பரிசுகள் பலவிதம்!

காதலர் தினத்தன்று காதலிக்கு என்ன மாதிரி வித்தியாசமான கிஃப்ட் கொடுத்து அசத்தலாம்னு யோசிச்சுட்டு இருப்பீங்க. உங்களுக்காகவே இதோ...

அழி ரப்பர்: அழி ரப்பரானது அழி லப்பர் எனவும் அழைக்கப்படும். இதுக்கும் ஒரு கவிதை வெச்சுருக்கேன். ‘பென்சிலால் எழுதிய துன்பங்களைத் துடைக்கவந்த அழி ரப்பர் நீ... அப்பப்போ குதர்க்கமா கேள்வி கேட்டு அழவும் வைப்பே நீ... நீ எனக்குத் தரும் சந்தோஷங்களை மட்டும் அமுக்கு பேனாவில் எழுதுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’. (எழுதும்போது எனக்கே கண் கலங்குதே!)கண்டிப்பா நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். பல வருட காதல்னா பெரிய சைஸ் ரப்பர் வாங்கிக் கொடுக்கலாம். அதே போல் இங்க் அழிக்கும் ரப்பர்களையும் குறியீடா கொடுக்கலாம்.

குப்பைத்தொட்டி: ‘நல்லதோ, கெட்டதோ எல்லாம் கடைசியில் குப்பைத்தொட்டிக்குதான் போகும். அது மாதிரி என் வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தும் இறுதியில் உன்னையே சேரும்’னு கவிதை போடலாம். மக்கும் குப்பைத்தொட்டி, மக்காத குப்பைத்தொட்டினு வெரைட்டி காட்டி இந்த உலகத்துக்கு எதுனா புதுசா சொல்லலாம். பிளாஸ்டிக், தகரம், இரும்பு எனப் பல பொருட்களில், பல மாடல்களில் குப்பைத்தொட்டிகள் கிடைப்பது பெரிய பலம்.

பழங்கள்: ‘கனியிருப்ப மற்ற கிஃப்ட் தருவது தப்பு’னு திருவள்ளுவரே சூசகமா சொல்லியிருக்கார். பழங்கள் வாங்கிக் கொடுத்தால் உங்க காதலி வீட்டார்களுக்கும் உங்கள் மேல் ஒரு மதிப்பு ஏற்படும். ரொம்ப நாள்  சாப்பிடாமல் வெச்சுருந்தா பழம் அழுகிப் போயிடும், அது மாதிரி எதையும் வெளிப்படையாப் பேசிக்கலைனா காதலும் அழுகிப் போயிடும். இவ்வளவு ஏன் ஆதாம், ஏவாளுக்கு காதல் வந்தது ஒரு பழத்தால்தான். நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிச்சதும் ஒரு பழத்தால்தான். ‘கரகாட்டக்காரன்’ படம் ஓடியதும் ஒரு பழத்தால்தான். இப்படி பழங்களோட அருமையைத் தெரிந்து கொள்ளுங்கள். அதே மாதிரி பிரேக்- அப் பண்ணிக்கலாம்ங்கிற ஐடியா மனசுல இருந்தால் குறியீடாக ‘புளியம்பழத்தை’க் கொடுக்கவும்.

இதில் நீங்க எந்த கிஃப்ட் கொடுத்தாலும் சரி, கிஃப்டைக் கொடுத்துவிட்டு பத்தடி தள்ளிப் போய் நின்றுவிடுங்கள். அதே போல் தலைக்கவசமும் உயிர்கவசம். ஹெல்மெட் அணிந்து செல்வது இன்னும் நன்று!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick