மாத்தி மாத்திப் பேசுறாங்க!

ம்ம ஹீரோக்கள் எல்லாம் ஆரம்ப காலத்துல ஒரு மாதிரி தத்துவத்தைப் பிழிஞ்சு இருக்காங்க. அதே ஹீரோக்கள் அதுக்கப்புறம் என்ன மாதிரியெல்லாம் சொல்லிருக்காங்கனு நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்குது. நீங்களே பாருங்களேன்!

‘ஆசை நூறுவகை’ பாட்டில் ‘பெண்கள் நாலு வகை இன்பம் நூறு சுவை வா’ னு ரஜினிகாந்த் பாடுறாரு. ஆனா அதுக்கப்புறம் வந்த ‘படையப்பா’ படத்துல பொண்ணுங்கள்ல சாத்வீகம், பஜ்யோதகம், பயாலகம்னு மூணு வெரைட்டி இருக்குனு மவுத் ஹார்ன் வாசிக்கிறாரு. நாலா? மூணா? ரெண்டுல ஏதாவது ஒண்ணைச் சொல்லுங்க. பொண்ணுங்க பாவம் பொல்லாதது சாரே!

‘ரமணா’ படத்துல ‘மன்னிப்பு. தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை’ங்கிற உலக ஃபேமஸ் பன்ச்சை சொல்ற விஜயகாந்த் ‘சொக்கத்தங்கம்’ படத்துல ‘‘உங்ககிட்ட சொல்லாமல் வீட்டைவிட்டுப் போனது என் தப்புதான். என்னை மன்னிச்சுருங்க”னு திரும்பி வந்து சௌந்தர்யா கேட்கும்போது மன்னிச்சு ஏத்துக்கிறாரே...அதுக்குள்ளவா ‘மன்னிப்பை’ இங்கிலீஷ்ல சேர்த்துட்டாங்க?னு படம் பாக்கும்போது லைட்டா டவுட் வந்து போச்சே மக்கழே!

‘பூவே உனக்காக’ படத்துல ‘ஒரு பூ விழுந்துட்டா, திரும்ப நிறைய பூ செடியில பூக்கலாம். ஆனா விழுந்த பூவை திரும்ப ஒட்ட வைக்க முடியாது’னு லாலாலா லா லா லாலாலா பிஜிஎம் எஃபெக்ட்டுல க்ளைமாக்ஸ்ல தத்துவம் சொல்லியிருப்பாரு விஜய். ஆனால் அதே விஜய் ‘பத்ரி’ படத்துல மோனல் பின்னாடியே சுத்திட்டு கடைசியில் செட்டாகலைன்னதும் பூமிகாவோட க்ளைமாக்ஸ்ல செட்டாகிடுவாரு. எவ்வளவோ பண்ணும்போது இதப் பண்ண மாட்டாரா என்ன?

ரஜினிகாந்த் ‘பாட்ஷா’ பட ‘ரா ரா ரா ராமையா’ பாட்டுல எட்டுப்பருவங்களால் அடங்கியதுதான் வாழ்க்கைனு அப்டியே எட்டு எட்டாக மனுச வாழ்வைப் பிரிச்சு மேய்ஞ்சிருப்பாரு. ஆனா பாருங்க ‘பாபா’ படத்து ஓப்பனிங் சாங்க்ல குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம்னு மூணு பருவம்தான் வாழ்க்கைனு சொல்றாரு. கூட்டிக்கழிச்சாலும் கழிச்சுக் கூட்டினாலும் தப்பாதான் வருது ஜி!

அஜித் நடிச்ச ‘சிட்டிசன்’ படத்துல நாலு பேரு அத்திப்பட்டியையே அழிச்சுட்டாங்கனு அவங்களுக்கும் அவங்க குடும்பம், குட்டி, பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் வரைக்கும் தண்டனை கொடுக்கணும்னு சிட்டிசனாகவே போராடுவாரு. அதே அஜித் நாம வாழணும்னா யாரை வேண்டுமென்றாலும் எத்தனை பேரை வேண்டுமென்றாலும் கொல்லலாம்னு ‘பில்லா’ படத்துல வசனம் பேசி நடிச்சுருப்பார்.

இவங்களை எல்லாம் நம்பலாமா, இல்லை நம்பக் கூடாதா பாஸ்?

-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick