுகின்றன. திரண்ட தோள்களுடைய உன் தோற்றத்தைப் பார்க்கும்போது பூமிப்பந்தை தன் தோள்களில் தூக்கிச் சுமந்த கிரேக்க இதிகாச நாயகன் ஹெர்குலிஸ் ஞாபகத்தில் வருகிறான். தமிழகம் தழுவிய மாரத்தானிலும் உலகம் தழுவிய குத்துச்சண்டையிலும் உன்னைப் பெரிய ஆளாக ஆக்கிக் காட்ட வேண்டியது என் பொறுப்பு. நீயும் என் கட்சிக்காரர்களைப் போல பாதியிலேயே கழட்டிவிட்டு ஓட மாட்டாய் என்று நம்புகிறேன்!”

சுப்பிரமணியன் சுவாமி: ‘ஏம்மா ரப்பிஷா மீன் வித்துண்டுருக்கே... எனக்கு மைக் டைசனோட அவ்வளவு டெக்னிக்கும் தெரியும். தோ பாரு இப்போகூட ஹோலிஃபீல்டைப் பார்த்துட்டுதான் வர்றேன். வீட்டுல முகமது அலியை வெச்சு பூஜிச்சுண்டு இருக்கேன். ரிங்ல இறங்காமலே சாம்பியன் ஆனவன் நான். எங்கிட்ட கத்துக்கிட்டா ஈஸியா வேர்ல்டு...ம்ஹூம்...கேலக்ஸி சாம்பியனாவே ஆகிடலாம்!’

ஸ்டாலின்: ‘பாரும்மா...என்னைவிட வெயிட்டான எங்க அண்ணனையே தூக்கி வீசிட்டுதான் இங்கே வந்து நிற்கிறேன். எனக்கு என் அப்பானா மட்டும்தான் பயம். மத்தபடி இந்த உலகத்துல யாருக்கும் பயப்பட மாட்டேன். மிசா காலத்துல நான் தற்காத்துக்கிட்ட டெக்னிக்கை உனக்கு ஈஸியா சொல்லிக் கொடுக்கிறேன். உன்னோட பயம்லாம் முடியட்டும். விடியறதுக்குள்ள க்ளாஸுக்கு வந்து சேர்ந்துடு. பக்கத்து தெருக்கு எனக்கு சைக்கிளிங் ட்ரெயினிங் க்ளாஸ் இருக்கு. வரட்டா!’

ஜெயலலிதா: ‘நான் உன் அன்புச்சகோதரியாக வந்திருக்கிறேன். அம்மான்னும் என்னைக் கூப்பிடலாம். எனக்குனு யாருமில்லை. அதனால் என்னிடம் குத்துச்சண்டை பழக நீ வந்தால் உன்னை என் வளர்ப்பு மகளாக, அன்புச் சகோதரியாக நினைத்து போயஸ் தோட்டத்தினுள் விசாலமான இடத்தில் வைத்து சகல வசதிகளோடும் உனக்குக் குத்துச்சண்டை பயிற்சி அளிப்பேன்!’

ராமதாஸ்: ‘வன்முறை இல்லாமல் சாத்வீகமான முறையில் குத்துச்சண்டை சொல்லித் தருகிறோம். ஆணும் பெண்ணும் கலந்து விளையாடும் குத்துச்சண்டைக்கு மட்டுமே நாங்கள் எதிரி. அதனால் பயப்படாமல் எங்கள் பயிற்சிப் பள்ளிக்கு வந்து தாராளமாக குத்துச்சண்டை கற்றுக்கொள்ளலாம். கட்டணங்கள் கிடையாது!’

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick