அட்டென்ஷன் ஆஸ்கர்!

பெரும்பாலும் ஆஸ்கர் விருதுகள் என்பது ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தான். இருந்தாலும், நம் ஊர் படம் ஏதாவது விருது வாங்குகிறதா? உலகம் முழுக்க பலர் ஆர்வமாக பார்க்கும் ஒரு விருதாகவே ஆஸ்கர் இருக்கிறது. பிப்ரவரி 29-ம் தேதி ஒளிபரப்பாகும் ஆஸ்கர் விருதுகளில் இவற்றைக் கவனிக்க மிஸ் பண்ணிடாதீங்க.

‘கிராவிட்டி’, ‘பேர்ட்மேன்’ படங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் எம்மானுவேல் லுபேஸ்கி ‘தி ரெவனென்ட்’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற் கான ஆஸ்கரை வென்றால், எம்மானுவேல் ஹாட்ரிக் நாயகன்தான்.

‘மேட்மேக்ஸ்’ சீரியஸின் நான்காவது பாகம்தான் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மேட்மேக்ஸ் ஃப்யூரி ரோடு’ மூவி. இதற்கு முன்னர் அதன் இயக்குநர் ஜியார்ஜ் மில்லர் வேறு படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வாங்கி இருந்தாலும் மேட் மேக்ஸ் சீரியஸுக்காக 70 வயதான மில்லர் பரிந்துரைக்கப்படுவது இதுதான் முதல் முறை. 

ஆஸ்கர் விருதுகளில் தொடர்ச்சியாக இருமுறை சிறந்த நடிகருக்கான வாங்கியவர்கள், ஜேசன் ரோபார்ட்ஸ் (1976, 1977) மற்றும் டாம்  ஹாங்க்ஸ் (1993,1994). 20 ஆண்டுகளுக்குப் பின் அந்த வாய்ப்பு எட்டிக்கு எட்டியிருக்கிறது. லியானார்டோ டிகாப்ரியோவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் கொடுக்கப்படவில்லையெனில் ‘தி டேனிஷ் கேர்ள்’ நாயகன் எட்டி தான் எல்லோரது சாய்ஸும்.

ஆஸ்கர் விருதுகளுக்கு ஒரு மாதம் முன்பு நடக்கும் கோல்டன் குளோப் விருது வெல்பவர்கள், கண்டிப்பாக ஆஸ்கர் வெல்வார்கள் என்றுதான் கடந்த கால அனுபவங்கள் சொல்கின்றன. ஏனெனில் முன்னணி விருதுகளை காமெடி, மியூஸிகல், டிராமா என விருதுகளைப் பிரித்து அளிக்கிறார்கள்.இதன்படி கோல்டன் குளோப் பரிந்துரைப் பட்டியலில் இருப்பதே ஆஸ்கருக்குள் நுழைந்தது மாதிரிதான். அதிலும் கோல்டன் குளோப் வெல்லும் நடிகர்கள், 80 சதவிகிதம் வெல்வார்கள். இதில் மீதம் இருக்கும் 2௦ சதவிகிதம்தான் டிகாப்ரியோ போன்றவர்கள். கோல்டன் குளோப் விருதுகளை இதுவரை ‘தி ஏவியேட்டர்’, ‘வுல்ப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படங்களுக்காக வாங்கி இருக்கிறார் டிகாப்ரியோ. ஆனால் இந்தப் படங்கள் ஆஸ்கரின் பரிந்துரைப் பட்டியலில் இருந்தாலும் விருதின் வாசலை எட்டவில்லை. ‘தி ரெவனென்ட்’ படமும் அந்தப் பட்டியலில் சேருமா என்பதைப் பார்க்க பிப்ரவரி 28 வரை காத்து இருக்க வேண்டும். ஏனெனில், இந்த ஆண்டின் கோல்டன் குளோப் நாயகனும் டிகாப்ரியோ தான்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின், ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் பரிந்துரைக்கப்படுகிறார் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ சில்வர்ஸ்டார் ஸ்டாலோன். இதற்கு முன் 1976-ம் ஆண்டு அவரது ‘ராக்கி’ படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டார் ஸ்டாலோன்.

‘மேட்மேக்ஸ்’ படத்தில் ஹீரோ வேடமாக இருந்தாலும் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் எதுவும் டாம் ஹார்டிக்கு கிடையாது. ஆனால், ‘தி ரெவனென்ட்’ படத்தில் வில்லனாக கலக்கி இருக்கிறார் மனிதர். துணை நடிகருக்கான பட்டியலில் ஆஸ்கருக்கு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார் ஹார்டி. சில்வர்ஸ்டார் ஸ்டாலோனின் விருதுக் கனவை கலைக்கும் நிலையில் இருப்பது ஹார்டிதான்.

‘டைட்டானிக்’ பட காதல் ஜோடி டிகாப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் தான் கோல்டன் குளோப் விருதுகளின் ஹைலைட். இருவரும் ஒரே ஆண்டில் விருது வாங்கியது இதுதான் முதன்முறை. (சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை). ஆஸ்கரிலும் இந்த மேஜிக் நிகழுமா எனக் காத்து இருக்கிறார்கள் கப்பலின் காதலர்கள்.

ஆஸ்கரில் ஆச்சரியங்களுக்கு பஞ்சமே இருக்காது. பல முன்னணிப் படங்களை புறம் தள்ளிவிட்டு, ‘ஸ்பாட்லைட்’ படம் சிறந்த படத்துக்கான விருது வாங்கி விடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள் பலர்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick