பாத்ரூம் போனால் பரிசு!

‘இங்கு சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கப்படும்’ என்ற அறிவிப்பை ரயில், பஸ் நிலையங்களில்  பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘கழிவறையில் சிறுநீர் கழித்தால் 5 ரூபாய்க்கு பேனா கிஃப்ட்’ என்று எழுதி வைத்துள்ளார்கள் என்றால் ஆச்சர்யம்தானே! எங்கே?

சென்னை அண்ணாநகர், வேலங்காடு இடுகாட்டில் தான் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சுடுகாட்டை சில ஆண்டுகளாக ஐ.சி.டபுள்யூ.ஓ என்ற என்ஜிஓ அமைப்பு பராமரித்து வருகிறது. அடிப்படை வசதிகளில் அக்கறை செலுத்திய இந்த அமைப்பு அதில் ஒருகட்டமாக அங்குள்ள கழிவறைகளைப் பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இருப்பினும் கழிவறைகளை மக்கள் பயன்படுத்தாமல் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தனர். இதைத் தடுக்க, ‘கழிவறையைப் பயன்படுத்தினால் பேனா பரிசாக வழங்கப்படும்’ என்று அறிவித்தனர். அதன்பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்து 50 ரூபாய்க்கு செல்போன் ரீசார்ஜ் செய்தனர். இந்த புத்தாண்டிலிருந்து மீண்டும் 5 ரூபாய் பேனாவைப் பரிசாக வழங்கி வருகிறார்கள்.

மேலும் இடுகாட்டின் சுற்றுச்சுவரில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதுவும் அங்கு வருபவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனால் இது இடுகாடு என்ற நினைப்பே பலருக்குத் தெரிவதில்லை.

இதுகுறித்து இடுகாட்டைப் பராமரிக்கும் அலுவலக மேலாளர் பிரவீனாவிடம் பேசினேன், “2014 ஆகஸ்ட் மாதத்தில் இடுகாட்டில் பயனற்றுக் கிடந்த கழிவறைகளைப் பராமரித்து புதுப்பித்தோம். அதன்பிறகும் அதை யாரும் பயன்படுத்தவில்லை. இதனால் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு கழிவறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. பேனா பரிசுத் திட்டத்தை மாற்றி செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய முடிவு செய்தோம். 2015 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து தினமும் ஒருவருக்கு 50 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் செய்தோம். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பேனா கொடுத்து வருகிறோம். பரிசுப் பொருள் வழங்குவது எங்களது முக்கிய நோக்கமல்ல. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கவே இதுபோன்ற பரிசுப் பொருட்களை அறிவித்து வருகிறோம்” என்றார்.

சூப்பர்!

-எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick