கிளம்பிட்டாய்ங்கய்யா!

ந்த ஆண்டு ஆங்கிலப் படவுலகில் அதிக அளவில் சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாக இருக்கின்றன. படங்களைப் பற்றிய ஒரு பார்வை.

பேட்மேன் Vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்

டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களான பேட்மேனும் சூப்பர்மேனும் திரைப்படம், காமிக்ஸ், வீடியோ கேம், பொம்மைகள் என வெளியான எல்லா வகைகளிலும் தெறி ஹிட் வசூல் அள்ளியவர்கள். சூப்பர்மேனும் பேட்மேனும் சண்டையிட்டுக்கொள்ளும் படம்தான் வரும் மார்ச்சில் வெளியாக இருக்கும் பேட்மேன் Vs சூப்பர்மேன். பேட்மேனின் நகரமான கோதமை விட்டு, சூப்பர்மேனை எதிர்க்க சூப்பர்மேனின் மெட்ரோபோலீஸ் நகரத்திற்கு வருகிறான் பேட்மேன். அவர்களுக்குள் நடக்கும் சண்டையில், மெட்ரோபோலீஸ் நகரத்தை அழிக்க வழக்கம்போல் புதிதாய் ஒரு வில்லன் வருகிறான். பிறகென்ன, பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர்வுமன் எல்லோரும் இணைந்து வில்லனை எப்படி அழிக்கிறார்கள் என்பது கதை.

கேப்டன் அமெரிக்கா - சிவில் வார்:

டிசி காமிக்ஸ் பேட்மேனை, சூப்பர்மேனை வைத்து செய்யும் கொத்து பரோட்டாவை, மார்வெல் காமிக்ஸ் அயர்ன்மேனையும், கேப்டன் அமெரிக்காவையும் வைத்து செய்யப்போகிறது. ஆம். கண்டுபிடிச்சிட்டீங்களா? கேப்டன் அமெரிக்கா நல்லதே செய்தாலும், அது அரசுக்குப் பிடிக்காமல் போகிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்களைக் காப்பாற்றுவேன் என கேப்டன் அமெரிக்கா ஒரு அணியாகவும், அரசோடு இணைந்து செயல்படுவேன் என அயர்ன்மேன் தலைமையில் ஒரு அணியும் களம் இறங்குவதுதான் கதை. பிளாக் விடோ, பிளாக் பாந்தர், ஹாக் ஐ, வின்ட்டர் சோல்ஜர் என படத்தில் ஒரு டஜன் சூப்பர் ஹீரோக்கள் தலை காட்டுவார்கள் என்பது கொசுறுத் தகவல். இந்த இரு அணிகளும் சண்டை போட, எப்படியும் ஒரு வில்லன் வருவான், இவர்கள் இணைவார்கள், அவனை அழிப்பார்கள். வரும் ஏப்ரலில் வெளியாகப் போகும் இந்தப் படத்திற்காக இப்போதிருந்தே காத்துக்கிடக்கிறார்கள் மார்வெல் ரசிகர்கள்.

எக்ஸ் மென் : அபோகாலிப்ஸ்

க்ஸ்மென் சீரீயஸின் ஒன்பதாவது பாகம் இது. உலகை முழுவதுமாக அழித்துவிட்டு புதிய உலகைப் படைக்க வருகிறான் வில்லன். கடந்த டிசம்பர் மாதம் வெளியான இதன் ட்ரெய்லரே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘எனது பல ஆயுளில், எனக்குப் பல பெயர்கள் வைக்கப்பட்டன. ராம், கிருஷ்ணா, யாஹுவே. மனிதன் தோற்றதுக்கு காரணம் குருட்டுத்தனமான தலைவர்களை நம்பியது. பரிணாமத்தை நோக்கி உலகம் போகாதபோது, அதை அழித்துவிட்டு புதிதாய் உருவாக்குவேன்’ என ஆரம்பிக்கிறது ட்ரெய்லர். இளைய எக்ஸ்மென் குழுவை வைத்துக்கொண்டு  ஜெனிஃபர் லாரென்ஸ் எப்படி இந்தக் கும்பலை அழித்தார் என்பதைத் தெரிந்துகொள்ள மே மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

சூசைட் ஸ்குவாட்:

சூப்பர் ஹீரோக்கள் தங்கள் படங்களில் பிடித்து வைத்து இருக்கும் வில்லன்கள்தான் சூப்பர் வில்லன்கள். அப்படிப்பட்ட கொடூர ஜீவன்களை வைத்து சில காரியங்களைச் செய்கிறது அரசு. இவர்களுக்குத் தரப்பட்ட வேலைகளை இவர்கள் செய்துவிட்டால், இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். ஒரு லூசு வில்லன் இருந்தாலே படத்தில் காமெடிகளுக்கு குறைவு இருக்காது. இதிலோ படம் முழுக்க லூசு வில்லன்கள். ஆக்‌ஷன், காமெடி, ஃபேன்டஸி எனக் கலவையாக வந்து இருக்கிறதாம் படம். ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு. காரணம் வில் ஸ்மித்தும் ஒரு சூப்பர் வில்லன்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick