ஸ்டாலின் நட்டால் அதிக மகசூலா?

‘விவசாயிகளே... உங்கள் வயலில் மகசூல் கூட வேண்டுமா? ஏக்கருக்கு மூன்று மூட்டை டி.ஏ.பி போடுங்கள். இரண்டு மூட்டை பொட்டாஷ் போடுங்கள்’ என்று விளம்பரப்படுத்துவது போய், ‘ஸ்டாலினை நாற்று நடச்சொல்லுங்கள். அமோக மகசூல் நிச்சயம்’ என்று விளம்பரப்படுத்திவிடலாம். ஏன்னு கேட்கறீங்களா?

‘நமக்கு நாமே’ பயணத்தின்போது தஞ்சாவூர் அருகே அரசூரில் உள்ள ஒரு வயலில் இறங்கி நெல் நாற்றினை நடவு செய்தார் ஸ்டாலின். தற்போது அந்த வயலில் அறுவடை நடைபெற்ற நிலையில், ‘ஸ்டாலின் கைராசியால் வழக்கத்தைவிட அதிக மகசூல் கிடைத்திருக்கிறது’ என்று பிரசாரம் செய்துகொண்டுள்ளனர் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள். அதே சமயம், ‘ஸ்டாலின் நடவு செய்த வயல் என்பதால், அதை மிகவும் கவனமாகப் பராமரித்தார் பாபு. அதனால்தான் இந்த விளைச்சல்’ என்று எதிர்வாதம் செய்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

எது எப்படியிருந்தாலும் படாதபாடுபட்டு, பண்ணாத தந்திரங்களையெல்லாம் செய்து பலரும் விளைச்சலைப் பெருக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்டாலினின் கைராசி நம்மை வியக்க வைக்கவே, இதிலிருக்கும் உண்மையை உணர்ந்துகொண்டால் எல்லா விவசாயிகளின் வயிலிலும் ஸ்டாலின் புண்ணியத்தில் பல மூட்டைகள் விளையும்,  நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உணவுப் பஞ்சமும் புஸ்வாணமாகிவிடும் என்ற நப்பாசையுடன் அந்த அதிசய வயலை நோக்கிப் பறந்தோம்.

அரசூரில் போய் இறங்கி விசாரித்தபோது, ‘‘நாட்டில் எவ்வளவோ முக்கிய பிரச்னைகள் இருக்கும்போது தி.மு.க-வினர் தேவை இல்லாமல் இதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதை ஆராய்ச்சி செய்யப் புறப்பட்டு வந்துவிட்டீர்களா?’’ என நக்கலாக சிரித்தபடியே அந்த வயலை நமக்குக் கை காட்டினர்.

வயலின் உரிமையாளரான பாபுவைச் சந்தித்தோம். ‘‘எங்கள் ஊரில் மற்ற விவசாயிகளுக்கு எல்லாம் இந்த ஆண்டு ஏக்கருக்கு அதிகபட்சம் 33 மூட்டைதான் மகசூல் கிடைச்சிருக்கு. ஆனா, ஸ்டாலின் நடவு செஞ்ச இந்த ஒரு ஏக்கர் வயல்ல மட்டும் 40 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கு. ஆனா, மிகைப்படுத்தி சொல்றதாகவும் நிறைய உரம் போட்டு வளர்த்ததாகவும் பலரும் கிண்டலடிக்கிறாங்க. இதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வழக்கம்போலதான் இந்த முறையும் உரம் போட்டுப் பராமரிச்சோம். அதிகமா உரம் கொடுத்தா, பயிர் கருகிடும். அதுவும் நாங்க பயிர் பண்ணது ஆந்திரா பொன்னி. ரசாயன உரங்கள் அதிகமா போட்டா, இந்தப் பயிர் தாக்குப் புடிக்காது’’ என்றார்.

ஊரில் உள்ள பிற விவசாயிகளிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, தங்களின் பெயர் அடையாளங்களை மறைத்துக்கொண்டு பேசியவர்கள், ‘‘நாங்க எல்லாம் 30 நாள் நாற்றுகளைத்தான் நடவு செய்வோம். பாபுவோட வயல்ல நடவு செஞ்ச நாற்றுகள் 24 நாட்களே ஆனது. அது மட்டுமில்லாம, எங்களை விட இவர் 10 நாட்களுக்கு முன்னாடியே நடவு செஞ்சுட்டார். அதனால் சூல் கட்டும் பருவத்துல லேசான மழை பாதிப்புதான் ஏற்பட்டுச்சு. அதனால்தான் இவரோட வயல்ல மட்டும் ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைச்சுது. இவரே போன வருஷம் ஏக்கருக்கு 45 மூட்டை மகசூல் எடுத்தவர்தான். இந்த வருஷம் 40 மூட்டை மகசூல்ங்கிறதே குறைவானதுதான். கொஞ்சம்கூட மழை பாதிப்பு இல்லாம இருந்திருந்தா இவருக்கு மட்டுமில்லை, எங்களுக்கும்கூட இந்த வருஷம் 45 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கும். இதில் அதிசயம் ஒண்ணுமில்லை. ஆனா, அரசியலுக்காக இப்படியெல்லாம் கிளப்பிவிட்டு பூதாகரப்படுத்துறாங்க’’ என்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய திருவையாறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுகுமாறன், ‘‘ஒருவேளை இது உண்மையாக இருந்தால், அவரை எல்லா விவசாயிகளின் நிலங்களுக்கும் அழைத்துச் சென்று நாற்று நடவு செய்யலாமே. எங்கள் பகுதியில் உள்ள பத்து விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து ஸ்டாலினுக்கு விமான டிக்கெட் எடுத்துத் தர தயாராக இருக்கிறோம்.  முற்போக்கு, மூட நம்பிக்கை ஒழிப்பு என்றெல்லாம் பேசி வளர்ந்த திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்தவர்கள், அறிவியல்பூர்வமான இது போன்ற விஷயங்களில் எல்லாம் கைராசி என்றெல்லாம் கூறி அரசியல் செய்வது அபத்தமானது, கேலிக்கூத்தானது. இதை உடனடியாக ஸ்டாலினே அழைத்துக் கண்டிக்க வேண்டும். இதையெல்லாம் அனுமதித்தால், விவசாய பல்கலைக்கழகமே... தமிழகத்தின் சுபாஷ் பாலேக்கரே... இளைய நம்மாழ்வாரே என்றுகூட தேர்தல் சமயத்தில் தி.மு.க-வினர் பிரசாரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

40 மூட்டை என்ன, 60 மூட்டைக்கும் மேல் மகசூல் எடுத்த சாதனை விவசாயிகளும் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் பல தொழில்நுட்பக் காரணங்கள் இருக்கின்றன. இந்த வயலில் 40 மூட்டை விளைந்ததற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதைபோல அறிவியல் விஷயத்தை அற்பக் காரணங்களுக்காகப் பயன்படுத்தி, விவசாயிகளின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது’’ என கொந்தளித்தார்.

இப்படில்லாம் இருக்கா?

-கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick