தனுஷ் மேஜிக் எடுபடுமா?

னுஷ் ஹாலிவுட்டில் நடிக்கப்போகும் படத்தின் கதை ‘The extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An IKEA Wardrobe’ என்ற நாவலின் கதைதான் (கொஞ்சம் நீளம்தான்) என்றதுமே அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். அதிலிருந்து யூகித்ததில் இருந்து...

தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் அஜாஷத்ரு ஓகாஷ் ரத்தோட். கசங்கிய வெள்ளைச் சட்டை, கட்டவே தெரியாமல் ஒரு சிவப்பு டை, அதன் மேல் ஒரு சில்க் கோட், தலையில் டர்பன், பெரிய மீசை, வாயில் வளையம் என நாம் எதிர்பார்த்திராத லுக்கில் தனுஷ் இருப்பார் என்பது மட்டும் நிஜம்.

ராஜஸ்தானில் தன் கிராமத்து மக்களிடம் தனக்கு மந்திர சக்திகள் இருப்பதாகச் சொல்லி, சின்னச் சின்ன வித்தைகள் செய்து வாழ்ந்து வருபவர் தனுஷ். தனக்கு ஒரு முள்படுக்கை வேண்டுமென தன் கிராம மக்களை நம்பவைத்து, அது கிடைக்கும் கடையான ஃப்ரான்ஸிற்குக் கிளம்பி வருகிறார். தன் உறவினர் செய்து கொடுத்த 100 யூரோ கள்ளநோட்டு ஒன்றை (ஒரு பக்கம் யூரோ, மறுபக்கம் வெள்ளைத் தாள்) வைத்துக்கொண்டு   கடைக்குச் செல்கிறார். டாக்ஸிக்காரரிடம் நோட்டைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு மேஜிக் செய்து தன் வசம் வைத்துக் கொள்கிறார்.

அவர் எதிர்பார்த்ததை விடப் பெரிதாக இருக்கிறது அந்தக் கடை. சுற்றிப்பார்த்துவிட்டு முள்படுக்கையின் விலையைக் கேட்க 115.89 யூரோ என்கிறார் கடையில் இருப்பவர். கள்ளநோட்டை வைத்துக்கூட வாங்க முடியாது என யோசித்துக்கொண்டு அங்கேயே நிற்கிறார் தனுஷ். அடுத்த நாள் மீண்டும் இந்தியா வருவதற்கான டிக்கெட்டைத் தவிர அவரிடம் எதுவும் இல்லை.

பணம் எதுவும் இல்லாததால், உணவு வாங்கும் வரிசையில் தன் மேஜிக்கை வைத்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார். அவருக்கு முன் ஓர் அழகான பெண் நிற்க தன்னிடம் இருக்கும் கண்ணாடிகளைப் போட்டுக்கொண்டு அந்தப் பெண்ணை உரசும்படி நிற்கிறார். அந்தப் பெண் அதிர்ச்சியில் திரும்ப, இவர் மேல் மோதி கண்ணாடி சுக்கு நூறாக உடைகிறது. (எல்லாமே மேஜிக் தான்). அந்தப் பெண் 20 யூரோவும் கொடுத்து, இவருக்கு உணவும் வாங்கிக் கொடுக்கிறாள். இருவருக்குமே கண்டதும் காதல். அந்தப் பெண் சிரித்துப் பேசிவிட்டுப் போகிறாள். இரவு கடை சாத்தப்படும் நேரத்தில் கட்டிலுக்கு அடியே ஒளிந்துகொள்கிறார் தனுஷ்.

கடை மூடியவுடன், அங்கு இருக்கும் உணவைச் சாப்பிட்டு ஜாலியாய் சுற்றிக்கொண்டு இருக்கிறார். சில மணி நேரம் கழித்து யாரோ வர, அங்கு இருக்கும் ஒரு அலமாரியில் ஒளிந்துகொள்கிறார். இதெல்லாம் நடந்து முடிவதற்குள், அந்த டாக்ஸி டிரைவர் ஏமாற்றப்பட்டதை உணர்கிறான். போலீஸில் புகார் அளிக்க, எல்லோரும் தனுஷைத் தேடுகிறார்கள். தனுஷ் அந்த அலமாரியோடு பிரிட்டனுக்கு பார்சல் செய்யப்படுகிறார். கதை இதற்குப் பிறகு பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, லிபியா எனப் பல நாடுகளில் பயணிக்கிறது. மறுபடியும் ஃப்ரான்ஸ் வந்தாரா, அந்தப் பெண்ணைக் கரம் பிடித்தாரா, டாக்ஸி டிரைவர் துரத்தல் என்னவானது? என்ற கேள்விகளுக்கு ஜாலியாக விடை கொடுத்து முடிகிறது நாவல்.

கற்பனைக் கதைதான் என்றாலும், சோகத்தைக்கூட மிக ஜாலியாக, சொல்கிறது கதை. 2013-ல் ஃப்ரெஞ்சில் நாவலாக வெளிவந்தபோது ஃபிரான்ஸிலேயே தெறி ஹிட். தனுஷுக்கு நடிக்க ஏகப்பட்ட ஸ்கோப் படத்தில் இருப்பதால், தனுஷ் ரசிகர்கள் மட்டும் அல்லாது, படம் பார்க்கும் எல்லோருக்கும் ஆச்சர்யங்கள் காத்து இருக்கின்றன!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick