இப்போ ஆபாசமா பேசுறதில்லை!

தி.மு.க பேச்சாளராக மைக் பிடிக்க ஆரம்பித்து அடுத்த வருடம் 50-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தீப்பொறி ஆறுமுகம் 76 வயதைக் கடந்தும் மேடைகளில் எதிர்க்கட்சிகளைத் தெறிக்க விடுகிறார். அவரிடம் ஜாலியாகப் பேசினேன்.

“உங்களுக்கு தீப்பொறி ஆறுமுகம் என்ற பெயர் வந்தது எப்படி?’’

‘‘1967 சட்டமன்றத் தேர்தல் சமயம். அப்போ விழுப்புரத்தில் அண்ணா கலந்துக்கிற பொதுக்கூட்டத்தில நானும் பேசுறதுக்குப் போனேன். மார்ச் 8-ம் தேதி அந்தக் கூட்டம் நடந்துச்சு. ராத்திரி 8 மணிக்கு கூட்டம் தொடங்குச்சு. உள்ளூர்ப் பேச்சாளர்கள் எல்லாம் பேசின பிறகு ஒரு மணிக்கு நான் பேசினேன். அதுவரைக்கும் அண்ணா வரலை. அதிகாலை மூணு மணிக்குதான் வந்தார். அண்ணா மேடைக்கு வர்றப்போ நான் பேசிக்கிட்டு இருந்தேன். ‘ஒரு பத்து நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்கின்றேன். அதுவரை ஆறுமுகமே பேசட்டும்’ என்று கட்சி நிர்வாகி ஒருவரிடம் அண்ணா சொல்லிவிட்டார். அந்த நிர்வாகி என்னிடம் இதைச்சொன்னார். 10 நிமிடத்துக்குப் பின்னர் அண்ணா மைக் பிடித்தார். அவர் பேச்சின் தொடக்கத்தில், ‘நான் தேநீர் அருந்தியபடியே ஆறுமுகத்தின் பேச்சைக் கேட்டேன். அவரது பேச்சில் தீப்பொறி பறந்தது’ என்றார். அது எனக்கு மிகப்பெரிய பாராட்டாக இருந்தது. அந்தக் கூட்டத்துக்கு அப்புறம், விழுப்புரம் கண்டமங்கலம் ஒன்றியத்துல வேறு ஒரு கூட்டத்துல பேசப்போனேன். அந்த ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் என்னை அறிமுகப்படுத்தும்போது, ‘தீப்பொறி ஆறுமுகம் பேசுவார்கள்’ என்று கூறினார். ஜெயராமனிடம், ‘என்ன இது புதுசா அடைமொழியெல்லாம் போட்டுட்டீங்க’ என்றேன். ‘அண்ணாவே, தீப்பொறி மாதிரி பேசுறீங்கனு சொல்லிட்டார். அதுக்கு மேல வேறு என்ன வேண்டும்’ என்றார். அப்போ இருந்துதான் தீப்பொறி ஆறுமுகம்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.”

‘‘சுவாரஸ்யத்துக்காக ஆபாசமாகப் பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்களே?’’

“சில நேரங்கள்ல தவிர்க்க முடியாமப் போயிடுது. எதிர் அணியில இருக்கிறவங்க கலைஞரைப் பத்தியோ அல்லது அவரது குடும்பத்தைப் பத்தியோ தரக்குறைவான வார்த்தையில பேசியிருப்பாங்க. அப்போ அவங்களுக்கு பதில் சொல்லித்தானே ஆகணும். சிலேடையாதான் பேசுவேன். ‘புரிஞ்சவன், புரிஞ்சுக்கோ.. புரியாதவன் எங்கிட்டாச்சும் போங்க... உங்களுக்கு விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சு போச்சு’ என்ற தொணியில் பேசி முடிப்பேன். இப்போவெல்லாம் ஆபாசமா பேசுறதில்ல. வெறும் நகைச்சுவை மட்டும்தான்.’’

“எம்.ஜி.ஆர். பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கீங்களே?’’

“ஆமாம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தப்போ, அவர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போ திருநெல்வேலியில ஒரு பொதுக்கூட்டத்துல பேசினேன். பேசும்போது இடையில தொண்டைக் கமறல் எடுத்தது. உடனே பேச்சை நிப்பாட்டிட்டு, கட்சிக்காரரிடம் சோடா வாங்கி வரச்சொன்னேன். அஞ்சு நிமிஷம் பேச்சை நிறுத்திட்டு நாற்காலியில உட்காந்திருந்தேன். உடனே கூட்டத்துக்கு வந்திருந்தவங்க, ‘ஏன் நிப்பாட்டிட்டீங்க. பேசுங்க பேசுங்க’னு சத்தம் போட்டாங்க. சோடா வந்த பிறகு குடிச்சிட்டுப் பேச ஆரம்பிச்சேன். ‘அஞ்சு நிமிஷம் நான் பேசினதை நிப்பாட்டினதுக்கு இப்படிக் கத்துறீங்க. ஆனா, எம்.ஜி.ஆர். ரொம்ப நாளா பேசாமலே இருக்கார். அதை யாரும் கேட்க மாட்டேங்கிறீங்க’ என்றேன். நான் பேசியது துக்ளக் வார இதழில் வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச்சு. உடனே கலைஞர் என்னைக் கூப்பிட்டுத் திட்டினார். ‘ஏன்யா அவர் எதிர் அணியில இருந்தாலும், அவர் என்னோட நண்பர். இப்படியெல்லாமா பேசுறது’னு சத்தம் போட்டு என்னைக் கட்சியை விட்டு ஆறு மாசம் சஸ்பெண்ட் செஞ்சுட்டார். அப்புறம் எம்.ஜி.ஆரே ஒரு முறை என்னைப் பாராட்டிப் பேசியதா கேள்விப்பட்டேன். ‘தீப்பொறி மாதிரி பேச நம்ம கட்சியிலே ஆள் இல்லை’னு அ.தி.மு.க நிர்வாகிகள்கிட்ட அவர் வருத்தப்பட்டுப் பேசினதா சொன்னாங்க.”

“நடிகர் ரஜினியைப் பற்றிகூட இது மாதிரி பேசிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கீங்களே?’’

“ரஜினிகாந்துக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எல்லாம் இல்லை. எப்பவுமே மதுரையில ரஜினி ரசிகர்கள் தீவிரமா இருப்பாங்க. அப்போ ஒரு முறை, ‘எங்கள் உயிர் ரஜினிக்கு’னு தெருத்தெருவா போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. ‘உயிர் ரஜினிக்குனா, உங்க உடலோட மற்ற பாகங்கள்லாம் யாருக்கு?’னு கேட்டேன். இதுவும் பேப்பர்ல வந்துச்சு. நான் பேசினதுக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. இதுக்கும் கலைஞர் என்னை சத்தம் போட்டார். ‘நம்ம கட்சியிலேயே ரஜினி ரசிகர்கள் இருக்காங்க. அதை மறந்துட்டு இது மாதிரியெல்லாம் பேசாதே’ என்றார். அப்பவும் ஆறு மாசம் என்னைக் கட்சியில் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.’’

“கட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப்படும்போது எல்லாம் என்ன செய்வீர்கள்?”

“என்ன செய்றது, வீட்டில சும்மா கிடந்தேன். மனைவி, குழந்தைகள்கிட்ட எவ்வளவு நேரம்தான் பேசிக்கிட்டு இருக்கிறது, தினந்தோறும் கட்சி மீட்டிங்ல பேசிட்டு, வீட்டில சும்மா கிடக்கிறது கஷ்டமாப் போச்சு. அப்போ ஒருத்தர் என் வீட்டுக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். அதுல ‘நான் தி.மு.க-காரன் அல்ல. உங்களுடைய ரசிகன். உங்களை தி.மு.க இழக்கக் கூடாது’னு சொல்லியிருந்தார். இப்படி வெளியில சொல்லாம என் பேச்சை பல பேர் ரசிக்கிறாங்கனு அப்போதான் புரிஞ்சுது.”

“எதிர்க்கட்சிக்காரர்களால் தாக்கப்பட்டிருக்கிறீர்களா?”

“என்னுடைய பொதுக்கூட்டம் ஏதாவது ஒரு இடத்தில நடக்குதுனா ஏதாவது ஒரு வம்பு வழக்கு இருக்கும். பார்வையாளர்கள் கூட்டத்திலே இருந்து கல்லை விட்டு எறியறது எல்லாம் சகஜமா நடக்கும். அதையெல்லாம் மீறித்தானே பேசிட்டு இருக்கோம். மேடை ஏறிட்டா கல்லு வருதா, கம்பு வருதானு பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? மதுரையில் ஒரு முறை கூட்டம் முடிஞ்சு ரிக்‌ஷாவுல வீட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். வழி மறிச்சு என்னை அடிச்சு நாக்கை அறுக்க முயற்சி பண்ணினாங்க. அதுல இருந்தும் தப்பிச்சுட்டேன். ஆனா பலமான அடி. கொஞ்சநாள் ஆஸ்பத்திரியிலே இருந்தேன்.”

“இன்னமும் கூட்டத்திலே கலந்துக்கிறீங்களா?”

‘‘மக்கள் பார்க்கிறதுக்கு, கேட்கிறதுக்கு டி.வி., செல்போன் எல்லாம் வந்தபிறகும்கூட சனி, ஞாயிற்றுக் கிழமையிலே நான் பேசுற கூட்டத்துக்கு நிறையப் பேர் வர்றாங்க. ஆச்சர்யமாதான் இருக்கு. முன்னே மாதிரி தினந்தோறும் பேசுறதில்லே. சென்னை, திருச்சி, மதுரைனு பரவலா பேசிக்கிட்டுதான் இருக்கேன். 76 வயசு ஆனாலும், ரெண்டு மணி நேரம் தொடர்ச்சியா தண்ணிகூட குடிக்காம பேச முடியுது. ஒரு மணி நேரம் அரசியல், அரை மணி நேரம் பெரியார். அரை மணி நேரம் சினிமானு கலந்துகட்டிப் பேசுவேன்!” 

-கே.பாலசுப்பிரமணி, படங்கள்: வீ.சதிஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick